தமிழால் முடியும்! சாதித்துக் காட்டிய ஜெயசீலன் இ.ஆ.ப.

ஜூலை 16-31

தமிழ் வழிக் கல்வி படிப்போரை ஏளனமாகப் பார்க்கும் காலத்தில் தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதி வெற்றி பெற்று தமிழுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெயசீலன்.

ஆங்கிலப் புலமை பெற்றிருந்தும் தமிழில் தேர்வு எழுதிச் சாதித்துள்ள இவர், கொடைக்கானல் மலையடி வாரத்தில் உள்ள கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழிலேயே படித்துள்ளார்.

மேல்நிலைக் கல்வியை அருகில் உள்ள கிராமத்திலும், விவசாயத்தில் பட்டப் படிப்பை, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திலும் முடித்துள்ளார்.

ஆங்கிலத்தில் வெளிவந்த சிறந்த விவசாய அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முதுகலைப் பட்டத்தைத் தமிழில் முடித்து முனைவர் பட்ட ஆய்வினையும் தமிழ்ப் பாடப் பிரிவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்திய ஆட்சிப் பணியாளர் (அய்.ஏ.எஸ்.) தேர்வு எழுதுவது என்பது எல்லோரும் நினைப்பதுபோல சுலபலமானது அல்ல என்று ஜெயசீலன் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்மொழியில் படிக்க தனியான பயிற்சி மய்யங்கள் இல்லை. தமிழில் விடைகளை எழுதும் வாய்ப்பு இருந்தும் சில கலைச்சொற்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

தமிழில் படிப்பது என்பது அதிக உழைப்பைக் கோருவது என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் மூவர் தமிழில் படித்துத் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இன்னும் நிறையப் பேர் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்கான தரவுகளை அதிகம் கொண்டுவர வேண்டியது அரசு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடமையாகும்.

 

 


 

தமிழிலேயே தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியில் மட்டும் தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.

தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று 5.1.1994 அன்று உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அந்தச் சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதால் அதனை ரத்து செய்துவிட்டு மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்புகள் எழுதப்பட வேண்டும் என ஆணையிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவினை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர்,

தமிழகத்தில் 1956ஆ-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால், நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976ஆ-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்தத் திருத்தம் ஆகும். இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்குரைஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்பு, தமிழைத் தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர் பொதுவிதிகள்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதேபோல, தமிழே சென்னை உயர்நீதிமன்ற மொழியாகவும் மாறும் நாள் எந்நாளோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *