எது தமிழ்த் திருமணம் – 7

நவம்பர் 01-15

இராமனுக்குச் சீதை தாலி கட்டிய பொண்டாட்டியா?

– சு.அறிவுக்கரசு

12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கம்பன் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ராமனின் கதையைப் பாடியுள்ளார். கம்பராமாயணம் 10,500 பாடல்கள் கொண்டது. ராமன் சீதையை மணந்து கொண்டதை ஒன்பது பாடல்களில் வடித்துள்ளார், (கடிமணப் படலம்) மணப் பந்தலில் சீதையும் ராமனும் இருத்தல், ஜனகன் சீதையைத் தாரை வார்த்துத் தருதல், அப்போது எழுந்த வாழ்த்து முழக்கங்கள், தேவர்கள் பூமாரி பொழிதல், பாணிக்கிரகணம் செய்தல், தீவலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல், பெரியோரை வணங்குதல், பலவகை மங்கல ஒலி எழுதல் என ஒன்பது பாடல்களும் ஒன்பது நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. தாலி கட்டியதுபற்றிப் பாடலே இல்லை. பாடல் பஞ்சமா? பத்தாயிரத்து அய்நூறு பாடல்களில் இடப்பற்றாக்குறையா? இல்லை, இல்லவே இல்லை. அப்படி ஒரு நிகழ்ச்சி நடை-பெறவில்லை. ஆகவே பாடப்படவில்லை.

வால்மீகியின் வடமொழி இராமா-யணத்திலும் தாலி கட்டியதாக இல்லை. ஆகவே கம்பனும் பாடவில்லை. எவ்வளவோ புளுகிப்பாடிய கம்பன், தாலியைத் தவிர்த்து-விட்டான். காரணம், மண்ணில் அந்தப் பழக்கம் நிலவவில்லை!

திருவிளையாடல் புராணம் என்பது சிவனின் 64 விளையாட்டுகளைக் கூறும் நூல். சிவன் இந்த விளையாட்டுகளை மதுரையில் மட்டுமே ஆடியிருக்கிறான். அவன் ஆடிய ஆட்டத்தைப் பாடியவர் இருவர். ஒருவர் பெரும்பற்றப் புலியூர்நம்பி. மற்றவர் பரஞ்சோதி முனிவர். நம்பி 13ஆம் நூற்றாண்டுக்காரர். பரஞ்சோதி 16ஆம் நூற்றாண்டுக்காரர்.

நம்பி பாடியவாறு சிவன்_தடாதகையின் திருமணம் வேதவிதிப்படி நடந்ததாகப் பாடல் 25இல் குறிக்கப்பட்டுள்ளது. வேறு விவரம் சடங்கு எதுவும் இல்லை. பார்ப்பனர் ஒருவரின் மகள் திருமணம் பாடல்கள் 5, 6, 7இல் வருகிறது, தாலி வரவில்லை. பாணிக்கிரகணம் மட்டுமே நடந்துள்ளது. இவர் எழுதிய 1753 பாடல்களில் ஓர் இடத்திலும்கூட தாலி கட்டியதுபற்றிய குறிப்பே கிடையாது.

16ஆம் நூற்றாண்டுக்காரரான பரஞ்சோதி பாடிய 3363 பாடல்களைக் கொண்ட புராணத்தில் சிவன்_தடாதகைத் திருமணத்தில் மங்கல நாணைக் கழுத்தில் பூட்டிக் கையைப் பிடித்தான் என்றிருக்கிறது. (பாடல்கள் 176_189). இந்த நூலில்கூட கடவுளின் திருமணத்தில்தான் தாலி கட்டியதுபற்றிய குறிப்பு வருகிறது. மனிதர் இருவர் திருமணம் பற்றிய பாடல்களில் அத்தகைய குறிப்பு கிடையாது. மனிதர்களிடையே அவ்வழக்கம் இல்லையோ!

எதை எழுதினாலும் கடவுளின் கவனத்திற்குப் போகாது என்பதால் கடவுளின் கல்யாணத்தில் மட்டும் தாலியைப் புகுத்தினரோ கச்சியப்பனும் பரஞ்சோதியும்? இருக்கலாம், மனிதர்களிடையே தாலி கட்டும் பழக்கம் இல்லாததால் பாடாமல் விட்டிருக்கலாம்.

இன்றைக்கும் நீலகிரி மலையில் வாழும் தொதவர், கோட்டர் இனமக்கள் தாலி கட்டுவது கிடையாது. படகர்களும் தாலி கட்டுவது இல்லை. ஆந்திரத்தில் கோதாவரிப் பகுதியில் இருக்கும் கோயிகளும் தாலி கட்டுவது கிடையாது. கஞ்சம், விசாகப்பட்டினம் மாவட்டத்து கொண்டா இனத்தவரும் அதன் கிளை ஜாதியான சவரர் என்பாரும் தாலிகட்டும் வழக்கம் இல்லாதவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் முதுவ இன மக்களிடையே இப்பழக்கம் இருந்ததில்லை. யாரையோ பார்த்து இடையில் தாலி கட்டத் தொடங்கினர்.

அப்படிக் கட்டிய பெண்கள் அகால மரணம் அடைந்தனராம். ஆகவே, இப்போது அச்சம் காரணமாக அப்பழக்கம் இல்லை. ஒரு மூடநம்பிக்கை மற்றொரு மூடநம்பிக்கையைத் தடுத்துவிட்டதோ? ஒட்டர், ஏனாதிகள், ஆந்திராவில் தாலி கட்டாதோர், செருமார், முக்குவர், பலியர், வலையர், புலையர், பறையர், நாயாடிகள், பனியர், மலக்கர், கரிம்பளர், மலையர், மலசர்காடர், வேட்டுவர், மாவிலோர், அருநடர் முதலிய மலையாளத்தவரும் தாலி கட்டுவதில்லை.

கன்னடர்களான காப்பிலியர், கொரகர், காடுகுறும்பர், மொபைர், கார்வி முதலியோர் தாலி கட்டும் பழக்கம் இல்லாதவர்கள். துளு பகுதியைச் சேர்ந்த பாணரர், ஒடாரி, ஆகியோரிடமும் இப்பழக்கம் இல்லை. ஆக திராவிட மொழிக் குடும்பத்து மக்களில் பெரும்பாலோர் இடையில் தாலி கட்டும் பழக்கம் புகுத்தப்படவில்லை. இவர்களைப் பழங்குடியினர் என ஒதுக்கலாம். ஆனால், பழங்குடியினர்தான் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் பாதிப்புக்கு ஆளாகாதவர்கள்; பலியாகாதவர்கள். பெருமைதானே!

கொங்குவேளாளர்களின் ஜாதிப்புரோகிதர் மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிறார். நம்பூதிரிப் பார்ப்பனரில் தந்தையே மகளுக்குத் தாலி கட்டுகிறார்.

ஈழவர், காணிகர் ஆகியோர் தாலிக்குப் பதில் மின்னு எனும் அணியை அணிகின்றனர். காப்பிலியர் கறுப்புக் கண்ணாடி வளையலை அணிகின்றனர். கொண்டா மக்கள் பித்தளைக் காதணி, குறவர்கள் கரிய மணியைக் கயிற்றில் கோத்துக் கட்டுதல், வெள்ளிக்காப்பு அணிவிக்கும் பழக்கம், பொட்டு எனும் அணி ஆந்திரத்தில் பரவலாக உள்ளது. மலையாள வாரியர்கள் பறைவடிவிலான மாத்ரா, வயநாட்டுச் செட்டிகள் தொடி, மலையாள வேட்டுவர் மோதிரம், அநுப்பக்கவுண்டர் கறுப்புக் கண்ணாடி வளையல் என்று பலரும் தாலிக்குப் பதில் பலவித அடையாளங்களைக் கட்டுவர். ஒரு பிரிவு ஒக்கிலியர் தாலி கட்டுவதில்லை.

தமிழ்நாட்டில் தாலி ஜாதிக்குத் தக்கவாறு மாறுகிறது. எனவே தாலியிலும் ஜாதி இருக்கிறது. தாலி தாழ்ந்துபட்ட தமிழர்க்கே மட்டும் திணிக்கப்பட்டுள்ளது.

தால் என்றால் நாக்கு. தாலி என்றால் நாக்கை உடைய வாய் எனப்பொருள். புவியின் அங்காந்த வாய் வடிவில் உள்ளது தாலி என்கிறார்கள். தாலி என்றால் ஒருவகை பனைக்குப் பெயர், பனங்குருத்தால் செய்யப்பட்ட தாலிக் கொழுந்தினை அணிந்து (சின்ன) கண்ணன் விளையாடினானாம். திவ்யப்பிரபந்தம் இதனை தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு எனக் குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் பனை ஓலைக் காதணியை அணிந்த மக்கள் அதனை நீக்கிப் பொன் அணியை(தோடு) அணிகிறார்கள். தோடு என்றாலும் ஓலையைக் குறிப்பதே. அதுபோல பனை ஓலை அணியாகத் தாலி இருந்துள்ளது. இன்றோ! செல்வச் செழிப்பைக் குறிக்கும் பொன் அணியாக, பொற்சங்கிலியாக மாற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறெல்லாம் மிகவும் விரிவாகத் தம் ஆராய்ச்சிக் கருத்தை வெளிப்படுத்திய டாக்டர் இராசமாணிக்கனார், தாலி பழந்தமிழர்க்-குரியதல்ல, 11ஆம் நூற்றாண்டில் பார்ப்பனரால் கடவுளின் மீது புகுத்திக் காண்பிக்கப்பட்டுப் படிப்படியாக மனிதர்க்கும் ஆக்கிவிட்டனர் என்பதை மறுக்க இயலாத தரவுகளோடு நிறுவினார். ம.பொ.சி. நிரம்பிய நூலின்றிப் போனதால் பின்னர் வாயைத் திறக்கவேயில்லை. எழுதுகோலையும் எடுக்கவில்லை. பாவம்!

பழந்திருமணங்களிலெல்லாம் நடத்திய பாணிக்கிரகணத்தைச் செய்வதற்கும் எதையெதையோ எழுதி வைத்துள்ளனர். மணப் பெண்ணின் வலக்கரம் தாமரை மொட்டுபோல அபிநயம் பிடித்திருக்க வேண்டுமாம். மணமகளின் கையைப் பிடிப்பவன் கட்டை விரலைப் பிடித்தால் ஆண் குழந்தை பிறக்குமாம். அதைத் தவிர்த்த மீதி நான்கு விரல்களைப் பிடித்தால் பெட்டைப் பிள்ளைகள் மட்டுமே பிறக்குமாம். என்ன வகை மூடநம்பிக்கை பாருங்கள்! விரலுக்கும் குழந்தைக்கும் என்ன தொடர்பு? விந்துக்குள் இருக்கும் குரோமோசோம்களின் சேர்க்கைத் தொடர்பானது ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறப்பது! இந்த அறிவியல் அறிவற்ற ஆரியர்களின் புளுகுச் சடங்கு இது!

மகளிர்பால் வணக்க மோம்பி
மைந்தர்கள் இன்பந்துய்க்குந்
தகுதியும் ஊடன் மாட்டுச்
சாருதற் கங்கி சான்றா
அகலமுந் தெரிக்கு நீதியாதரித்
தணங்கு பாத
நகுமுகத் திளையோன் பற்றி
நகைமணி யம்மியிட்டான்

என்று பேரூர்ப் புராணத்தில் கச்சியப்ப முனிவர் என்பார் 18ஆம் நூற்றாண்டில் பாடி வைத்துள்ளார். இல்வாழ்க்கையின் போது இருவருக்குள் ஊடல் ஏற்பட்டால் மனைவியின் காலையும் பிடிக்கவேண்டி நேரிடுமாம். அதற்கான ஒத்திகையாம் திருமணத்தில் அம்மி மிதித்தல் என்பது பொருள்! எப்படி இருக்கிறது?

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்னற

என்று அகநானூறு 86ஆம் பாடல் கூறியவாறு நெல்லும் அரும்பும் கலந்த நீரைத் தெளித்து வாழ்த்தும் வழக்கம் இருந்தது. இன்றோ! மஞ்சள் பூசிய அரிசியும் முல்லைப் பூவுமாகத் தலையில் போடுவதாக மாறியுள்ளது! வெறும் அரிசியை வாயில் போட்டு மென்றுவிடக்கூடும் என்ற அய்யத்தால் மஞ்சளைத் தடவி விட்டார்களோ?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *