பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும்
1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும்.
அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் பேட்டிகூட வெளிவந்தது.
பாலசந்தர், பாரதிராஜா பிராமண சமுதாயத்தைத் தாக்கிப் படம் எடுத்திருக்கலாம்; இனிமேல் எவரும் அதுபோல் எடுக்க முடியாது. அவர்கள் படம் எடுத்த காலங்களில் பிராமணர்களுக்கென்று சங்கம் இல்லை. இனி அது நடக்காது என்றெல்லாம் திருவாளர் காசிராமன் கொடுத்த பேட்டி கல்கி இதழில் வெளிவந்தது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்கியில் (9.11.2003) ஜெயேந்திரர் போட்ட தடை என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அது இதோ!
ஞானபீடம் என்ற ஒரு நாடகம்
வெகுநாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸான மேடை நாடகம் பார்த்த மகிழ்ச்சி, ஞானபீடம் பார்த்தபோது!
ஜாதிக் கொடுமைக்கு ஆளாகும் நந்தன். இவரது மனைவிக்குப் பிரசவமாகிறது. அதே நேரத்தில் கொடுமைக்கார மிராசுதாருக்கும் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் குழந்தைகளை மாற்றி விடுகிறார் நந்தன்!
மாறுபட்ட சூழ்நிலையில் வளர்ந்து, நந்தனின் உண்மையான பிள்ளை வேதவித்தான சங்கரனாகவும், மிராசுதாரின் உண்மையான பிள்ளை ராஜா அய்.ஏ.எஸ். அதிகாரியாகவும் ஆகிவிடுகின்றனர். ராஜா, தான் காதலிக்கும் கிறிஸ்தவ மேலதிகாரியின் பெண்ணை மணப்பதற்காக, மதம் மாறக் கூடத் தயங்குவதில்லை. இந்தப் பின்னணியில் கிராமத்துக்கு விஜயம் செய்கிற ஒரு மடத்தின் தலைவர், வேதம், சாத்திரம் எல்லாம் படித்து ஞானப்பழமாக இருக்கிற சங்கரனைத் தம் மடத்தின் அடுத்த வாரிசாக எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார். நந்தன் இதைக் கேள்விப்பட்டு, சுவாமிகளிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார். பிறப்பால் மட்டுமே ஒருவர் அந்தணன் ஆகிவிடுவதில்லை. அவரவர்க்குரிய அனுஷ் டானங்களை அனுசரித்தே ஆகிறார் என்று சொல்லி, தமது முடிவில் மாற்றமில்லை என்கிறார் சுவாமிகள்.
இதுதான் கல்கி கூறும் தகவல்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த பையனாக இருந்தாலும் வேதம் சாத்திரம் எல்லாம் படித்து ஞானப் பழமாக இருக்கிறான் சங்கரன். அவனை மடத்தின் அடுத்த வாரிசாக நியமித்தது உள்ளபடியே புரட்சிதான், வரவேற்கத்தக்கதுதான், நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டும் இருப்பதுதான்! சங்கர மடத்தில் அடுத்த வாரிசாக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று அழுத்தமாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகிறோம். ஜாதிப் பிரச்சினைபற்றி எங்கு சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பினாலும் இந்தக் கருத்தும் வெடித்துக் கிளம்புவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது! அதனுடைய தாக்கமாகக்கூட இருக்கலாம். ஞானபீடம் நாடகம்.
இப்பொழுதுதான் உச்சக் கட்டமான முக்கியக் காட்சி. இந்த நாடகத்தை நடத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளாராம் காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி.
நாடக உலகில் பழுத்த அனுபவம் வாய்ந்த நாடக ஆசிரியர் -_ இயக்குநர் மாலியும் அவரது குழுவினரும் ஜெயேந்திரரைச் சந்தித்து மன்றாடி உள்ளனர்.
பத்தொன்பது தேதிகள் வாங்கிவிட்டேன்! இனிமேல்தான் செலவழித்த பணத்தை எல்லாம் சம்பாதிக்க வேண்டும். சபாக்களிடம் நான் எதைச் சொல்லி கான்சல் பண்ண முடியும் என்றெல்லாம் கெஞ்சி இருக்கிறார் மாலி.
நீங்கள் தொடர்ந்து நாடகத்தை நடத்துவோம் என்று முடிவு எடுத்தால் யாராவது ஸ்டே வாங்க வேண்டி வரும் என்றாராம் ஜெயேந்திரர். கல்கிதான் இதை எல்லாம் சொல்லுகிறது.
சங்கர மடத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவையே இல்லை.
– மயிலாடன்