பக்கவாதத்தை வென்ற மருத்துவப் புரட்சி

ஜூலை 16-31

பக்கவாதம் என்றாலே இன்னும் கிராமப் புறங்களில் செய்வினை, மந்திரம் செய்து கை கால்களை யாரோ முடங்கச் செய்துவிட்டார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. இந்த மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துள்ளது மருத்துவ அறிவியல்.

மத்திய மேற்கு அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பசைச் சேர்ந்த லான் புர்கர்ட் என்பவர் நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். கடல் நீரினுள் தாவிப் பாய்ந்து குதித்தபோது அலையின் சுழலில் சிக்கி மண் குதிருக்குள் மாட்டிக் கொண்டார். நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறு மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு கை கால்களை அசைக்க முடியாத நிலைக்கு ஆளானார். 19 வயதில் இந்த நிலைக்கு வந்த லான் புர்கர்ட்டிற்கு தற்போது 23 வயது ஆகிறது.

அவரது மண்டை ஓட்டில் சிறிய துளையிட்டு 0.15 அங்குல அகலம் கொண்ட ஒரு சிப் மூளைக்குள் பொருத்தப் பட்டது. 96 எலெக்ரோட்கள் கொண்ட அந்த சிப் லான் புர்கர்ட் நினைப்பதை _ எண்ண ஓட்டத்தை ஒரு கணினியின் மூலம் மொழிபெயர்க்கும் தன்மையுடையது.

எண்ண ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி ஆற்றலைத் தூண்டுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பின்னர் மூளைக்குள் பொருத்திய சிப்பின் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ளும் கணினியிலிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயலாற்றக்கூடிய ஒரு தூண்டி (ட்ரிகர்) அவரது வலதுகரத்தில் பொருத்தப்பட்டது. கணினியுடன் இணைக்கப்பட்ட தூண்டியின் மூலம் அவரது கையின் தசைகளைச் செறிவுடன் தூண்டக் கூடிய சமிக்ஞைகளை (சிக்னல்) உள்வாங்கி, அந்தக் கட்டளைகளின்படிச் செயலாற்றும் ஒயர் இணைப்புகள் கொண்ட ஒரு பட்டை அவரது வலது கையில் கட்டப்பட்டது.
இந்த நவீன சிகிச்சையின் மூலம் கையின் ஒரு விரலையாவது அசைக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், எண்ணத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலைச் செயல்படுத்த முயன்றபோது, திறந்திருந்த வலது கையினை முழுமையாக மூடி முஷ்டியாக்கவும், மூடிய கையினை மீண்டும் திறந்து வெறுங்கையாக்கவும் செய்ததுடன், விரல்களை அசைத்து ஒரு கரண்டியையும் எடுத்து மருத்துவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

மூளை பாதிப்படைந்து உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலிருக்கும் பக்கவாத நோயாளிகளை மீண்டும் செயல்பட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன் திருப்புமுனையான மருத்துவப் புரட்சியையும் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கூட மருத்துவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *