குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!

ஏப்ரல் 16-30

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.

அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.

காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.

காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?

கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.

புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.

சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.

நான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.

காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;

அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்?

வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை!

குஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.

காக்கை _ உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி.

காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.

– குயில், 15.5.1948

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *