கி.தளபதிராஜ்
இயக்குனர் விஜய்யின் சைவம் திரைப்படம் பார்த்தேன். படத்தின் மூலக்கதை அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறியிருப்பதைத் தவிர்த்து அனைத்தையும் ரசிக்கலாம். சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலைத் திருவிழாவில் பலி கொடுக்க முடிவு செய்கிறார்கள். அது குழந்தை தமிழ், ஆசையாக வளர்த்துவரும் சேவல். தன் சேவல் பலி கொடுக்கப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் தமிழ் தன் அம்மாவிடம் வைக்கும் கேள்விகள் பகுத்தறிவுச் சாட்டை.
சாமிக்கு ஏம்மா நம்ம சேவலைப் பலி கொடுக்கணும்?
சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறாருல்ல?
சாமி அப்படிக் கேட்டுச்சாம்மா?
சாமி கேட்காது. சாமி நம்மையெல்லாம் காப்பாத்துறதால நாமதான் சாமிக்கு சேவலைப் படைக்கணும்.
சாமி தானம்மா நம்ம சேவலையும் படைச்சுது. அதையும் அவர்தானே காப்பாத்தணும்?
……….????
வெற்றிலையில் மை தடவி சேவலைக் கண்டுபிடிப்பதாக சொல்லும் சாமியாரின் பித்தலாட்டக் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
செட்டிநாட்டின் அழகு மிக அருமையாக காட்டப்பட்டுள்ளது. நேர்த்தியான இசை. கிராமப்புற மாணவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் தமிழ் ஆங்கிலம் பேசும் காட்சி நெத்தியடி.
நாசரின் துணைவியாக நடித்திருப்பவர் நல்ல தேர்வு. அமெரிக்கச் சிறுவன் வரும் காட்சிகளும், அவன் நடிப்பும் அருமை. படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களையுமே துல்லியமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய்.
நாசரைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. வழக்கம்போல் விளையாடியிருக்கிறார்.
அசைவம் என்பது அன்புக்கு எதிரானது; மரக்கறி உணவே (சைவம்) மனிதத்தன்மை என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தையும் நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. யாகங்கள் எனும் பெயரால் எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுத்த பார்ப்பனியம் இன்று சைவப் போர்வை போர்த்தி நிற்கிறது.
உலகின் கோடிக்கணக்கான எளிய மக்களின் புலால் உணவுப் பழக்கத்தைக் கிண்டல் செய்யும், பொய் விளக்கம் தரும் பிரச்சாரங்களின் மத்தியில் கடவுளின் பெயரால் உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தை முன்வைக்கிறது இந்த சைவம். ஹிட்லரும், மோடியும் சைவ உணவுப் பிரியர்களே என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் அசைவம் அன்புக்கு எதிரானது என்பது புரட்டு என்றும், மனிதத் தன்மைக்கும் உணவுப் பழக்கத்துக்குமான தொடர்பின்மையும் புலப்படும்.
சைவம் பார்க்க! அசைவம் சாப்பிட!!