கேதன் தேசாயின் இமாலய ஊழல்!
பல்சுவை இதழான உண்மையில் இந்த இதழில் என்னைக் கவர்ந்தது, வியாபாரியும் பிக்காரியும் -_ என்ற தலைப்பிலான சு.மதிமன்னன் அவர்கள் எழுதிய கட்டுரைதான்.
காரணம், இதில், குஜராத்தின் பெருமுதலாளிகள் ஒரு பக்கம் தொழிலதிபர்களின் காவலனாக இருந்த முதலமைச்சர் மோடி, ஒரு பக்கம் ஏழை எளிய மக்கள். மற்றொரு பக்கம், செங்கல் அடுக்கி வைத்திருந்ததைப் போல ரூபாய் நோட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் வைத்திருந்து 2010இல் கைது செய்யப்பட்ட கேதன் தேசாய் உள்ளிட்ட குஜராத்திகளில் பல்வேறு துறைகளில் இருப்பவர்களைப் பற்றி ஏராளமான தகவல்களை அள்ளித் தெளித்திருக்கிறார்.
புதுக்கணக்கு தொடங்குவதற்குத்தான் அங்கே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று முற்போக்கு, பிற்போக்கு இரண்டும் கலந்த கலவைதான் குஜராத் என்று முடித்திருக்கிறார். தலைப்பு குஜராத்தில் நிலவிவரும் ஒரு பழமொழி. அந்தப் பழமொழி ஜெனோ ராஜா வியாபாரி, எனி பிரஜா பிக்காரி என்பதுதான். இதிலதான் தலைப்பும் கையாளப்பட்டுள்ளது. இதன் பொருள்: மன்னன் வியாபாரி, மக்கள் பிச்சைக்காரர்கள்_ அப்படிப்பட்ட மோடி மன்னன்(முதல்வர்)தான், தற்போது மாமன்னன்(பிரதமர்) ஆகியிருக்கிறார் என்று எச்சரிக்கையோடு முடித்திருக்கிறார்.
– வ.வேலவன், பூந்தமல்லி
உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தொடர்பான பிரேசிலின் சேம் சைடு கோல் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையின் மூலம் பல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்ததுடன் அதிர்ச்சியடையவும் வைத்தது. உள்நாட்டு ரசிகர்களை மதிக்காமல் விரட்டியடித்த நாடு அவர்களது மனவலியை எப்போது புரிந்துகொள்ளப் போகிறது. மேலும், பிரேசில் நாட்டைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது.
– சி.பாலமுருகன், அம்பை
ஜெர்மனியில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அய்யா தந்தை பெரியார் அவர்களின் குரல் ஒலிக்க வேண்டும். மொழிப்போர் தொடங்கியுள்ள சூழலை விளக்கி, இந்தியாவில் இந்தி இடம் பெற்றுள்ள நிலையைப் புள்ளி விவரங்களுடன் விளக்கி, சிந்திக்க வைத்துள்ள விதம் அருமை. ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் புதுமை இலக்கியப் பூங்கா என்ற பகுதி திராவிட இயக்கத்தில் இத்தனை எழுத்தாளர்களா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அடுத்த இதழில் எந்த எழுத்தாளர் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
– ம. திவ்யா, கோவை
பிற பத்திரிகைகளில் வெளிவராத _ வெளியிடத் தயங்கும் செய்திகள் உண்மையில் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் புகுத்தப்படுவதில் தொடங்கி, புதுச்சேரியில் இம்முறை செயல்படும் விதம்பற்றி விளக்கி, இதற்கான தீர்வும் விளக்கப்பட்டுள்ளது. திரைக்கு வரும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் விமர்சனம் எழுதும் பத்திரிகைகளுக்கு மத்தியில் பார்க்க வேண்டிய படங்களை மட்டுமே விமர்சனம் செய்யும் உண்மை இதழுக்குப் பாராட்டுகள். ஜூலை 1_15 இதழில் மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி பார்க்க வேண்டிய படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
– கு.அறிவழகன், சிதம்பரம்