காமராசரை ஆதரிப்பது ஏன்?
திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும். கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்யோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார்.
திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல் இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள் அவரை எப்படியாவது ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு.காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வர முடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத்திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகுமென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டுமானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.
(2.10.1956 அயன்புரம் திரு.வி.க. நினைவு நாள் – தந்தை பெரியார் உரை விடுதலை 9.10.1956)
பார்ப்பான் கையில் மண் வெட்டி!
பாப்பாத்தி கையில் களைக் கொத்து!!
இன்றைய ஆட்சியானது ஏதோ தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக இருப்பதனால் நாங்கள் காங்கிரஸ்காரன் அழைத்தாலும் அழைக்கா விட்டாலும் வலியச் சென்று ஆதரிக்கின்றோம். பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களுக்கு எங்களைப் பிடிக்காது. எங்கள் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றே முடிவு பண்ணிக் கொண்டு உள்ளார்கள். எங்கள் பத்திரிக்கை அரசாங்க சம்பந்தமான வாசக சாலைக்கு வரக் கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டது.
நன்றியோ பிரதிபலனோ இல்லா உழைப்பு!
காங்கிரஸ்காரர்கள் நன்றி செலுத்துவார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் ஆதரிக்க முற்படவில்லை. சமுதாயத்தில் இன்றைய ஆட்சியின் காரணமாக ஏற்பட்டு உள்ள நன்மையினை உத்தேசித்தே ஆதரிக்கிறோம்.
நீங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குக் காமராசரையே பதவியில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால், பார்ப்பனர் கைக்கு மண் வெட்டியும் பாப்பாத்தி கைக்குக் களைக் கொத்தும் வந்துவிடும். இது உறுதியாகும்.
இதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகின்றார்கள். மற்றவர்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் காமராசர் ஆட்சியினை ஒழித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். காமராசர் ஒழிந்தால் பழையபடியும் வீதிக்கு ஒதுக்குப்புறத்தில் அனுப்பிவிடுவார்கள். தோழர்களே, நாங்கள் தோன்றுகின்ற வரையிலும் ஜாதியினை ஒழிக்க எவனும் தோன்றவில்லை.
புத்தருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புப் பற்றிப் பேசவும் அதற்காகப் பாடுபடவும் நாங்கள்தான் உள்ளோம்.
(25.4.1963 கொறுக்கையில் தந்தை பெரியார் உரை)