ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை
தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை? – 4
– கை.அறிவழகன்
சரி, இப்படியான திரைப்படங்கள் என்கிற கருத்துருவாக்கம் ஏன் வெற்றி அடைய முடியவில்லை? அதற்கான காரணங்கள் என்ன?
மிக எளிமையாகச் சொல்ல வேண்டு-மானால், நமது தமிழ்த் திரைப்பட உலகில் திரைப்படங்களைத் தயாரிப்பவர்களும், நிதி உதவி செய்பவர்களும் பெரும்பாலும் உயர் ஜாதி இந்துக்கள், குறிப்பாக முக்குலத்தோர், முதலியார், ரெட்டியார், செட்டியார், வன்னியர், கவுண்டர், நாயுடு மற்றும் பார்ப்பனர்கள் என்று மேல்சாதியின் தளத்திலேயே நம்மால் இவர்களை அடையாளம் காண முடியும்.
ஒரு தயாரிப்பாளரின் மன நிலைக்கு எதிரான திரைப்படங்களை எடுக்கும் அளவில் நமது சமூகம் படைப்பாளிகளை உருவாக்கவில்லை. இந்தப் பட்டியலில் பார்ப்பனர்களை நான் கடைசியாகச் சேர்த்ததன் காரணம் அவர்களின் நேரடி முதலீடு, திரைப்படம் போன்ற ஓர் உறுதியற்ற வணிகத் தளங்களில் மிகக் குறைவு என்பதால் மட்டுமே. மேலும் பார்ப்பனர்களின் பங்கு மிக அதிகமாக கருத்தியல் திணிப்பிலும், நுண்ணிய அறிவுப் புலத்திலும் தங்கிவிட்டதால் நேரடித் திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் ஈடுபடுவது இன்றளவில் குறைந்திருக்கிறது. ஆனால், பார்ப்பன மன நிலையில் இருந்து செய்யப்படும் அனைத்து வர்க்க முரண்பாட்டு யுத்திகளும் தொடர்ச்சியாக வெற்றிகரமாகவே திரைப்படத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தத் தயாரிப்பு உலகம் முழுக்க முழுக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது.
தங்கள் பிறப்புரிமையான வருண தர்மத்தால் விளையும் சமூகப் பொருளாதார நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் இத்தகைய தயாரிப்பாளர்களை அவர்களின் ஆதிக்க மனப்போக்கை எதிர்த்து எத்தகைய முற்போக்கு இயக்கத்தில் இருந்து வருகிற படைப்-பாளியாலும் செயல்பட முடியாது என்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் திரைப்படங்கள் என்கிற கனவை அடைத்து வைத்திருக்கிற சிறைச்சாலைகள்.
நமது கருத்தியல் வெளிகள் முழுமையும் ஒரு போலியான சித்தரிக்கப்பட்ட கருத்துப் பரவலால் கொள்ளை அடிக்கப்பட்டு, எந்த ஒரு நிகழ்வையும், உள்ளீட்டையும் தன்னளவில் ஆய்வு செய்து பார்க்கும் மன வலிமையை இழக்க வைத்திருக்கிறது. பிறக்கும் போதே நமது சமூகம் பிளவுகளைக் கற்றுக் கொடுத்து விடுகிறது. பிறந்த அடுத்த வினாடியில் இந்தியக் குழந்தைகளுக்கு ஜாதிப் பெயர் சூட்டப்பட்டு விடுகிறது. பிறக்கும் போதே குழந்தைகள் தரவரிசைப்படுத்தப்பட்டு நான்கு வர்ணங்களில் அடைக்கப்பட்டுவிடுகிறார்கள். தர வரிசைகளில் இருந்து தப்பிப் பிழைத்த குழந்தைகள்கூட ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது சமூக அடையாளத்தைத் தானாகவே அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ச்சியாக இன்னும் வலிமையோடு இந்தச் சமூகம் ஜாதி என்கிற அப்பட்டமான உண்மையை வலியுறுத்துகிறது, வலிந்து உட்செலுத்துகிறது.
தமிழ்த் திரைப்படமோ அல்லது இந்தியத் திரைப்படங்களோ மிகுந்த எச்சரிக்கையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கடந்து போய்விடுவது இன்னொரு உண்மை. இந்த உண்மைக்குப் பின்னால் தமக்குத் தெரியாத ஒரு களத்தை கற்பனையில் கட்டமைக்க முடியாத ஒரு இயலாமையும், தெரிந்த உண்மையை காலடியில் போட்டு நசுக்கிவிட்டுப் பொது மனித சிந்தனையில் கரைந்து போகும் படைப்பாளரின் நீர்ப்பும் காரணமாகி இருக்கிறது. தலித் இலக்கியங்களை எப்படி ஒடுக்கப்படாத ஒருவரால் படைக்க இயலாதோ அதே போலவே காலம் காலமாக ஒடுக்கப்-பட்டுச் சிதைந்து கிடக்கும் தலித் மக்களின் வாழ்வியலை, உண்மையான அவர்களின் பண்பாட்டுத் தளத்தை அதற்குள் ஒளிந்து கிடக்கும் வலியைக் காட்சிப்படுத்தும் ஒரு படைப்பாளியை நம்மால் இப்போது இருக்கிற வடிவமைக்கப்பட்ட, பொய்யாக உருவகம் செய்யப்பட்ட திரைப்பட உலகத்தில் இருந்து பெறுவது கேள்விக்குரியது.
ஆனால், இத்தகைய திரைப்படங்களை உருவாக்க வேண்டிய தலித் மக்களுக்கான ஊடகங்களைக் கட்டமைக்க வேண்டிய தலையாய கடமை இன்றைய இயக்கங்களுக்கு இருக்கிறது. ஆனால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னும் அண்ணல் அம்பேத்கர் படம் வெளிவருவதற்கு எதிர்கொண்ட இன்னல்களை எண்ணியாவது, இது போன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
நமது கடந்த அய்ம்பதாண்டு காலத் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அலசிப் பார்த்தால் வரலாற்றுப் புராண காலத்தில் இருந்து தோற்றமெடுத்து, பார்ப்பனர்களின் கர்நாடக இசையை அரங்கேற்றும் தளமாக உருமாற்றம் அடைந்து, மத வழியிலான ஆன்மீகத் தளங்களில் நிலை பெற்று, குடும்பக் கதைகளில் இந்து சூத்திரர்களின் மொழியை வளர்த்துப் பின்னர் அரசியல் அடையாளங்களுக்கான, அரசியல் வெற்றிகளை இலக்காகக் கொண்ட நாயகர்களின் வெற்றுப் புரட்சி ஆக்கங்களில் தேங்கி, இடைவெளியில் மண்வாசனைகளின் பெயரில் சூத்திரஜாதி அடையாளங்கள் வரையிலும் வந்து நின்றுவிடுகிறது. தமிழகக் கிராமங்களில் கொஞ்ச காலம் தஞ்சம் அடைந்த திரைப்படங்கள் கிராமங்களில் நிகழும் பஞ்சாயத்துகள், பொதுவாக சூத்திர ஜாதிக் குடும்ப அமைப்புகளில் நிகழும் தொகுப்பான சமூக எல்லைகள் வரை தங்கள் களங்களை அமைத்துக் கொண்டு விடை பெற்று-விடுகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நாம் குறிப்பிடுகிற பறை அடிப்பவர்களும், பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைக்கும் தொழிலாளிகளும், கழிவகற்றும் பணிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் மக்களும், சூத்திர ஜாதி இந்துக்களின் நிலங்களில் இன்னும் பண்ணை அடிமையாய் வாழும் சமூக அடையாளமற்ற, பொருளாதார, உளவியல் அழுத்தங்கள் நிரம்பிய விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை, அவர்களின் அன்றாட நிகழ்வு-களை, அவர்களின் அழுத்தப்பட்ட கனவுகளை, அவர்களின் கலைகளை, பண்பாட்டு வெளி-களை இன்னும் இந்த மண்ணெங்கும் நிரம்பி இருக்கும் அவர்களின் ஓய்வற்ற சுரண்டப்படுகிற உழைப்பை திரைப்படங்களில் காண்பது நமது வாழ்நாள் காலங்களில் ஒரு கனவாகவே போய்விடாது.
கதாநாயகர்களால் சேரிகளுக்குள் நுழைந்து கட்டியணைக்கப்படுகிற, கதாநாயகர்களின் கட்டியணைப்பை ஒரு வரமாகக் கருதுகிற அல்லது அப்படிக் கருதுவதற்குப் பழக்கப்-படுத்தப்பட்டிருக்கிற, இந்நிலத்தின் மக்களைப் பற்றிய, அவர்களின் ஒளிவு மறைவற்ற, சாயங்கள் பூசப்படாத வாழ்க்கையை வெள்ளித் திரைகளில் பார்ப்பதற்கு இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் _ காத்திருப்-போம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சமூக இருப்பில் சமநீதி பெறுவதற்குக் காத்திருந்த மக்களின் காத்திருப்பில் இது மிகக் குறுகிய காலம்தான்.
அந்தக் குறுகிய காலம் வரையில் “ஜீன் லுக் கோடர்ட்” என்கிற பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநரின் கீழ்க்கண்ட இந்த வரிகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.
“சினிமா _ உலகின் மிக அழகிய மோசடி”
– நிறைவு