மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத்தப்படும் பா.ஜ.க. அரசு, இந்த 5 ஆண்டு ஆட்சிக்குள் எப்படியாவது ஆர்.எஸ்.எஸ். முக்கிய கொள்கைகளை செயற்படுத்திவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது!
கண்ணுக்குப் பளிச்சென்று பட முடியாதபடி, சர்க்கரைப் பூச்சுடன் அந்த விஷ உருண்டைகள் கல்வித் துறையில் புகுத்தப்படுகின்றன; ஏனெனில் அதுதான் அவர்களது இலக்கு. எனவே இதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
1. நேரிடையாகவே சமஸ்கிருத திணிப்பு.
2. ஆர்.எஸ்.எஸ். கார்டுகளை வைத்திருப்போரே மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்படுதல்.
3. கல்வியை காவிமயமாக்கிடும் வகையில் பாட திட்டங்களை மாற்றிட NCERT போன்ற நிறுவனங்கள் Film and Television Institute of India (FTII) போன்றவைகளுக்கு வரலாற்று ஆவணத் துறை போன்ற பலவற்றிற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையே தலைவர்களாக நியமித்து, அதை அவர்கள் கண்விடல்!
4. மாநிலங்களே இருக்காமல் மத்தியில் ஒற்றை ஆட்சிமுறைதான் எங்கள் கொள்கை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கொள்கை வகுத்த கோல்வால்கரின் முடிவு (ஆதாரம்: Bunch of Thoughts) மாநிலங்களின் அதிகாரத்தை கூட்டாட்சித் (Federal) தத்துவத்தை அழித்தல் என்பதற்கொப்ப இப்போது, அகில இந்திய கல்வி சர்வீஸ் என்ற ஒரு புதுக்கரடியை கல்வித் துறையில் நுழைத்து, மாநில அரசுகளுக்குள்ள கல்வி அதிகார உரிமைகளைப் பறிப்பதோடு,- ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல. ஆர்.எஸ்.எஸ். மயமாக்க அவர்கள் சார்பு உள்ளவர்களை முக்கிய பல்கலைக் கழகங்கள், பள்ளிக் கல்வி, தொழிற்கல்வி எல்லாத் துறைகளிலும் நுழைக்கத் தீவிரமாக திட்டம் தீட்டி – அதை TRS சுப்ரமணியம் என்ற ஒரு பார்ப்பனர் (இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசின் அதிகாரி) தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதில், தகுதி, திறமை அடிப்படையில் அகில இந்தியாவிற்கும் பொருந்தக் கூடிய வகையில் நியமனங்கள் கல்வித் துறையில் ஏற்பட,
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்று மத்திய அரசிடமே இனி கல்வி நியமனங்கள் இருக்கும், மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் வகையில் Indian Educational Service (I.E.S.) அய்.இ.எஸ். உண்டாக்கி, பிற மாநிலத்தவரையும், நம் மொழி, பண்பாடு அறியாதவர்களை, நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கும் கதைபோல செய்யத் திட்டமிட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டு, ஓசையின்றி அவற்றைச் செயல்படுத்தவும் முனைப்பாக உள்ளனர்.
இதனை அனைவரும் முளையிலேயே கிள்ளி எறிய பெருங்குரல் எழுப்பி, இம்முயற்சியை முறியடிக்க முன் வர வேண்டும்
இல்லாவிட்டால் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக, நமது உரிமைகள், மொழி- பண்பாட்டு விழுமியங்கள் சமஸ்கிருத – ஆரிய கலாச்சாரத்தால் விழுங்கப்பட்டு, ஏப்பம் விடும் நிலை ஏற்பட்டு விடும்!
30.5.2010இல் கூடிய திராவிடர் கழக தலைமைச் செயற்குழு இதனை தீர்மானமாக்கி சுட்டிக் காட்டியுள்ளது!
மாநிலத்தில் உள்ள அரசுகள் – குறிப்பாக தமிழ்நாடு அரசும், முக்கிய பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அமர்ந்து தமது ஜனநாயகக் கடமை பூண்டுள்ள திமுகவும், மற்ற மாநில உரிமைகளில் அக்கறையும், கவலையும் கொண்டுள்ள முற்போக்காளர் _- கட்சிகள் _- அமைப்புகள் அத்தனையும், ஒருங்கிணைந்து ஒன்று சேர்த்து குரல் எழுப்பி, இத்திட்டத்-தினை விரட்டி அடிக்க வேண்டும்.
முன்பு – நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, எவ்வித முன் அறிவிப்பு – விவாதம் ஏதுமின்றி – பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
அகில இந்திய நுழைவுத் தேர்வும், அகில இந்திய கல்வி சர்வீசும் இரண்டையும், சமஸ்கிருதத் திணிப்பு பா.ஜ.க. ஆட்சியினர் திரிசூலமாக்கி, பிற மக்களின் உரிமைகளை குத்திக் கிழித்தெறிய முற்படுகின்றனர்!
முன்பு ஆச்சாரியார் 1952இல் கொணர்ந்த குலக் கல்வித் திட்டத்தைவிட மிகப் பெரிய ஆபத்தினை விளைவிக்க கூடியவை மேற்காட்டிய இரண்டு திட்டங்களும்.
எனவே, எச்சரிக்கை செய்கிறோம்! எதிர்ப்புகளைக் குவியுங்கள்; இத்திட்டங்-களை விரட்டி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்-பட்ட, மலைவாழ் பழங்குடியினர், சிறுபான்மையினரின் கல்வி, உத்தியோக உரிமைகளைப் பாதுகாக்க முன் வருவோமாக!
இன்றேல்
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் 435)
இதன் பொருள்: குற்றம் நேர்வதற்கு முன் தன்னைக் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கையானது, தீ முன் வைக்கப்பட்ட வைக்கோல் குவியல் எப்படி எரிந்து அழிந்து விடுமோ, அப்படியே அழிந்து போய்விடும்.
கி.வீரமணி,
ஆசிரியர்