குறுந்தொடர் – 1
– ப.ரகுமான்
கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது எண்ணெய் பூமி. ஈரானுடன் சண்டை, குவைத் ஆக்கிரமிப்பு, சதாம் எழுச்சி – வீழ்ச்சி, அமெரிக்க முற்றுகை என்று கடந்த முப்பதாண்டுகளாக உலகச் செய்தியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஈராக்கில் அண்மையில் உள்நாட்டுப் போர் என்று புதியதோர் மேகங்கள். ஈராக்_சிரியா விடுதலை, நகரங்கள் வீழ்ச்சி என்று தொடரும் இந்தப் பிரச்சினைகளில் உண்மையின் பின்புலம் என்ன? விளக்குகிறது இந்த குறுந்தொடர்.
மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு ஈராக். சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் வளமிக்க நாடும்கூட. மெசபடோமிய வண்டல் சமவெளி, ஜாக்ரோஸ் மலைத்தொடர்கள், சிரியா பாலைவனம், வடக்கு பெர்சிய வளைகுடாவை ஒட்டி (58 கிலோமீட்டர் நீளம்) கடற்கரை என வேறுபட்ட நில அமைப்புகளை உள்ளடக்கிய நாடு. வடக்கில் துருக்கியும், கிழக்கில் ஈரானும், தென்கிழக்கில் குவைத்தும், தெற்கில் சவுதி அரேபியாவும், தென்மேற்கில் ஜோர்டானும், மேற்கில் சிரியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. யூப்ரடிஸ், டைகரிஸ் என இருபெரும் ஆறுகள், வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, ஈராக்கின் மய்யப் பகுதியைக் கிழித்துக்கொண்டு ஓடுகின்றன. இதனால் பாலைவனம், ஸ்டெப்பி புல்வெளி என்பதோடு வளமான வேளாண் நிலங்களும் ஈராக்கில் உள்ளன. ஈராக்கின் புராதனப் பெயரான மெசபடோமியா என்பதற்கு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள நிலம் என்று பொருள்.
நாகரிகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் நாடுகளில் ஈராக்கும் ஒன்று. உலகிற்கு எழுத்துமுறையை வழங்கிய நாகரிகமும் ஈராக் தான். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியான நாகரிக வரலாற்றைக் கொண்ட தேசம். அக்கேடிய, சுமேரிய, அஸ்ஸிரிய மற்றும் பாபிலோனியப் பேரரசுகளின் கீழ் இருந்து வந்துள்ளது. சஸ்ஸானிய, ரோமானிய, உம்மாயத், அப்பாஸிய, மங்கோலிய, ஓட்டோமானிய பேரரசுகளின் கீழும் இருந்து வந்துள்ளது. இந்த நாகரிக வரலாற்றுக்கு பிரிட்டிஷ் அடிமைத்தளை முற்றுப்புள்ளி வைத்தது.
1932இல் பிரிட்டிசா ரிடமிருந்து ஈராக் விடுதலை பெற்றது. 1958இல் முடியாட்சி வீழ்த்தப்பட்டு, ஈராக் குடியரசு உருவானது. அதிலிருந்து பாத் எனப்படும் கட்சிதான் 2003ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருந்தது. அமெரிக்கா, -இங்கிலாந்து தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2003இல் ஈராக்கை ஆக்கிரமித்து பாத் கட்சி மற்றும் சதாம் உசேனின் ஆட்சியை வீழ்த்தின. பல கட்சி நாடாளுமன்ற முறை உருவாக்கப்பட்டு, அமெரிக்கச் சார்பு ஆட்சி அமைக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறின.
அமெரிக்காவில் 1970களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல், 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா ஏன் ஈராக்கிற்குள் புகுந்தது என்பதையோ, அதன் அவசியமான தொடர்ச்சியாக தற்போது உக்கிரமடைந்துள்ள உள்நாட்டுப் போர் பற்றியோ புரிந்துகொள்ள முடியாது. ஈராக் மட்டுமல்ல, ஈரான், சிரியா, லிபியா உள்ளிட்ட எண்ணெய் வள நாடுகள் அமைந்துள்ள, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் தற்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதும் அவசியம் என்பதால், முதலில் அந்தப் பின்னணி கூறப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் -டாலர் பிணைப்பு
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முதலாளித்துவ நாடு எனும் அமெரிக்காவின் நிலை 1970களில் ஆட்டம் காணத் தொடங்கியது. அதிகரிக்கும் சர்வதேச போட்டி, எரிசக்தி (கச்சா எண்ணெய்) விலை அதிகரிப்பு, உற்பத்தித் திறன் மற்றும் லாப விகிதத்தின் வீழ்ச்சி, பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரிப்பு என பன்முகத் தாக்குதல்களுக்கு ஆளானது அமெரிக்கப் பொருளாதாரம். வர்த்தகப் பற்றாக்குறையும், அரசின் நிதிப் பற்றாக்குறையும் மற்றொரு புறம் அச்சுறுத்தியது.
இதன் விளைவாக அமெரிக்க நாணயமான டாலரின் மீதான நம்பகத்தன்மை சர்வதேச அளவில் சரியத் தொடங்கியது. டாலர் இருப்பு வைத்திருந்தவர்கள் அதைத் தங்கமாக மாற்றிக் கொள்ள முயற்சித்ததால், அமெரிக்க அரசின் தங்கக் கையிருப்பு வேகமாகத் தீரத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட 44 நாடுகள் கூடி, 1944ஆம் ஆண்டில், பிரட்டன் உட்ஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் = 35 அமெரிக்க டாலர்கள் என டாலருக்கு நிரந்தரமான மதிப்பை வரையறுத்தன. அதாவது டாலரில் விலை நிர்ணயிப்பது என்பது, தங்கத்தின் அடிப்படையில் விலையை நிர்ணயிப்பதற்குச் சமம். இதன் மூலம் தங்கமும், டாலரும் ஒன்று எனும் நிலை கொண்டுவரப்பட்டது. வியட்நாம் போரில் அமெரிக்கா பேரிழப்பைச் சந்தித்து, 1970களில் அதன் பொருளாதாரமும் ஆட்டம் காணத்தொடங்கிய போதுதான், மேற்குறிப்பிட்ட சரிவு உருவானது. இதைச் சமாளிக்க, அமெரிக்கா ஓர் அதிர்ச்சி நடவடிக்கையை எடுத்தது. முதலில் தங்கத்துடனான டாலரின் மதிப்பைக் குறைத்தது; பிறகு 1973இல் இனி டாலரை தங்கமாக மாற்ற முடியாது என அடாவடித்தனமாக அறிவித்தது. அப்போது அதிபராக இருந்தவர் நிக்சன் என்பதால், நிக்சன் அதிர்ச்சி வைத்தியம் என இதைக் குறிப்பிடுவதுண்டு. இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வைத்தியமாகவும், பிற நாடுகளின் பொருளாதாரத்திற்கு நோயாகவும் மாறிப்போனது.
இனி டாலர், தங்கத்திற்கு நிகரானது அல்ல என்ற நிலைமை ஏற்பட்டபோதும், சவுதி அரேபியா, ஈரான், வெனிசுலா உள்ளிட்ட கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்) ஏற்றுமதி நாடுகள் அமெரிக்க டாலரிலேயே எண்ணெய் விலை நிர்ணயத்தைத் தொடர்ந்தன. உலகளவில் செல்லுபடியாகக் கூடிய மாற்று நாணயம் ஏதும் இல்லாதது இதற்கு மிக முக்கியக் காரணம்.
(எரியும்)