வாழச் சிறந்த வான்கூவர்!

பிப்ரவரி 16-28

கனடாவின் மேற்கு எல்லையில் உள்ள நகரம் வான்கூவர். இந்த நகரத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.மிகவும் முக்கியமானது மக்கள் வாழ்வதற்கு உலகிலேயே மிகச் சிறந்த நகரங்களிலே இதையும் ஒன்றாகத் தேர்ந்-தெடுத்துள்ளனர். ஏன் என்பது அங்கு சென்று பார்த்ததும் தான் விளங்கிற்று.

ஒரு நாள்தான் இருந்தது. அதனால் எங்கள் நிலையை ஒரு வாடகைக் கார் ஓட்டுநரிடம்  சொன்னோம். அவரும் நான்கு மணி நேரத்தில் முக்கியமான அனைத்தையும் காண்பித்தார்!

மிகவும் தூய்மை. பசுமையும், மலர்களும் நிறைந்த தோட்டங்கள். எங்கிருந்து பார்த்தாலும் அருகேயே மலையும் உண்டு, கடலும் உண்டு. உலகிலேயே காலையில் மலை மீது  பனி மலையில் சறுக்கி விளையாடி விட்டு, மாலையிலே கடலில் நீந்தி விளையாடக் கூடிய இடம் இது ! எல்லாம் இருபது ,முப்பது மைல் தொலைவில் உள்ளன. போக்கு வரத்து சாலைகள், படகு,

ஹெலிகாப்டர், கடலில் இருந்து தண்ணீரில் பறக்கும் சிறு விமானங்கள் என்று அனைத்தும் உண்டு.
கடலை ஒட்டி ஆயிரம் ஏக்கரில் பெரிய பூங்கா! ஸ்டான்லி பூங்கா என்று பெயர். குழந்தைகள் சறுக்கி விளையாடுவது, இளைஞர்களின் பல்வேறு விளையாட்டுக்-களுக்கு இடம், முதியோர் நடை, ஓட முடிந்தவர்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள், ஆக உடல் நலம் பேணுவதில் எவ்வளவு வகையுண்டோ அனைத்தும் இங்கே காணலாம். 5 லட்சம் மரங்கள்! பசுமையான, தூய்மையான புல் வெளிகள், நடை பாதைகள். மிதி வண்டி ஓட்டுபவர்கள். மகிழ்ச்சி பொங்குவதைப் பார்த்துக் கொண்டே யிருக்கலாம். இவ்வளவு பெரிய பூங்கா ஒரு நகரத்திலே இருப்பது இங்கு தான் என்கின்றனர்.

இந்த ஒரு நகரத்திலேயே இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா என்று அனைத்தையும் பார்த்து விடலாம். பஞ்சாபி மார்க்கெட் எனும் இடத்திலே வடக்கிந்தியா அப்படியே உள்ளது. பஞ்சாபியர் நீண்ட காலமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்திலே, அதுவும் வேன்கூவரில் வேறூன்றி வாழ்ந்து, அரசியலிலும் கொடி கட்டிப் பறக்கின்றனர். அதே மதிரி பல சீனர்கள். கட்டிடங்களில் இங்கிலாந்தையும், பிரான்சையும் பார்க்கலாம். இங்கே தான் ஆங்கிலம் பேசுகின்றவர்களை விட சீன, பஞ்சாபி, கொரியன், வியட்நாம் என்று மற்ற மொழி பேசுபவர்கள் மிகுந்துள்ளனர்! ஆம், பல தமிழர்களும் உள்ளனர்! பிரஞ்சுக் காரர்கள் அவ்வளவாக இல்லையென்றாலும் கனடா முழுவதும் பிரெஞ்சு ஆளும் மொழிகளில் ஒன்று என்பதால் எங்கும் பிரெஞ்சு நிறைந்திருக்கும். சீனர்களின், ஜப்பானியர்களின் பங்களிப்பு நிறையத் தெரிகின்றது.

பெருங்கடை வீதிகள் மற்ற நகரங்கள் போல் தான் பெயர் போனக் கடைகளால் நிறைந்துள்ளன. விளம்பரங்கள் எங்கும் போல், ஆனால் நாகரீகமாக உள்ளன.

மிகவும் அழகிய இடம் துறைமுகப் பகுதி! அழகாக வைத்துள்ளனர். துறைமுகம் பெரிய துறை முகங்களில் ஒன்று. பல கப்பல்கள் நிற்கின்றன. உல்லாசக் கப்பல்கள் நிறைந்-துள்ளன. அந்த உல்லாசக் கப்பல்கள் நிற்குமிடத்தில் ஒரு பெரிய அரங்கம் உள்ளது. அங்கு கடைகள் பல இருந்தாலும் மக்கள் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. “கனடா மீது பறக்கவும்” என்ற ஒரு நிகழ்ச்சி. அங்கே கனடாவின் பல சிறப்புக்களை திரைப்படமாகக் காட்டுகின்றனர். பின்னர் ஒரு சிறப்பான பெரிய உலக உருண்டை போன்ற அரங்கம். அங்கே எப்படியென்றால் ஏதோ ராக்கெட்டில் பறக்கப் போவது போல நம்மைத் தனித்தனியாக அமரவைத்துச் சிறப்பான அடைப்புகளில் உடல், கால்களை அடைத்து விடுவார்கள்.

சிறப்பான மூன்று தளக் கண்ணாடி அணிந்து கொள்வோம். விமானத்தில் பறப்பது போல மேலும் கீழும் நம் இருக்கையைச் சரியாக அசைப்பார்கள். நீர்வீழ்ச்சி மேல்பறக்கும்போது நம் மீது நீர்த்திவலைகள் விழும். சத்தமும் அப்படியே கேட்கும். காடுகள், மலைகள், மலைகளின் நடுவே அப்படியே ஆற்றின் மீது பறப்போம்!  பூந்தோட்டங்கள், அழகிய இடங்கள் கனடா முழுவதும் பறந்து தொடுவது போல இருக்கும். பனி மலையில் குளிர் காற்றில் செல்வதும், நாமே பனியில் சறுக்குவது போலவும் அப்படியே நிகழ்வது போல இருக்கும். கனடாவின் கிழக்கே இருந்து மேற்காக 3700 மைல் தொலைவில் உள்ள அத்துனை அருமையையும் அப்படியே எட்டே மணித்துளிகளில் அனுபவித்து விட்டோம்.

அங்கிருந்து அமெரிக்காவின் அய்ம்பது மாநிலங்களையும் பார்த்து விட வேண்டும் என்பதை நிறைவு செய்ய அலாஸ்காவிற்கு உல்லாசக் கப்பலில் ஏறினோம். ஓராண்டிற்கு முன்னரே திட்டமிட்ட பயணம். மகன் குமார், மருமகள் வினயா மற்றும் அவரது அக்காள், தாய், தந்தை உடன் வந்தனர். மகள் கனிமொழி, மருமகன் அங்கிராசு, பெயர்த்திகள் அமைதி, ஆவணி உடன் வருவதாகத் திட்டம். திடீரென்று சம்பந்தி, அங்கியின் அப்பா மறைவுற்றதால் அவர்கள் இந்தியா செல்ல நேரிட்டது. அனைவர்க்கும் பெரிய ஏமாற்றம்!
அந்த ஏமாற்றத்தை அலாஸ்கா காட்சிகள் சரி செய்தன!
சந்திப்போம்! ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *