மாற்றுத் திறனாளிகளுக்கான மவுஸ் – கண்டுபிடிப்பு கூகுள் கண்காட்சிக்குத் தேர்வு!

அக்டோபர் 01-15

உலகமே வியப்புடன் உற்று நோக்குகிறது.   16 வயதுதான் ஆகிறது, அதற்குள் ஆச்சரியமான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி, உலகளவிலான இளம் விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார் இவர். நிஷாந்த் குமார் கண்டுபிடித்துள்ள, மூச்சுக் காற்றால் இயங்கும் கம்ப்யூட்டர் மவுஸ், கூகுள் அறிவியல் கண்காட்சி 2015_க்கான போட்டியில் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மவுஸ் போலியோ மற்றும் கைகள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிஷாந்த் செய்தியாளரிடம் பேசுகையில்,

சிறு வயதிலிருந்தே அறிவியல் சம்பந்தமான புத்தகங்களையும் விஞ்ஞானிகள் குறித்த செய்திகளையும்தான் அதிகம் விரும்பிப் படிப்பேன். இந்த ஆர்வம் நாளடைவில் அதிகரித்ததே தவிர, குறையவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் பள்ளியில் ரோபோடிக்ஸ் பயிற்சி கொடுத்தார்கள். அதில் சேர்ந்தேன். அந்தப் பயிற்சியின் மூலம் அன்றாடப் பணிகளுக்கு ரோபோக்கள் எப்படிப் பயன்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். அதன்பிறகு, சிறியளவிலான ரோபோக்களை அன்றாடத் தேவைகளுக்கேற்ப வடிவமைப்பது குறித்தே என் சிந்தனைகள் இருந்தன.

எங்கள் வீட்டின் அருகே மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. உள்ளே சென்று அங்கேயுள்ளவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருநாள் கிடைத்தது. அவர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவே சிரமப்படுவதையும், எந்தவொரு பணிக்கும் பிறரை சார்ந்திருப்பதையும் பார்த்தபோது வருத்தமாக இருந்தது. நான் கற்ற அறிவியலைப் பயன்படுத்தி, ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று தோன்றியது.

கம்ப்யூட்டர் இல்லாமல் இன்று எதுவும் இல்லை என்றாகிவிட்டது. முன்பெல்லாம் ஒருவர் படித்திருக்கிறாரா, இல்லையா என்று பார்ப்பார்கள். இன்று ஒருவருக்கு கம்ப்யூட்டரை கையாளத் தெரியுமா? இல்லையா என்றுதான் பார்க்கிறார்கள். அந்தளவுக்கு கம்ப்யூட்டர் நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது. கம்ப்யூட்டரை உபயோகிக்கும் அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்குத் திறமை இருந்தபோதிலும், உடல் குறைபாடுகளால் கணினியில் வேலை செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. குறிப்பாக மவுஸை கையாள்வது மிகவும் சிரமம். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது.

இது தொடர்பாகத் தேடிக் கொண்டிருந்தபோது, இணையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் ஹேண்ட் ஃப்ரீ மவுஸ் பற்றி தெரிந்தது. அதன் விலை 1000 அமெரிக்க டாலருக்கும் மேல் இருந்தது. இந்த மவுஸை குறைந்த விலையில் கொடுக்க முடிந்தால் நம் வீட்டின் அருகேயுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்குமே என்று, குறைந்த செலவில் ஹேண்ட் ஃப்ரீ மவுஸ் எப்படித் தயாரிப்பது என்று தேடினேன். தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு, சென்சார்களைப் பயன்படுத்தி, குறைந்த விலையிலான இந்த ஹேண்ட் ஃப்ரீ மவுஸை வடிவமைத்தேன் என்று, தான் கண்டுபிடித்த மவுஸைக் காட்டுகிறார் நிஷாந்த் குமார்.

கம்ப்யூட்டரில் எப்படி ப்ளூடுத் மவுஸ்களை இணைக்கின்றோமோ, அதேபோல் இவர் கண்டுபிடித்துள்ள மவுஸையும் எளிதாக இணைக்கலாம். மவுஸின் இன்னொரு பகுதியை தலையில் மாட்டி, மூச்சுக் காற்று, கண் சிமிட்டல்கள் மற்றும் தலை அசைவு மூலம், ஆப்டிக்கல் மவுஸைப் போன்றே, டபுள் க்ளிக், ரைட் க்ளிக், ஸ்குரோலிங், ஆரோ கீயை நகர்த்துவது உட்பட எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. ஏர்சென்சி டிவ் மைக்ரோபோன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மவுஸ், கேமரா மற்றும் சென்சர்களால் செயல்படுகிறது. ஹெட் கியர் மூலமாகவே கணினிப் பக்கங்களை ஆளுமை செய்கிறது. மைக்ரோபோனில் ஒவ்வொரு முறையும் உபயோகிப்பாளர் ஊதினால் அது பக்கங்களை க்ளிக் செய்யும் என்கிறார் நிஷாந்த் குமார்.

மாற்றுத் திறனாளிகளுக்காகவே பிரத்யோகமாக இந்த மவுஸ் தயாரிக்கப்-பட்டுள்ளது என்றாலும், மற்றவர்களும் இதனைப் பயன்படுத்தி கணினி சம்பந்தப்பட்ட பணிகளைச் சுலபமாகச் செய்யலாம்.

மேலும் அவர் கூறுகையில்

என் கண்டுபிடிப்பைப் பார்த்த நண்பர்கள் உலகளவில் நடத்தப்படும் கூகுள் அறிவியல் கண்காட்சி 2015 பற்றி சொன்னார்கள். அதற்கான போட்டியில் கலந்துகொண்டேன். நான் வடிவமைத்த ஹேண்ட் ஃப்ரீ மவுஸ் குறித்த முழு விவரங்களையும் கூகுள் அறிவியல் கண்காட்சி 2015 தளத்தில் பதிவிட்டேன். கடந்த மாதம் அவர்களிடம் இருந்து பதில் வந்தது. 13_18 வயது பிரிவில் பிராந்தியப் பிரிவு இறுதிப் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றுள்ளதாகச் சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து எனது கருவியை மேலும் மேம்படுத்தும் பணியில் இறங்கியுள்ளேன். எதிர்வரும் காலங்களில் இந்த ஹேண்ட் ஃப்ரீ மவுஸை வர்த்தக ரீதியில் வடிவமைக்க உள்ளேன்.

குறைந்த விலையில் இக்கருவியை மாற்றுத் திறனாளிகள் சந்தையில் பெற்றுப் பயன்படுத்தலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *