புதுமை இலக்கிய பூங்கா

ஜூலை 16-31

அன்பின் ரகசியம்

– சந்தனத்தேவன்

 

அண்மையில் மறைந்த திராவிட இயக்கப் பற்றாளர்களுள் ஒருவரான சந்தனத்தேவனின் இயற்பெயர் தே.நாராயணன். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொன்னி இதழில் பிழை திருத்துநராக இருந்து, பின்னர் வாழ்வு என்ற மாதமிருமுறை இதழினை நடத்தியுள்ளார். உண்மை இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார்.

மணமான புதிது; புதுமோகம் என்பார்களே, அதில் திளைத்திருந்த வேளையில் என்னைத் திடுக்கிடவைத்தது _ அந்த உத்திரவு! காமனூருக்கு புக்கிங் கிளார்க்காகப் போகவேண்டிய சுந்திரம் உடல்நிலை குணமில்லாது நீண்டகால லீவில் இருப்பதால், அவருக்குப் பதிலாக உடனடியாகப் புறப்பட்டுச் செல்லவும் _ சுந்திரம் அங்கு வந்து சேரும் வரை உமக்கு அங்குதான் வேலை_இவ்வாறு உத்திரவில் கட்டளை தொனித்தது. வேறு வழியில்லை! எவராலும் பிரிக்கமுடியாதென்று நேற்றுவரை காதுகுளிர கேட்டு வந்த இளமனைவியிடம் பிரியா விடைபெற்றேன்.

ரயில் காமனூரை அடையும்போது கிழக்கு வெளுத்து விட்டது. என்னை மட்டும் அனாதையாக இறக்கிவிட்டு வண்டியும் நகர்ந்தது. இந்தச் சின்னஞ்சிறு ஸ்டேஷனில் கோட்டும் சூட்டுமாக இறங்கிய என்னை வண்டியிலிருந்த பிரயாணிகள் வெறிக்க வெறிக்கப் பார்த்தனர்.

வண்டி எல்லையைத் தாண்டிய பிறகு, என்னை எதிர் நோக்கி வந்தார், காமனூர் ஸ்டேஷன் மாஸ்டர். அவருக்கு வயது நாற்பதைத் தாண்டியிருக்கும்; நெற்றியிலே பளிச்சிட்ட வெண்ணீற்றுப் பூச்சும், சீவி முடித்திருந்த குடுமியும் வைதிகம் விட்டுப்போன ஹாரப்பா _ மொஹெஞ்சோதாரோவாக காட்சி தந்தன. மரியாதை கருதி வணங்கினேன். அவரும் என்னைப் புரிந்து கொண்டவர் போல எங்கே, ஈரோட்டிலிருந்துதானே! என்று அகமும் முகமும் மலரக் கேட்டார்.

ஆமாம், சார்?

ரொம்ப நல்லதாய்ப் போச்சு. ஒரு வாரத்திற்கு முன்பே வருவாயென்று எதிர்பார்த்தேன்! எப்படியோ வந்து சேர்ந்தாயே, அதுவே போதும்!

ஒரு வாரமா? நேற்று தானே எனக்கு உத்திரவு கிடைத்தது சார்!

அப்படியா! இந்த ஊரிலேதான் தந்தித் தொடர்பு கிடையாதே! அதனாலே எனக்கு மட்டும் முன்கூட்டியே கடிதமூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்களோ என்னமோ! அதனால் என்ன? எல்லாம் மங்களமாக முடிந்தால் சரி! என்றார்.

கீழே கிடந்த படுக்கையையும் பெட்டியையும் தூக்க முயன்றபோது, இதுவரையில் ஸ்டேஷன் மாஸ்டரும் நானும் பேசிக் கொண்டிருந்ததை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த பாயின்ட்ஸ் _ மென் ஓடோடியும் வந்து, என்னிடமிருந்த சுமைகளைப் பறித்துக்கொண்டு முன் நடந்தான். இங்கு நடப்பவையனைத்தும் எனக்கு விசித்திரமாகவே இருந்தது. மானிட சமுதாயத்தை விட்டு இன்னும் அன்பும் அருளும், மனிதாபிமானமும் மரியாதையும் ஓடி விடவில்லையென எண்ணிக் கொண்டு ஸ்டேஷன் அறையில் கொண்டுபோய் வை_ என்று உத்திரவிட்டேன். எதற்கு ஸ்டேஷன் அறை? வீடு கடல் போலக் கிடக்கிறது; நம் வீட்டுத் திண்ணைக்கு கொண்டு போ_நான் போட்ட உத்திரவைத் தள்ளுபடி செய்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.

பிரயாணக் களைப்பு தீர, குளித்தால் நலமெனத் தோன்றியது. என் முகக் குறிப்பில் அனைத்தையும் புரிந்து கொண்டவர்போல, என்ன யோசனை! குளிக்கத் தானே _ வீட்டிலே வெந்நீர் காய்கிறது; வா போகலாம் _என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மற்ற இடங்களில் பற்றாக்குறையாக இருக்கும் அன்புள்ளம் இங்கு மட்டும் மலிந்து கிடப்பானேன்? நான் யாரோ? அவர் யாரோ? உறவோ, பழக்கமோ இல்லாத என்மீது, இவரேன் இப்படி அன்பு மலர்களைத் தூவ வேண்டும்? ஒன்றுமே விளங்கவில்லை. என்னமோ ஏதோவென்று பின்தொடர்ந்தேன்.

வீடும் நெருங்கியது. ஜன்னல் இடுக்கில் யாரோ உன்னிப்பாக கவனிப்பது தெரிந்தது. தலையைத் தாழ்த்திக்கொண்டு நிலத்தைப் பார்த்து நடந்தேன்.

மாமா! எப்ப மாமா வந்தேள்? _கும்மாளம் போட்டுக்கொண்டு ஓடிவந்த அம்பிப் பயல் என் கைகளைப் பிடித்துக் கொண்டான். பார்த்தவர்கள், பழகியவர்கள்கூட, சமயம் வாய்க்கும்போது பாராமுகமாகப் போவதை அனுபவித்திருந்த எனக்கு, முன்பின் அறியாத பையன் உறவுமுறை கொண்டாடியது திகைப்பில் ஆழ்த்தியது.
இவன்தான் கடைக்குட்டி! படுசுட்டின்னா, டேய் மணி! மாமாவைத் தொந்திரவு செய்யாதேடா. ஒரே சமயத்தில் அறிமுகமும் அதட்டலும் செய்தார்.

அலுப்பு தீர குளித்தேன். இருந்த குளிருக்கு வெந்நீர் வெகுஇதமாக இருந்தது.

ஸ்நானம் ஆச்சோ? _ குளித்துவிட்டு ஸ்டேஷனுக்குப் புறப்படத் தயாராயிருந்த என்னை வழிமறித்தார். எவ்வளவோ சொல்லியும் விட்டாரில்லை, காலை உணவு அங்கேதான். யார் வீடு? என்ன கூச்சம் வேண்டிக் கிடக்கிறது? எத்தனை நாளைக்கு இப்படி முடியும்?_ இந்த விதமாக புரியாத கேள்விகளைப் போட்டு, என்னை அன்புக் கயிற்றால் கட்டிவிட்டார். எது எப்படியோ, நெய்யொழுகும் உப்புமாவும், சுகந்த மணம் கமழும் காப்பியும் எனக்கு உண்ணக் கொடுத்து வைத்திருந்தது!

ஸ்டேஷனுக்கு வந்ததும் வராததுமே மெள்ள பேச்சைத் துவக்கினார்.

போன யுத்தம் நடந்த சமயம்; குளித்தலையில் இருந்தேன். ஏதோ பகவத் புண்ணியத்தால் தினமும் இரண்டு மூன்று வாகன் வெற்றிலை பாம்பேக்குப் போகும்; விறகும் வெண்ணெய்யும் இடையிடையே வரும்; மாதம் நூறு ரூபாய்க்கு அட்டியில்லை. காலட்சேபம் ஒரு மாதிரியா ஓடியது. என் வீட்டுக்காரியோ கொஞ்சம் கெட்டி; தாம்_தீம்னு போகிற பழக்கமில்லை; வரவு செலவு கொடுக்கல் வாங்கல் எல்லாமே அவள்தான். அதனாலே ஏதோ மிச்சம் பிடிக்க முடிந்தது. ஊரைவிட்டு மாற்றியபோது, இருப்பிலே இரண்டாயிரம் இருந்தது. குளித்தலை பக்கம் நஞ்சைக் காட்டை வாங்கியிருந்தோம். மங்களத்திற்கு நாலு பவுனில் சங்கிலி _ இதுதான் ரயிலுக்கு வந்து சம்பாதித்தது. பூர்வீகச் சொத்தோ யாரும் பொறாமைப்படும் அளவிற்கு இல்லை; ஏதோ கொஞ்சம் விட்டுப் போயிருந்தார்கள். நான் படித்தேன்; தங்கைகளைக் கட்டிக் கொடுத்தேன். இதில் அடிபட்டுப் போனது அந்தச் சொத்தும்.

ஏதோ பிரமாதமாக எதிர்பார்க்கக் கூடாது. நம்பியதற்கு ஏதும் மோசமிருக்காது என்று முற்றுப்புள்ளி வைத்தார். குடும்ப அந்தஸ்து, வரவு செலவு பற்றி இவரிடம் யார் கேட்டது? அதுவும் என்னிடம் இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்? சரி சரி, மனிதனுக்கு புதுமாதிரியான வியாதி போலிருக்கிறது; சுய விளம்பரப் பிரியர் என்று நினைத்துக் கொண்டு, பேசியதற்கெல்லாம் தலையசைத்தேன். இதற்கிடையில் அம்பிப் பயல் ஓடிவந்து, மாமா, அக்கா ஏதாவது நாவல் இருந்தா வாங்கிட்டு வரச் சொன்னா என்றான். இந்தப் பண்பாடே எனக்குப் புதிதாக இருந்தது. முகத்தில் நாணம் மேலிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தேன்.

டேய் மணி! என்னடா நாவல் வேண்டிக்கிடக்கு; ஏதாவது பக்திப் புத்தகங்களை வாங்கிப் படிப்பாளா? _ பையனை செல்லமாகக் கண்டித்தார்.

சின்னப் பையன் தானே! இவ்வாறு நான் சமாளித்தேன். சின்னப் பையனா? போகப் போகத் தெரியும், பாரும்! என்றார். போகப் போகவா? மனிதன் அடிக்கடி பேசும் போதெல்லாம் சொல்கிறாரே; இதன் அர்த்தமென்ன? அவருக்கு என்ன தெரிந்ததோ என்னமோ, எனக்கு மட்டும் இந்தத் திடீர் அன்புக்கெல்லாம் ஏதோ விபரீதம் காத்திருப்பதாகத் தெரிந்தது!

அப்பா, சாப்பாடு தயார்! அம்மா சொல்லச் சொன்னா என்ற செய்தி, அம்பியின் வாயிலாக வந்தது.

சரி, வேலை கிடக்கட்டும்; சாப்பிடக் கிளம்பு _ என்னைத் துரிதப்படுத்தினார்.

வேண்டாம் சார்! ஹோட்டல்லே சாப்பிட்டுக் கொள்கிறேன். நீங்க…….

நல்ல வேலையைக் கெடுத்தாய் போ! நாமெல்லாம் அங்கே போவது அழகா? கண்ட பையன்கள் நுழைகிற இடம், ஆசாரம் அனுஷ்டானம் என்னாவது? சேச்சே, அனாச்சாரம் பிடித்த இடத்திலே சாப்பிடுவதாவது? இங்கே பாரு, நீ வருவதற்கு முன்னாலேயேதான் தீர்மானிச்சுட்டேன். அமர்க்களமா சாப்பாடு செய்து போட முடியல்லேனாலும் ஏதோ உள்ளதைச் சமைத்துப் போடுவா. கூச்சப்பட்டு பிரயோஜனமில்லை; யார் வீட்டிலே சாப்பிடுறே; இதிலென்ன சங்கோஜம் வேண்டிக் கிடக்கு இப்படியாக அவர் அன்புள்ளத்தைத் திறந்து காட்டினார்.

வாய் பேசாது எழுந்தேன்; என்ன தங்கமான மனிதர்; என்ன குணம் _ இப்படியாக வாயாற வாழ்த்தினேன். பகல் சாப்பாடு வடை பாயசத்தோடு ஏக அமர்க்களந்தான்! சுருக்கமாக சொல்லப் போனால், புது மாப்பிள்ளைக்கு இருக்கும் வரவேற்பும் ஆடம்பரமும் இருந்தது.

அன்றைய கணக்குகளைச் சரிபார்த்து முடித்துவிட்டு, ஆபிசிற்கு அனுப்பவேண்டிய கடிதங்களை ரக வாரியாக பிரித்துக் கொண்டிருந்தேன்.

முன்னால் அனுப்பி பழக்கமிருக்கோ? _ என்னை அணுகி வந்தார் ஸ்டேஷன் மாஸ்டர் மணி அய்யர்.

ஓ! இருக்கே! என்றேன்.

கையெழுத்து முத்து முத்தா இருக்கே; மங்களம் எழுத்தும் இதே மாதிரிதான் _ மேஜையிலிருந்த மெமோவை எடுத்துப் பார்த்தார்.

என்னது! உமக்கு இரண்டு பெயரா? _ கண்கள் ஆச்சரியத்தை உமிழ்ந்து தத்தளித்தன.

இல்லையே சார்! எனக்கு ஒரே பெயர் தானே!

உன் பெயர் சுந்திரமில்லையா? சுகவனம்னு போட்டிருக்கே!

என் பெயர் சுகவனந்தான், சார்! சுந்திரம், இங்கே பர்மெனண்டா வரவேண்டியவர். உடம்பு குணமில்லாது இருக்கிறார். அவருக்காக, தற்காலிகமாக என்னை அனுப்பியிருக்கிறார்கள்

அப்படியா? எனக்கு ஆபிஸிலிருந்து கடிதமெதுவும் இல்லையே! என்னிடமிருந்த உத்திரவை எடுத்துக்காட்டினேன்.

அதனாலென்ன! கவர் தவறிப் போயிருக்கலாம். அதுசரி, உன் கோத்திரமென்ன?

கோத்திரமா? போங்க சார்! புதுப் பெண்ணைப்போல் நாணிக்கொண்டேன்.

என்னப்பா, நவநாகரீகப் பிள்ளையா இருக்கே; இந்தக் காலத்திலே ஜாதியைச் சொல்லாம மறைப்பதே பாஷனாயிடுச்சு; சும்மா சொல்லு

நான் உங்களவா இல்லே சார்! தீர்மானமாகச் சொல்லி முடித்தேன்.

அப்படியா? மனிதன் இடிந்து போனார். தலையில் வைத்த கையை எடுக்கவேயில்லை.

நம்ப முடியலையே! எங்க பையன்னா நினைச்சேன். சென்னை முதலியாரோ? எங்க கொஞ்சம் இறங்கி வந்தது.

இல்லை! என்றேன்.

திருநெல்வேலி சைவமோ! _ அடுத்தபடி!

இல்லை! என்றேன்.

நாட்டுக்கோட்டை செட்டியாரோ!_ கேட்டார்.

இல்லை சார்! அலுப்பாக இருந்தது எனக்கு.

என்னப்பா இது! என்ன ஜாதீன்னுதான் சொல்லேன் தவியாகத் தவித்தார்.

எந்த ஜாதியாயிருந்தா என்ன சார்! நான் வேலை செய்ய வந்திருக்கிறேன் இதைச் சொன்னதும் அவர் முகத்தில் ஈயாடவில்லை. முகம் கறுத்து சிறுத்தது. அன்பிருந்த இடமா அது!

கொஞ்ச நேரத்தில் வெகு தடபுடலாக அவரது திண்ணையில் குடியேறியிருந்த பெட்டியும் படுக்கையும் என்னைத் தேடிவந்தன. அன்று இரவு சாப்பிட்டாயா? என்று கேட்க நாதியில்லை. அன்றுதான் அவர் கடைசியாகப் பேசியது. ஊரைவிட்டுப் புறப்படும் வரை, என்னோடு பேசவேயில்லை. இந்தத் திடீர் மாறுதலுக்குக் காரணம் புரியாமல் தவித்தேன் நான்.

இப்படியாக ஒரு மாதம் போனது; வரவேண்டிய சுந்திரமும் கடைசியாக வந்து சேர்ந்தான். எனக்கு நடந்தமாதிரியே, வந்ததும் வரவேற்பும் விருந்தும் ஏக அமர்க்களப்பட்டது. புறப்படும் சமயத்தில் சுந்திரத்திடம் நடந்தவையனைத்தும் கூறினேன். அவனோ விழுந்து விழுந்து சிரித்தான்.

அடப்பாவி! இரண்டு வேளைச் சாப்பாட்டையும் சாப்பிட்டதுமல்லாது அவர் கட்டியிருந்த கோட்டையையும் இடித்துத் தகர்த்து விட்டாயே! என்றான்.

என்னது, என்மீது பழியைப் போடுகிறாயா! என்றேன்.

அடப்பாவி! இந்த ஊருக்கு நான் வரப்போவது தெரிந்ததுமே, என் குலம், கோத்திரம், பூர்வீகம் இவற்றையெல்லாம் ஆள் மூலமாக விசாரித்திருக்கிறார். அதன் பிறகு என் ஜாதகத்தைக் கேட்டு எனக்கே கடிதம் எழுதினார். நானும் நேரில் வரும்போது பேசிக் கொள்ளலாமென்று எழுதியிருந்தேன். தற்செயலாக, எனக்குப் பதிலாக நீ வரவே, நீதான் நானென்று எண்ணிக்கொண்டு, இவ்வளவு மாப்பிள்ளை உபச்சாரமும் நடந்திருக்கிறது என்றான்.

பேசிக் கொண்டிருக்கும்போதே, காலையில் அவர் வீட்டுக்குப் போன பெட்டியும் படுக்கையும், சுந்திரத்தைத் தேடி வந்தன.

என்ன சுந்திரம்! உனக்கும் இந்தக் கதிதானா? என்றேன்.

ஆமாம்! _ தலையை ஆட்டினான் சுந்திரம்!

சார்! உங்க மகளை மணம் செய்துகொள்ள எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. தாராளமாக இந்த வினாடியிலேயே செய்து கொள்ளத் தயார். ஆனால், ஒரேயொரு நிபந்தனை! அதாவது, எனக்கு இருபத்தெட்டு, இருபத்தாறு வயதில் கலியாணமாகாத இரு சகோதரிகள் உண்டு. அவர்களுக்கு தக்க வரனைத் தாங்கள் தேடித் தந்தால், நாளைக்கே நான் தயார் என்றானாம் சுந்திரம்!

பெட்டியும் படுக்கையும் ஏன் திரும்பி வராது?

நன்றி: முரசொலி பொங்கல் மலர் 1956.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *