கேள்வி : இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன் என்று மதவாரியான சுடுகாடுகள்தானே இருக்கின்றன. இந்துச் சுடுகாட்டிலும் தாழ்த்தப்பட்டோருக்கு கிராமங்களில் தனிச்சுடுகாடு இருக்கிறது. இன்றும் பொதுச் சுடுகாடு ஏன் இல்லை. இஸ்லாம் மதத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்கள் – திருமணம்கூட மாற்று மதத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் புதைப்பதற்கு இடம் தேடி மதத்திடம்தான் தஞ்சம் புக வேண்டும் என்கிறான் என்னுடைய இஸ்லாமிய நண்பன். மதத்தைத் தாண்டி அனைத்து மனிதர்களுக்குமான பொதுச் சுடுகாடு எப்போது உருவாகும்? – அரு.விஜய், அண்ணாநகர், சென்னை
பதில் : அரசு விதிகளின்படி _- அடிப்படை உரிமைப்படி பொதுச் சுடுகாடுகள் நமது பிறப்புரிமையே; தேவைப்பட்டால் கிளர்ச்சி, கருத்துருவாக்க முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒத்தக் கருத்துகளுடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.
கேள்வி : வாஸ்து சாஸ்திரம், பூமி பூஜை செய்து கட்டப்படும் கட்டடங்கள் திடீர், திடீர் என இடிந்து விழுந்து பல உயிர்களைக் காவு வாங்குகிறதே… இதற்குக் காரணமான வாஸ்து சாஸ்திர நிபுணர், பூமி பூஜை செய்த புரோகிதர், தண்டிக்கப்படுவார்களா? அரசு நடவடிக்கை எடுக்குமா? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : சட்டப்படி _- நியாயப்படி _- அவர்கள்மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகிச்சை சரியில்லை என்றால் டாக்டர்கள் மீது, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் போடவில்லையா? அதுபோல!
கேள்வி : 78 முதல் 81 வயதே ஆன மிகவும் இளைய தலைமுறைகளுக்கு மாநிலங்களில் ஆளுநர் பதவிகளை வழங்கியதன் மூலம் பா.ஜ.க. தனது நேர்மையான மிகப் பெரிய ஜனநாயகக் கடமைகளை ஆற்றியுள்ளது குறித்து? -சா.கோவிந்தசாமி, ஆவூர்
பதில் : பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறோம்; தேடுகிறோம்! தேடிக்கொண்டே இருக்கிறோம்!
கேள்வி : ஆட்சியேற்றதிலிருந்து ஆளுநர்களை மாற்றும் பா.ஜ.க. அரசு குடியரசுத் தலைவரை (காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கவில்லையே ஏன்? – இரா.முல்லைக்கோ, பெங்களூர்
பதில் : அது முடியாத ஒன்று அரசியல் சட்டப்படி!!. அவ்வளவு கேலிக்கூத்தான நிலைக்கு நிச்சயம் போகமாட்டார்கள்!
கேள்வி : ஆசிரியர்கள் பள்ளிப் பணியில் சேர வயது வரம்பு 57ஆக உள்ள நிலையில், கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு 35 வயது என வைக்கப்படுவதாக பேசப்படுகிறதே, இது சமூக நீதிக்கு உகந்ததா? -க. மணிமாலா, கோரிப்பாளையம்
பதில் : அது மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகும். அப்படி ஒரு திட்டம் எளிதில் நிறைவேற முடியாது!
கேள்வி : இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, ஜனநாயக நாடு, பல மொழிகள், மொழி வழிக் கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.தவே அவர்கள் நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையையும், மகாபாரதத்தையும் முதலாம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்துவேன் என்று கூறியுள்ளாரே? – பெ.கூத்தன், சேலம் மாவட்டம்
பதில் : அது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது. வேலியே பயிரை மேய்வதுபோல, அரசியல் சட்ட விரோதப் பேச்சு!
கேள்வி : 69% இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதே, இதுபற்றிய தங்கள் கருத்து? – பா.ஆனந்தி, வியாசர்பாடி
பதில் : இது 69% சட்டப்படி சட்டப்படி தவறான ஏற்பாடு. _- இதில் சட்டத்தை வளைக்க முயலுகிறது ஒரு கூட்டம்! என்றாலும் கூடுதல் இடங்கள் பிள்ளைகளுக்குக் கிடைப்பது லாபம்தானே என்று சும்மா இருக்க வேண்டியுள்ளது -_ கிளர்ச்சி செய்யாமல்!
கேள்வி : தமிழக மீனவர்களுக்கும் கடற்கொள்ளையர்களாக மாறிவிட்ட சோமாலிய மீனவர்களின் நிலை வருமா? _ சரவணா, பாப்பையாபுரம்
பதில் : பூனையைக்கூட ஒரு சிறு அறையில் அடைத்து, தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தினால் அது எதிர்த்தாக்குதல் நடத்துவது இயல்புதானே!
கேள்வி : பீஹாரில் நிதிஷ், லாலு மற்றும் காங்கிரசு கூட்டணி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மோடி பெயரால் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அலை ஓய்ந்துபோகும் நிலை உருவாகுமா? – கா.வடிவேல், அரசூர்
பதில் : கொஞ்சம் பொறுத்துப் பாருங்கள். அண்மைக்கால அரசியல் போக்கில் அது நிச்சயம் திருப்பத்தை ஏற்படுத்தும்.
கேள்வி : மத்திய பி.ஜே.பி. அரசு, ரயில்வே துறையை பெரும்பாலும் வசதி படைத்தோர் மட்டும் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கும் போல் தெரிகிறதே? – அ.யாழினி, துரைப்பாக்கம்
பதில் : வாக்காளர்கள் புரிந்துகொண்டால் சரி. மெல்ல மெல்ல அது தனியார் மயமாகக்கூடும் அபாயமும் அத்தோடு இணைந்தே உள்ளது!
கேள்வி : அண்மையில் வடஇந்திய மாநிலமான உத்திரகாண்ட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. அதன் கோட்டையிலேயே படுதோல்வி அடைந்துள்ளது மோடியின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருவதன் அறிகுறி எனக் கூறலாமா?
– ம. கலியபெருமாள், புதுக்கோட்டை
பதில் : 60 நாள்களில் கசந்து புளித்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு அது!
கேள்வி : மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் சில நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது என கூறி மறுபடியும் தா.பாண்டியன் ஜெயலலிதா துதிபாட ஆரம்பித்து இருக்கிறாரே? – செ. உமா, பெரம்பலூர்
பதில் : அது அவருடைய உரிமை. அதை யார்தான் தடுத்திட இயலும்?
கேள்வி : சுப்பிரமணியசாமி என்ற அறிவுலக மேதை இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேசும்பொழுது இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை தேசிய நலனைக் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர மாநில நலனை அடிப்படையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என திருவாய் மலர்ந்துள்ளது குறித்து? – அ.கவின், மயிலாப்பூர்
பதில் : அரசியல் புரோக்கர்களின் அபத்தப் பேச்சுகளைப் பற்றி கேள்வி கேட்காதீர்கள்! பிறகு பைத்தியங்களின் உளறல்களுக்கு முக்கியத்துவம் வந்துவிடும்!
கேள்வி : இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கூற்றுப்படி நேபாளம் உலகிலேயே உள்ள ஒரே இந்து நாடு என கருதப்படுவதால் அதன் அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசு அந்நாட்டிற்கு ஏகப்பட்ட உதவிகளை வாரி வழங்குவதன் மூலம் அவர்களின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதாக இல்லையா? – நாத்திகன் சா.கோ., திருச்சி
பதில் : சன்னமாகப் புரிந்து கொண்டீர்கள், உலகின் மறைந்தும் மறையாத ஒரே ஹிந்து நாடு என்பதையும் அத்துடன் சேர்த்துக்கொள்க!
கேள்வி : தமிழர்களால் நடத்தப்படும் நாளிதழ் மற்றும் வார இதழ்களில்கூட பக்தி ஸ்பெஷல் என்ற போர்வையில் அதிகப்படியான இணைப்புகளைச் சேர்த்து மக்களை முட்டாளாக்கும் பணி செய்யப்படுகிறதே? – நா.செந்தமிழன், ஊத்துக்கோட்டை
பதில் : நாய்விற்ற காசு குரைக்குமா? கருவாடு விற்ற காசு நாறுமா? பணப்பெட்டியிலே கண்வையடா தாண்டவக்கோனே!
கேள்வி : தந்தை பெரியாருடன், குன்றக்குடி அடிகளார் வைத்திருந்த நட்பு எப்படிப்பட்ட நட்பு? முகநக நட்பா? அகநக நட்பா? கொஞ்சம் கூறுங்களேன்! – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அகநக நட்பு மட்டுமல்ல; இனமான உறவும்கூட! அய்யா மறைந்த பின்னர், பெரியார் திடலுக்கு வந்த தவத்திரு அடிகளார் அவர்கள், அய்யாவின் கட்டில் அருகே வந்து நின்று, பொலபொலவென்று கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட, அமைதியாக சில மணித்துளிகள் நின்ற பிறகே மவுனம் கலைத்தார்கள்!