பண்பாட்டின் வரலாறு

ஜனவரி 16-31

பண்பாட்டின் வரலாறு

-ச.தீபிகா, தொல்லியல்துறை ஆய்வு மாணவர்

1920ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் பற்றிய கண்டுபிடிப்பு, இந்தியத் துணைக் கண்டத்துத்  தொல்பொருள் ஆய்வுகளின் ஒரு மிகமிக முக்கியமான பகுதி என்று போற்றப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல்,  டொலாவிரா, ராக்கிகர் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகள் இக்கலாச்சாரத்தில் பல்வேறுபட்ட ஆர்வம் அளிக்கும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.

1947 இல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது, அதுவரை அறியப்பட்டிருந்த ஹரப்பா அகழ்வுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களும் இந்தியப் பகுதிகளில் இல்லாமல் பாகிஸ்தான் பகுதிகளிலேயே அமைந்திருந்தன.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுக்கான அரசுத் துறையும், சில குறிப்பிட்ட பல்கலைக்-கழகங்களும் மற்றும் எண்ணற்ற கல்வியாளர்களும் மேற்கொண்ட பல்வேறுபட்ட அகழாய்வுகளின் காரணமாக,  இந்த மாபெரும் கலாச்சாரம் நிலவியதாகக் காணப்பட்ட இடங்கள் இந்திய நிலப்பகுதி எல்லை வரை விரிவடைந்திருந்தன.

இந்திய நிலப்பகுதியில் சற்றேறக்குறைய இத்தகைய 1000 இடங்கள் இருப்பதாகக் கண்டு அறிவிக்கப்பட்டது. இவற்றில் அதிக எண்ணிக்கையிலான இடங்கள் இந்தியாவின் கக்கார் _ -ஹர்கா நதிப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் ஹரியானாவில் 350 இடங்களும், குஜராத்தில் 230 இடங்களும், பஞ்சாபில் 147 இடங்களும், உத்தரப்பிரதேசத்தில் 133 இடங்களும் ராஜஸ்தானில் 75 இடங்களும் இருந்தன.

குறிப்பு: கக்கார் (Ghaggar) _ ஹக்ரா (Hakra) நதிப் பள்ளத்தாக்கு : கக்கார் நதியானது இமயமலைகளின் அடிவாரத்தில் தோன்றி, இந்தியாவின் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் வழியாக ஓடி, பாகிஸ்தானைச் சேர்ந்த பகல்பூர் மண்டல  பிராந்தியத்தில் நுழைகிறது.

பாகிஸ்தானில் நுழையும் இந்த கக்கார் நதி அதன் பின்னர் ஹக்ரா என்று அழைக்கப்படுகிறது. இந்த கக்கார் நதி இப்போது நீரின்றி வறண்டு போனதாக இருந்தாலும், கடந்த காலத்தில்  குறிப்பாக, ஹரப்பா நாகரிகம் தொடங்கி உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்திருந்த இடங்கள் இந்த நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னொரு காலத்தில் இருந்த சரஸ்வதி நதிதான் இந்த கக்கார் நதி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ரிக் வேதத்தின் சரஸ்வதி நதி அடையாளங்கள் இதனுடன் பெரிதும் பொருந்தவில்லை என்பதும், சிந்துவெளி நாகரிகத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் வேதகாலம் தொடங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெயர்ச்சொல் காரணம் :  இந்த நாகரிகத்தின் பண்புகள் பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ளும் முன்பாக,  இந்த நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என்றோ  சிந்து சமவெளி நாகரிகம் என்றோ அழைக்கப்பட்டது என்பது பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

1920_-21ஆம் ஆண்டில் பண்டிட் தயாராம் சஹானி, ஹரப்பா என்ற இடத்தில் மேற்கொண்ட அகழாய்வில் முதன் முதலாக இந்த நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வுகளில் எந்த இடத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அந்த இடத்தின் பெயராலேயே அந்த அகழாய்வுக்குப் பெயரிடும் வழக்கத்தைப் பின்பற்றி, இந்த நாகரிகத்திற்கு ஹரப்பா நாகரிகம் என்று பெயரிடப்பட்டது.

இந்த நாகரிகம் பற்றி மேற்கொள்ளப்பட்ட  அகழ்வுகள், ஆய்வுகளில் இந்த நாகரிகம் சிந்து நதியைச் சுற்றி நிலவி வந்திருந்தது என அடையாளம் காணப்பட்டது. மொகஞ்சதாரோவும் சிந்து நாகரிகமும் என்ற தலைப்பில் தனது மொகஞ்சதாரோ அகழாய்வு அறிக்கையை ஜான் மார்ஷல் என்பவர் வெளியிட்டார்.

இப்போது இந்த நாகரிகம் சிந்து சமவெளியையும் தாண்டி வெகுதூரம் வரை பரவியிருந்தது என்று காணப்பட்டாலும், சிந்து சமவெளி நாகரிகம் என்ற பெயரால் மட்டுமே அகழாய்வு பற்றிய நூல்களும் அறிக்கைகளும் அறியப்பட்டுள்ளன.

ஹரப்பா நாகரிகம் அல்லது சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இக் கலாச்சாரம் மூன்று முக்கியக் கலாச்சார நிலைகளைக் கொண்டிருப்பதைக் கவனிப்பது அவசியமானது.

1. தொடக்ககால ஹரப்பா நாகரிகம்

2. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம்

3. பிற்கால ஹரப்பா நாகரிகம்

சிந்து மற்றும் பலுசிஸ்தான் வட்டாரத்தில் நிலவியதாக அடையாளம் காணப்பட்ட தொடக்ககால ஹரப்பா நாகரிகம் முக்கியமாக பானைகள் வடிவமைக்கப்பட்ட அக்கால ஒழுங்குமுறையை அடிப்படையாகக் கொண்டது. இக்கலாச்சாரம் நிலவியதாகக் கருதப்படும் பல இடங்கள் இன்றைய ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் உள்ளன.

என்றாலும், மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் மாநிலத்து கலிபங்கான் என்ற பகுதியில் இருக்கிறது. கலிபங்கானில் நிலவிய இந்தத் தொடக்க கால ஹரப்பா நாகரிகம் கி.மு. 3000_-2500 காலத்தைச் சேர்ந்தது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்ககால ஹரப்பா நாகரிகப் பண்புகளின் சில சிறப்பு அம்சங்கள்:

1. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகத்தின் தர அளவு  4:2:1 என்றிருக்கும் நிலையில், தொடக்ககால ஹரப்பா  குடியிருப்புகள் 3:2:1 (30 ஜ் 20 ஜ் 10 செ.மீ.) என்ற அளவிலான செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.

2. அதே அளவிலான மண் செங்கற்களால் வீடுகளும் கட்டப்பட்டிருந்தன; வடிகால்கள் கட்டுவதற்கு சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

3. 1.5 மீட்டர் அகலம் கொண்ட கிழக்கு – மேற்காக அமைந்த சாலைகள்.

4. அங்கு அடுப்புகள் இருந்தன; தானியங்கள் குழிகளில் சேமிக்கப்பட்டன.

5.  செம்பு, இரும்பு, எலும்பிலான கருவிகளையும், சவக்காரக் கட்டிகளையும், கார்நெலியன் ஓடுகளையும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

6.  ஆறு மாறுபட்ட வெவ்வேறு வடிவிலான களிமண் கட்டிடங்கள் தொடக்ககால ஹரப்பா நாகரிகத்தின் சிறப்புப் பண்பாட்டைத் தெரிவிப்பதாக உள்ளன.

முதிர்வடைந்த, பண்பட்ட ஹரப்பா நாகரிகம் (கி.மு.2600–_2050) ஹரப்பா நாகரிகம் அல்லது சிந்து சமவெளி நாகரிகம் என்ற சொல்லாடல்கள் பெரும்பாலும் முதிர்வடைந்த அல்லது பண்பட்ட ஹரப்பா நாகரிகத்தைக் குறிப்பிடுவதற்கே பயன்-படுத்தப்பட்டன.

தொடக்க கால ஹரப்பா நாகரிகத்தை விட இந்த முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம் விரைந்த ஒரு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காட்டுகிறது. 3 ஆவது தொடக்க கால சுமேரிய நாகரிகம் மற்றும்  பழைய எகிப்திய சாம்ராஜ்யத்தின் சமகாலத்தியது இந்த முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகம்.

தொடக்ககால ஹரப்பா நாகரிகத்தின் இறுதிக் காலகட்டத்தில், தீயினால் எரிக்கப்பட்டு அழிந்து போன பல குடியிருப்புகள்  பின்னர் மறுபடியும் உருவாக்கப்பட்டன. இந்தப் புதிய கட்டுமானங்கள் அனைத்தும் முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக கால கட்டுமானங்களைப் போல் ஓர் ஒழுங்கு முறையில் கட்டப்பட்டிருந்தன.

பெரிய நகரங்களும், கூட்டுக் குடியிருப்புகளும் உருவாக்கம் பெற்றன. மொகஞ்சதாரோ நகரத்தைப் போன்ற மிகப் பெரிய நகரங்களான கன்வேரிவாலா மற்றும்  ராகிகர்ஹி   என்ற இரு நகரங்களும் முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் உருவானவை ஆகும்.

காலிபங்கன், கோட் டிஜி, சந்தனவாலா ஜூடேர்ஜோ-தாரோ போன்ற சிறு நகரங்கள் பெருநகரங்களை அடுத்து அவை போலவே சிறிய அளவில் உருவாக்கப்பட்டன என்று தோன்றுகிறது. சிறப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இடங்களும் இருந்துள்ளன. ஒரு துறைமுக, வர்த்தக, உற்பத்தி நகரமாக லோதால் உருவாக்கப்பட்டதை இதற்கு எடுத்துக்-காட்டாகக் கூறலாம்.

ஒரே மாதிரியான உயர்தரம் கொண்ட பானைகள், நகைகள், முத்திரைகள் போன்றவை பொதுவாகக் காணப்படுபவையாக இருந்தன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிக காலத்தில் ஒரு இடத்துக் கலைப் பொருள்கள் அல்லது கட்டுமானத் திட்டங்கள் மற்ற இடங்களின் பொருள்கள் திட்டங்களில் இருந்து எளிதில் வேறுபடுத்திக் காண இயலாதபடி ஒன்று போலவே அமைந்திருந்தன. முதிர்வடைந்த ஹரப்பா நாகரிகத்தின் சில முக்கியமான பண்பாட்டு அம்சங்கள் மற்றும் லோதல் பற்றிய பதிவுகள் அடுத்த இதழில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *