திராவிடர்களின் இழிவு களைந்தெறியப் பாடுபடும் நமது கழகம், அந்த இழிவுகளுக்குப் பெரும் பாதுகாப்பாக இருக்கும் மதம் அடியோடு ஒழிய வேண்டும் என்று அறை கூவுகிறது. இப்படி நாம் மதம் ஒழிய வேண்டும் என்று கூறினால், அந்த மதக் குட்டையில் அமிழ்ந்து கிடந்து உழலும் திராவிடர்களில் ஒரு சிலர் கோபப்படுவானேன்? மதத்தைக் குறை கூறும்போது ஒரு முஸ்லிமுக்குக் கோபம் வருவதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால் அவர்களது மதத்தில் மேன்மையான தன்மைகள் இருக்கின்றன. அதை அனுபவித்து வரும் முஸ்லிமுக்குக் கோபம் வருவதானால், நியாயம் என ஒப்புக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் இந்துவானால் அவர் கதி என்ன ஆகும்?
கீழ் ஜாதியாகத்தானே இந்து மதத்தில் சேர முடியும்! ஆகவே, தனக்கு மேன்மை தரும் தன் மதத்தில் முஸ்லிம் ஒருவர் பற்றுதல் கொண்டிருப்பது நியாயம்தான்.
ஆனால், அப்பேர்ப்பட்ட மத வெறி நமக்கு ஏன் என்று கேட்கிறேன். நம்மைச், சூத்திரர்கள் -_ தேவடியாள் பிள்ளைகள் என்று இழிவுபடுத்தும், இந்து மதம் அடியோடு தொலைய வேண்டும் என்று கூறினால், அப்பட்டங்களைப் பெற்றுள்ள நமக்குக் கோபம் வருவதேன்? அந்த அவமானப் பட்டங்களை மேலும் நிலை நிறுத்திக் கொள்ளவா? இந்து மதம் போகுதே என்று நாம் ஏன் வேதனைப்பட வேண்டும்? பார்ப்பான் வேண்டுமானால் வேதனைப்படலாம். இந்து மதம் போகுதே என்று. ஆனால் அம் மதத்தில் இழித்துரைக்கப்பட்ட ஒரு சூத்திரன் வேதனைப்படுவதா? இது எவ்வளவு மானக்கேடான சங்கதி? சிந்தித்துப் பாருங்கள்.
பெரிய கோம்பை நாய் போன்றது நமக்கு இந்து மதம்; வேட்டை நாய் போன்றது சாஸ்திரங்கள்; கடவுள்கள் சோனங்கி நாய் போன்றது இந்த மூன்று நாய்களும் நம்மை முன்னேற விடாமல் காத்து நிற்கின்றன. இந்த நாய்களை ஒழித்தால்தான் நாம் முன்னேற முடியும். அவற்றை ஒழிப்பதுதான் நமது கடமையாகும்.
பார்ப்பான் குறளைக் கைக்கொள்ள மாட்டான். இராமலிங்கசாமியைப் போற்ற மாட்டான். ஆனால், நம்மவர்களோ இராமாயணத்தைப் போற்றுவார்கள்! அதைக் காலட்சேப மாகக் கேட்பார்கள்! இராமனைக் கடவுள் என்று துதி பாடுவர்! கீதையைப் போற்றுவார்கள்! பாரதத்தைப் படித்து பக்திப் பரவசமாகி விடுவார்கள்! இம்மாதிரியான உணர்ச்சியை விரைவில் நாம் போக்கிவிட முடியுமா? சிந்தியுங்கள். எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறதென்று எண்ணிப் பாருங்கள்.
நமக்கு இழிவு தரும் ஆதாரங்கள் அத்தனையும் ஒழிய வேண்டும் என்று கூறினால், இவர் என்னவோ சாதிக்கிறார் என்றல்லவோ நினைத்தோம்; கோவிலையும், சாமியையும் அல்லவா திட்டுகிறார் என்று நம்மவர்களே முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் ஏன் திட்டு கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டும். ஆனால், அதை ஏன் எண்ணுவதில்லை. இவ்வளவு நாள் பாடுபட்டும் போதிய பலனைக் காணவில்லையே!
செய்திப் பத்திரிகையைப் பார்த்தால், இன்றைய நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் தினசரி வெளியாகும் சுமார் 60 செய்திகளில், 30 சங்கதிகள் வெறும் இராமாயணக் காலட்சேபம், பகவத் கீதை, பாரதம், பெரிய புராணம் போன்ற புராணக் குப்பை நிகழ்ச்சிகளாக இருக்கின்றனவே தவிர, நம்மவருக்கு என்று என்ன இருக்கிறது? நம்மவர்கள் பெரிய புராணத்தைப் பிரசாரம் செய்யக் கிளம்பி விடுகிறார்களே ஒழிய, குறளைத் தொட மாட்டேன் என்கிறார்களே, குறளைப் படித்தால் அவன் கருப்புச் சட்டைக்காரனாகி விடுவான். அவ்வளவு கேவலமான தன்மைகள் இன்று இருந்து வருகின்றன.
ஆகவே, தோழர்களே, நமது இழிவுக்கும், பின் நிலைமைக்கும் அடிப்படைக் காரணங்களாக இருக்கும் மத – கடவுள் காரியங்களும், சமுதாயத்தில் நிலவிவரும் மூட நம்பிக்கைகள் அத்தனையும் வெறுக்கப்பட வேண்டும். பெண்களுக்கு கோயில் பைத்தியம் அடியோடு ஒழிய வேண்டும். இராமாயணப் பாராயணங்கள் கேட்பதை விட்டொழிக்க வேண்டும். இவற்றைப் பெரியவர்கள் விட்டுவிட்டால்தான் அவர்களது குழந்தைகளும் விட்டு விடுவார்கள்.
இராமாயண விழாக்களிலும் மற்ற கடவுள் தன்மை திருவிழாக்களிலும் பெரிய தலைவர்கள் எல்லாம் ஈடுபாடு கொண்டிருப்பது மிக அக்கிரமமான செயலாகும். சர்க்கார் அதிகாரத்திலிருப்பவர்களே இராமாயணம் படிப்பதுதான் கல்வி என்று கூறும் அளவுக்கு இன்று நம் நாடு அவல நிலைமை-யடைந்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் இவ்வளவு தூரம் எதிர்ப்புப் பிரச்சாரம் நடந்தும் நமக்குப் போதுமான வெற்றி கிடைக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் நம்மவர்களின் உணர்ச்சியில் இன்னும் இழிவு தட்டவில்லை என்பது தான்.
இந்த நாட்டுக்கு உரிமையாளர்கள் நாம்; இந்நாட்டை ஆண்டவர்கள் நாம்; அப்பேர்ப்பட்ட மக்கள் இன்று ஆரியர்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆரியர்கள் புகுத்திய கடவுள், சாமி, கோயில், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றால் தான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரியர்கள் போர் செய்து திராவிடர்களை வென்று விடவில்லை – வெல்லவும் முடியாது. ஆனால், ஆரிய கலாசாரத்தை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர். அதுலிருந்து முளைத்ததுதான் இந்த கீழ் ஜாதி – மேல் ஜாதி யாகும். மதத்திலே, கடவுள் தன்மையிலே, தத்துவத்திலே நம்மை வென்று விட்டனர். அதிலிருந்துதான் இப்போது நாம் மீட்சியடைய வேண்டியிருக்கிறது. பார்ப் பனியத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்.
கோயிலுக்குப் போவதை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். நெற்றிக்குறியிடுவதையும் விட வேண்டும். ஆரியப் பண்பாட்டின் அறிகுறி எதுவும் தெரியாதபடி ஆரியப் பெயர்களையும் ஒழித்து விட வேண்டும்.
மார்ச் 18, 19 ஆகிய நாள்களில் சென்னை மாவட்ட மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை 23 மற்றும் 24.3.1950)