2015ஆம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற நமது தமிழ்ப்-புத்தாண்டு – பொங்கல் விழா, பண்பாட்டுத் திருவிழா காடும் காடு சார்ந்த முல்லை நில வாழ்க்கையை நினைவூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
இதற்காக, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரங்களின் மேல் ஒரு குடிலும், அதைச் சென்றடைவதற்கான ஒரு தொங்கு பாலமும் அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடிலுக்குச் செல்லும் வழியில் முல்லை நிலச் சூழலை முழுமை செய்வதற்காக காடை, வான்கோழி, கிண்ணிக் கோழி, நாட்டுக்கோழி ஆகிய பறவையினங்களும், முயல் போன்ற விலங்கினங்களும் காட்சிக்கு வைக்கப்-பட்டிருந்தன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
ஓசை சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட காட்டுப் பறவைகள், விலங்குகள் ஆகியன பற்றிய உயிர்நிழல் ஒளிப்படக் கண்காட்சியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்துவைத்தார். மகளிர் சுய உதவிக் குழுவினரின் இயற்கை உணவுத் திருவிழாவும் இடம் பெற்றிருந்தன.
மற்ற இடங்களைப் போலல்லாமல் உரியடிக்கும் பானையில் ஜாதி என்று எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. வெற்றி பெறவேண்டுமானால் ஜாதியை உடைக்க வேண்டும்.
முதலில் நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஒயிலாட்டம் ஆடி கண்ணப்பர் ஒயிலாட்டக் குழு அனைவரையும் கவர்ந்தனர். அதைத்தொடர்ந்து அன்பு பகுத்தறிவு கலை இலக்கிய இசைக்குழு பகுத்தறிவு வணக்கப் பாடலுடன் தொல்லிசையை இசைத்து மக்களை மகிழ்வித்தனர்.
கவிஞர் கலிபூங்குன்றன் தமது அறிமுகவுரையில், திராவிடர் திருநாள் ஏன்? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக, திராவிடர்_திருநாள் – தமிழர் திருநாள் இரண்டும் ஒன்றுதான். திராவிடர் திருநாள் என்ற பெயர்தான் பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிரானது என்பதை அடையாளப்படுத்தக் கூடியது என்று கூறி விட்டு, அக்ராசனபதி, உபச்சாரம், ஜலம், தீர்த்தம், ஸ்நானம், சாதம் என்பன போன்ற ஏராளமான வட மொழியை நீக்கி தமிழைத் தமிழாக்கியது திராவிடர் இயக்கம்தான் என்பதை தமிழ்த் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேரா. சுப. வீரபாண்டியன், எது தமிழ்ப்புத்தாண்டு எனும் தலைப்பில் பேசினார்.
தன் சொந்தப் பணியோடு சேர்த்து சூழலியலைக் காக்க ஒரு லட்சம் மரங்களை நட்டு பல்வேறு விருதுகளையும் பெற்ற கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ம. யோகநாதனுக்கு தமிழர் தலைவர் பெரியார் விருதளித்துச் சிறப்பித்தார். தொடர்ந்து எழுத்தளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியும், தனது ஆசான் ஆ.திராவிடமணி படத்தைத் திறந்துவைத்தும், பெரியார் விருது வழங்கியும் சிறப்பித்த தமிழர் தலைவர் தமது உரையில் தமிழ்த் தேசியவாதிகளுக்குப் பாடம் எடுத்தார்.
திராவிடர்களுக்குத்தான் திருநாள் உண்டு. மற்றவர்களுக்கு பண்டிகைதான் என்று திராவிடர் திருநாளுக்கும், தமிழர் திருநாளுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய ஆசிரியர் அவர்கள், எந்த ஆண்டு உண்மையான தமிழ்ப்புத்தாண்டு மறுக்கப்பட்டதோ, அதிலிருந்து அடிக்கப்பட்ட பந்து எழுவது போல பெரியார் திடல் திராவிடர் திருநாளை நடத்துகிறது. 60 ஆண்டுகள் பிறந்த ஆபாசத்தையும் கூறி, இதுவா தரணி ஆண்ட தமிழனுக்குப் புத்தாண்டு? என்ற சுயமரியாதைக் கேள்வியை எழுப்பினார்.
தொடர்ந்து, பேராசிரியர் சிறப்புரை-யாற்றினார். பொதுவாகவே தமிழனுக்கு தமிழர் என்ற நினைவு இருப்பதில்லை. தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்று சொன்னால், மொழியுணர்வோடு சொரணையும் இனவுணர்வும் உள்ளவர்கள் என்றார். கம்பர், சேக்கிழார், பாரதி ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களின் மொழிப்பற்று எதற்குப் பயன்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார். மானத்தை விட்டுவிட்டு இவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? என்று கூறிவிட்டு, டாக்டர். அம்பேத்கர் மட்டும் இல்லாமல் போயிருந்தால், நாம் செத்துப் போயிருப்போம். காரணம், அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் உள்ள கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லையென்றால் என்று எண்ணிப்பாருங்கள் என்று சிந்திக்க வைத்தார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் புதுவை பாவாடைராயனின் கிராமிய கலைக்குழுவின் பம்பை ஆட்டம் தொடங்கியது
தென்றல் குழந்தைகள் மன்றம் சார்பில் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த சிறுமி வினோலியா எதிர்பாராத ஆச்சரியம் போல, ஏய் நல்லாயிருக்கா… உனக்கு நல்லாயிருக்கா… என்ற பகுத்தறிவுப் பாடலையும், எத்தனை முறைதான் எங்கக்கா வெட்கப்படுவா எங்கக்கா… என்ற பெண்ணுரிமைப் பாடலையும் பாடி சமூக அவலங்களை கண் முன்னே நிறுத்தி மனம் கசியச் செய்துவிட்டார்.
பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர் மஞ்சை வசந்தனின் அறிமுக உரைக்குப் பிறகு, பண்ணாராய்ச்சி வித்தகரின் படத்தைத் திறந்துவைத்த பேராசிரியர் மு.இளங்கோவன் இயக்கிய குடந்தை சுந்தரேசனாரின் ஆவணப் படம் வெளியிடப்பட்டது. முல்லை நில உயிர்ச்சூழல் என்ற தலைப்பில் ஓசை இளஞ்செழியன் உரையாற்றினார்.
திரைப்பட கலை இயக்குநராக சிறப்பாகச் செயல்படும் லால்குடி இளையராஜா, இளையோருக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மலர்வதி, பகுத்தறிவு பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்புரையாகவும், நிறைவுரை-யாகவும் தமிழர் தலைவர் உரையாற்றினார்.
மூன்றாம் நாள்
இலட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ். ராஜேந்திரனின் உருவப் படத்தை திரைப்பட இயக்குநரும், சுயமரியாதைக் குடும்பத்தவருமான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் திறந்து வைத்து, அவரைப்பற்றிய அரிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, ஊடகவியலாளர் கோவி. லெனின் திராவிடர் திருநாள் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். வெள்ளை ஆடைக்குப் பதிலாக கறுப்பு ஆடை யணிந்து வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் பேராயர் எஸ்றா. சற்குணம் அவர்கள்.
ஊடகவியலாளர் ப. ரகுமான், இசையமைப்பாளர் டி. இமான், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் முறைப்படி பெரியார் விருது வழங்கினார்.
கருத்துரை, பெரியார் விருது, வாழ்த்துரை முடிந்து தமிழர் தலைவர் தம் நிறைவுரையில், துணிந்தவனுக்குத் துக்கமில்லை என்பது பழமொழி. துணிந்தவனுக்குத் தோல்வியில்லை என்பது புதுமொழி என்று பழமையைப் புதுப்பித்தார். மாட்டுப் பொங்கலைப்பற்றிச் சொல்லும்போது, ஏன் எருமை மாட்டைச் சொல்ல மறுக்கிறோம் என்று தர்க்க ரீதியிலான ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு மனுதர்மத்தி-லிருந்தே ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்.
மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள் என்று ஒரு வரையறையுடன் தனது உரையை நிறைவு செய்தார்.