கல்வியறிவின்மை:
கிராமம் 35%, நகரம் 40% (யு என் அறிக்கை 2012)
ஏழ்மை: கிராமம் 35.7%, நகரம் 23.07%, (திட்டக்குழு அறிக்கை, ஜூலை 23, 2013)
ஏழ்மை நாடுகள் வரிசையில் 72ஆம் இடம்.
ஊட்டச் சத்தின்மை காரணமாக இறப்பு:
ஆசியாவில் 2ஆம் இடம்,
உலகத்தில்7ஆவது இடம்.
பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள்: ஒரு இலட்சத்துக்கு 1407
1 முதல் 4 வயதுக்குள் இறப்பு :
ஒரு இலட்சத்துக்கு 19.50
தாய் சேய் இருவரும் இறப்பு: 1000க்கு 58
வேலையின்மை: 20%, நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளோர் 77%.
இந்த அவல நிலையில் உள்ள இந்தியாவில் கிடந்தது கிடக்கட்டும், கிழவியைச் சிங்காரித்து மணையில் வை என்ற தோரணையில் கங்கை நீரைத் தூய்மைப்படுத்த, சீரமைக்க 2037 கோடி ரூபாயை புதிதாக வந்த மத்திய பி.ஜே.பி. ஆட்சி நிதிநிலை அறிக்கையில் தூக்கிக் கொடுத்துள்ளது.
ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பார்கள். ஆனால் இங்கோ ஆயிரக்கணக்கான கோடிகள்!
வறுமையும், கல்வியின்மையும், வேலையின்மையும் கைகோர்த்துக் கூத்தாடும் இந்தியாவில் கங்கை என்னும் சாக்கடையைச் சுத்திகரிக்கும் வேலையில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது பா.ஜ.க. ஆட்சி.
இதற்கு என்ன காரணமாம்? இதற்கான விடை பி.ஜே.பி.யின் 16ஆவது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் அறிக்கையில்
Cultural Heritage: Ganga: River Ganga is a symbol of faith in India, and has a special place in the Indian psyche. It is Mukti dayini. In addition it is also Jivan dayini for the parts of the country it flows. People and cattle depend on it for agriculture, fodder and drinking water. Pure water of the Ganga are thus essential for the spiritual as well as physical well being of India.
Unfortunately however, even after decades of independence, the Ganga continues to be polluted and is drying. BJP commits to ensure the cleanliness, purity and uninterrupted flow of the Ganga on priority. In addition, a massive ‘Clean Rivers Programme’ will be launched across the country driven by people’s participation.
கங்கை என்பது இந்தியாவின் கலாச்சாரச் சின்னமாம் _ புனிதத்தின் உறைவிடமாம். முக்தி அடைவதற்கான மூலமாம்.
நதிகளையும் மலைகளையும் கடவுள்களாகக் கருதி கற்காலத்துக்கு இந்தக் காவிகள் பயணம் செய்வதாகத் தெரிகிறது.
இந்தியாவில் கங்கை மட்டும்தான் உள்ளதா? நூற்றுக்கணக்கான நதிகள் வழிந்தோடுகின்றன. அவற்றிற்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம் கங்கைக்கு மட்டும் ஏன்? முக்தியைக் கொடுக்கும் முச்சலிகை கங்கைதான் இடுப்பில் செருகிக்கொண்டு இருக்கிறதா?
வாஜ்பேயி தன் கவிதை ஒன்றில்,
கங்கையைப் பார்ப்பதே ஞானம்
அதன் ஓட்டத்தில் இந்தியக் கலாச்சாரம் மிளிரும்
அதன் ஓசையில் வேதங்கள் கேட்கும்
தூய நீரில் மகான்களைத் தரிசிக்கலாம்
அதன் வேகத்தில் இதிகாசங்களின் இதயத் துடிப்பு தெரியும் என்று எழுதுகிறார்.
இந்துத்துவ சிந்தனையாளர்களின் பார்வை இதுதான்!
இயற்கையை மதத்துடன் கலந்து மாசுபடுத்திவிடுவர்.
இந்துக்களும் கங்கையும்
கங்கை இந்திய தீபகற்பத்தின் கால்பங்கு நிலப்பகுதியை வளமாக்கும் நதி. அன்றும் இன்றும் இந்தியாவின் பெருவாரியான மக்களின் முக்கியத்தொழில் விவசாயமே: இந்த விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் கங்கைதான் தங்களின் வாழ்விற்கும் மரணத்திற்கும் காரணம் என்று நினைத்துவிட்டனர். இதையே மதவாதிகள் தங்களின் லாபகரமான முதலீடில்லாத தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். விளைவு, கங்கையில் உடல்களை வீசுவது. இன்றளவும் கங்கையில் பிணத்தின் சிறுதுண்டையாவது வீசவேண்டும் அப்போதுதான் செத்துப்போனவரின் ஆத்மா(?) சாந்தியடையும் என்று பரப்பிவிட, சிறு துண்டு என்ன, முழு உடம்பே போகட்டும் என்று வீசிச் சென்று விடுகின்றனர். இந்த நம்பிக்கை ஆழமாக ஊறிப் போய்விட்டது. இதில் சாஸ்திரம், புராணம் என்று பல்வேறு புனைக்கதைகளை உருவாக்கி கடவுளர்களோடு இணைத்துவிட்டனர்.
ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் பிணங்களை கங்கையில் போடவிடாமல் தடுப்பது இந்துமத விரோத நடவடிக்கையாகும்.
முக்கியமாக கும்பமேளா!!
கங்கையில் 5 ஆண்டுகளில் சேரும் மாசு கும்பமேளா காலத்தில் மட்டும் சில நாட்களிலேயே சேர்ந்துவிடுகிறது. கும்பமேளா சமயத்தில் மூழ்கி எழுபவர்களில் தற்போதைய பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவை சகாக்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1980-களில் சமவெளியில்தான் கங்கை கந்தலாகத் தொடங்கியது. ஆனால் தற்போது தொடங்கும் இடத்தில் இருந்தே (கோமுகி) சிக்கல்தான். கோமுகி சிகரத்தில் உள்ள கிளேசியர் எனப்படும் பனிக்கட்டிகளில் பல்வேறு மாசுப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாதரச மூலக்கூறுகளும் அடங்கும் என்ற செய்தி பல்வேறு இயற்கை ஆர்வலர்களின் உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமா-? சாமியார் ராம்தேவ் பாபா கங்கை வரும் மலைப்பாதை முழுவதையும் வளைத்துப்போட்டு வாங்கிவிட்டார். பல்வேறு மூலிகைத் தோட்டங்கள், கேளிக்கை விடுதிகள் என்ற பெயரில் கங்கையின் இரு கரைகளிலும் உள்ள இயற்கை வனங்களை அழித்து செயற்கை வனங்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.
இப்படி உருவாகும் செயற்கை வனங்களுக்கான வேதி மருந்துகள் மண்ணோடு கலந்து கங்கை நீர் வழியாக சமவெளியை அடைகின்றன.
மரணமடைந்த துறவி
கங்கா மாதா, புனிதவதி என்று அழைத்துக் கொண்டே பல காவித் தலைவர்களே கங்கையை வன்கொடுமைக்கு ஆளாக்கினர். கங்கை நதிக்கரையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், சுரங்கங்கள், இயற்கை வன அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கங்கை மலைப்பகுதிகளிலேயே அசுத்தமாகிவிடுகிறது. இதைக் கண்டித்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா (வயது 36), சாகும் வரை உண்ணாவிரதமிருந்து 11.06.2011 அன்று செத்தும் போனார்.
சுவாமி நிகமானந்தா சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரமத் தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார். ஆளும் பி.ஜே.பி. அரசு அவரது உண்ணாவிரதத்தைக் கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு நிகமானந்தாவைக் கொன்று விட்டது என்று சொல்கிறார்கள். இந்த ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்ப்பனப் பத்திரிகைகளும் இவரைப் பற்றி செய்திகளை வெளியிட்டு மக்கள் ஆதரவை இவருக்குத் தேடிக் கொடுக்கவில்லை.
சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்சிக்க வில்லை. கங்கை தன்னுடைய வரலாற்றில் குறைந்தபட்சம் 10 லட்சம் உயிர்களையாவது பலிவாங்கி இருக்கும். ஆனால் அந்த கங்கைக்காக முதன்முதலாக உயிர்விட்ட ஒரு சாமியார் இவராகத்தான் இருப்பார். 2000 கோடி செலவு செய்யும் அளவு கங்கையில் என்னதான் இருக்கிறது?
அதை அசுத்தப்படுத்தியது யார்? உலகில் மிகவும் அசுத்தமான 10 ஆறுகளின் பட்டியலில் இந்துத்துவாவாதிகள் தூக்கிச் சுமக்கும் இந்தப் புனித கங்காதேவி இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறாள். ஆண்டு ஒன்றுக்கு காசி நகரில் 33 ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பாதி எரிந்ததும் எரியாததுமான பிணங்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன.
800 டன் மயான சாம்பல் கங்கையில் கரைக்கப்படுகிறது. கங்கையில் பிணங்கள் மிதப்பதும் பார்ப்பதும் கூட புண்ணியமாம். அதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கைக் கரையில் காத்துக் கிடக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வாடகைப் படகுகளில் சென்று கங்கை நீரில் மிதக்கும் பிணங்களைப் பார்த்துப் பக்திப் பிரவாகித்துத் திரும்புகின்றனர்.
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னால் ஆத்திரம் கொப்பளிக்கும் ஆன்மீகவாதிகள் _ இந்தச் செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
கங்கை அய்ந்து மாநிலங்களில் தனது ஓட்டத்தை நடத்துகிறது. 750க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் இயங்குகின்றன. கான்பூரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் குடிகொண்டுள்ளன. இவற்றின் கழிவுநீர் முழுவதும் கங்கை நீரில்தான் கலக்கின்றது. காசி நகரில் 2 இலட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுத் தொழிற்சாலையின் அத்தனைக் கழிவுகளையும் ஆலிங்கனம் கொள்வது இந்தக் கங்கா தேவிதான். காசி நகரின் 20 மில்லியன் காலன் சாக்கடை நாள்தோறும் கங்கையைத்தான் முத்தமிடுகிறது.
படிக்கும்பொழுதே குடலைக் குமட்டுகிறதா?
தப்பு, தப்பு! இது இந்துக்களுக்கான புனித கங்கா ஜலம்!
கங்கை ஏதோ 2500 கி.மீ. பயணம் செய்து வங்காள விரிகுடாவில் சங்கமம் அடைகிறது என்று எளிதாக நினைத்துவிட வேண்டாம். இந்தப் பின்னணியில் உள்ள புராணக் கதைகளைக் கேட்டால் அதன் தெய்வீக தரிசனத்தை அகக் கண்களால் ஆராதித்தால் அப்பப்பா அதனைச் சொல்லுந்தரமன்று!
கங்கை யார் தெரியுமா? இமய மலையின் மகளாம். (அப்பா யார் என்று கேட்டுவிடாதீர்கள்!)
கங்கை, கேவலம் இந்தியாவில் மட்டும்தான் பாய்கிறது என்று நினைக்க வேண்டாம். வானிலும் இது பாய்கிறதாம். அங்கு பாயும்பொழுது மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும்பொழுது போகநதி என்ற நாமகரணம்!
வானிலே பாய்ந்து கொண்டிருந்த கங்கையை பூமாதேவியிடம் கொண்டுவர பகீரதன் கடும் தவம் இருந்தானாம். அவன் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டதாம். அதன்படி கங்கை பூமியில் பொங்கிப் பாய்ந்த வேகத்தை பூமாதேவியால் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம்!
மீண்டும் பகீரதனின் கடும் தவத்திற்கு இரங்கி சிவன் கங்கையைத் தன் தலையில் சூடிக் கொண்டானாம். அந்தக் கங்கையின் ஒரு சொட்டுதான் பூமியில் ஓடிக் கொண்டுள்ளதாம். அந்தக் கங்கையே கண்ணீர் விட்டாளாம். பாவம் செய்த மக்கள் எல்லாம் குளிப்பதால் நான் அத்தனைப் பாவங்களையும் எங்கே போய்த் தொலைப்பேன் என்று பிரமனிடம் கங்கா தேவி கெஞ்சினாளாம். அப்படியா! அதற்கொரு பரிகாரம் சொல்கிறேன் கேள் என்றான் பிரமன். துலா யுகத்தின் கடைசி நாளில் பூலோகத்தில் உள்ள மயூரத்தில் காவிரி நதிக்கரை ஓரத்தில் உள்ள விஷ்ணு கட்டத்திலும் சிறீரங்கத்தில் ஓடும் காவிரியிலும் முழுக்குப் போட்டால் நீ சுமக்கும் ஒட்டுமொத்தப் பாவங்களும் ஒரே நொடியில் மாயமாய் மறைந்துவிடும் என்றானாம் பிரமன். (சங்கராச்சாரிகள் கும்பமேளாவிற்குச் சென்று கங்கையில் முழுக்குப் போடுகிறார்கள் என்றால் சும்மாவா? அவ்வளவு பாவங்கள் செய்துள்ளார்கள்.)
ஏற்கெனவே அவன் பைத்தியக்காரன். அவன் சாராயமும் குடித்திருந்த நேரத்தில், அவனைத் தேளும் கொட்டிவிட்டால் எப்படியெல்லாம் உளறுவானோ அதைவிட 1000 மடங்கு உளறலாக அல்லவா இருக்கின்றன இந்தப் புராணக் குப்பைகள்!
பக்திப் போதை தலைக்கு ஏறினால் நம் நாட்டுப் படிப்பும் பட்டங்களும் பதுங்குக் குழிக்குள் போய்விடாதா?
இந்தியாவில் பிரதமரும் அமைச்சர்களுமே புரையோடிப் போன இந்தப் பக்திக்கு இரையாகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் கங்கை புனிதத்தைக் காப்பாற்றிட கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழும் கோமாளித்தனங்கள்!
கங்கை நதியைத் தூய்மைப்படுத்திட கடந்த 28 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு கொட்டி அழுத தொகை 1100 கோடி ரூபாய். ஆனாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லையே!
1927, 1963, 1970 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய நதி என்னும் சாக்கடையால் தொற்றுநோய் கடுமையாகத் தாக்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் குழந்தைகள் மரணம் 1000க்கு 94 என்றால் இந்த வட்டாரத்திலோ 1000க்கு 134 ஆகும். மும்பையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அக்குழுவில் இடம்பெற்ற டாக்டர் ஜெகன்நாத் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 20 முதல் 30 ஆயிரம் மக்கள் வரை பித்தநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மும்பையில் டாடா நினைவு மருத்துவமனையில் பித்த நீர்ப்பை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலோர் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதிக்கரை ஓரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கங்கையில் நச்சுக்கலவைக் கழிவுநீர் அதிகம் கலப்பதால் கங்கை நதிக்கரையில் உள்ள நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமான இரும்புச் சத்தும் நச்சுப் பொருள்களும் மலிந்துள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மற்றொரு அருவருக்கத்தக்க தகவலும் உண்டு. அண்மையில் சுவிட்சர்லாந்து அரசு ஓர் ஆய்வு நடத்தி உலக சுகாதர நிறுவனத்திடம் சமர்ப்பித்தது. அதில், அய்ரோப்பிய நாடுகளில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டிருப்பதால், ஆன்மீகப் பயணம் என்ற பெயரில் பல அய்ரோப்பிய இளைஞர் இளைஞிகள் வட இந்திய நகரங்களான வாரணாசி, ஹரித்துவார், ரிஷிகேஸ், அலகாபாத் போன்ற நகரங்களுக்கு வந்து, கடவுளின் பிரசாதம் என்று கருதப்படும் கஞ்சா உடன் அபின், ஹெராயின் மற்றும் சரஸ் போன்ற போதை வஸ்துக்கள், ஊசிகள் தங்குதடையின்றி சாமியார் மடங்களில் கிடைக்கின்றன. போதை ஏறிய பிறகு பாதுகாப்பற்ற உறவு கொள்கிறார்கள். இதனால் புனித கங்கை ஓடும் பகுதிகளில் வாழ்வோரிடையே எய்ட்ஸ் நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை அதிகம். கங்கையின் புனிதத்தைக் காக்க மக்கள் பணத்தை ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டும் பக்தர்கள் – இதனால் காதொடிந்த ஊசி முனை அளவுக்கு நாட்டு மக்களுக்கு நற்பயன் என்று கூறமுடியுமா?
வேண்டுமானால் பார்ப்பனர்கள் பொறுக்கித் தின்னப் பயன்படலாம்.
அதே நேரத்தில் தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டபொழுது இந்தக் கூட்டம் என்ன கூறியது?
தமிழ் செம்மொழியானால் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்க்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர், வாரமலர் 13.6.2004) என்று எழுதியது தினமலர்.
திரும்ப நாம் கேட்க முடியாதா? கங்கை நீரைச் சுத்தப்படுத்தினால் வீட்டுக்கு வீடு சிக்கன் பிரியாணி கிடைக்குமா?
கல்கி இதழ் என்ன சொன்னது தெரியுமா? கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதலமைச்சர்?
பதில்: எல்லாம் கிடக்க, கிழவியை மனையில் அமர்த்திய கதைதான். (கல்கி 27.1.2008) தமிழ் அர்ச்சனை மொழி ஆவது பற்றிக் கேட்டபொழுது தமிழ் அர்ச்சனையால் விலைவாசி குறைந்து விடுமா என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கூறினாரே! (திருச்சிராப்பள்ளியில் 15.11.1998).
இவர்களை எல்லாம் நாம் திருப்பிக் கேட்க முடியாதா? கங்கையைச் சுத்தப்படுத்தினால் வீட்டுக்கு வீடு கழிவறை வந்து குதித்து விடுமா?
ஒன்றை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று முடக்கிய இந்திய பார்ப்பனிய சங்பரிவார் – பி.ஜே.பி. யினர் கங்கையைச் சுத்தம் செய்ய கோடிக்கோடியாகக் கொட்டுகிறார்கள்.
மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டமான சேதுசமுத்திர திட்டத்திற்கே வெறும் 2427.2 கோடி ரூபாய். ஆனால் சாக்கடை கங்கையைத் தூய்மைப்படுத்தவோ 2037 கோடி ரூபாயா? செலவைப்பற்றிக் கவலையில்லை என்கிறார் இத்துறைக்கான அமைச்சர் உமாபாரதி. காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் கடந்த ஞாயிறன்று (6.7.2014) செய்தியாளர்களிடம் பி.ஜே.பியின் அந்தரங்கத்தை அப்படியே அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டிவிட்டாரே.
வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பும், பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்த பிறகும் நரேந்திரமோடி என்ன செய்தார்? கங்கைச் சென்று பூசை, புனஸ்காரங்களில் ஈடுபட்டாரே? இது எதைக் காட்டுகிறது? கங்கை நீர் சுத்திகரிப்பை இந்துத்துவா திட்டமாக ஆக்கும் முயற்சியில் பி.ஜே.பி.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
பி.ஜே.பி ஆட்சி என்பது இந்துத்துவா ஆட்சியே தவிர அரசமைப்புச் சட்டப்படியான மதச்சார்ப்பற்ற ஆட்சியல்ல! அந்தவகையில் இது சட்ட விரோத ஆட்சியே.
கங்கையை எப்படிச் சுத்தப்படுத்துவார்கள்?
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பிணங்களையும் சுட்டெரித்த சாம்பலையும், கிழடான பசுக்களையும் ஜீவமுக்தி அடைவதற்காக என்று சொல்லி கங்கையில் வீசி எறிவதைத் தடுத்தாலொழிய கங்கையைச் சுத்தப்படுத்த முடியுமா? இதைச் செய்யாதவரை கங்கை புனரமைப்பு என்பது அசல் ஏமாற்று வேலையே! உண்மையிலேயே கங்கையைத் தூய்மைப்படுத்தவேண்டுமானால் இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
செய்வார்களா? செய்யமாட்டார்கள். காரணம், இவர்கள் இந்துத்துவாவாதிகளாயிற்றே… கங்கையில் சாம்பலைக் கரைத்தாலோ முழுப் பிணத்தையோ சிறு உடல் துண்டையோ கங்கையில் வீசினாலோ ஆத்ம சாந்தி, ஜீவமுக்தி இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிற்றே…! அசல் இரட்டை வேடம்!
நரமாமிச அகோரிகள்
கங்கைக் கரையோரம் இருக்கும் காசி நகரை நினைவுகூறும்போது, அகோரி எனப்படும் விநோத சாதுக்கள் நம் கவனத்தில் வருவதைத் தவிர்க்க முடியாது. பைரவர் அவதாரமாக தங்களைக் கருதிக்கொள்ளும் இவர்கள், மயான சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்கள். மனித மண்டையோடு, எலும்புகள் சகிதம் காணப்படுகிறார்கள்.
இதைவிட அதிர்ச்சி… பாதி எரிந்தும், எரியாமலும் கங்கையில் வீசப்படும் பிணங்களை எடுத்து வந்து அதற்கு ஆத்மசாந்தி பூஜை நடத்தி, மனித சதைகளைப் பிய்த்துத் தின்னும் நரமாமிசப் பழக்கத்துக்குச் சொந்தமானவர்கள்.
பலவித நோய்களை நீக்கும் சக்தியை இவர்களுக்கு கடவுள் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. முற்றும் துறவறம் பூண்டு வாழும் இவர்களில் பலர், யோகக் கலைகளிலும், ஆசனங்களிலும் கைதேர்ந்தவர்கள், போதைப் புகைக்கு அடிமையானவர்கள்-ஆடைகளையும் துறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புராண அளப்புகள்
ஒரு கோவிலுக்கோ, குளத்துக்கோ, நதிக்கோ முக்கியத்துவத்தை உண்டாக்க வேண்டுமானால் சில அற்புதங்களைத் தல புராணங்களாகக் கட்டிவிட வேண்டும்.
அந்த வகையில் கட்டி விடப்பட்டுள்ள மகத்துவங்கள் மண்ணையும், விண்ணையும் தொடும்.
தினமலரிலிருந்தே (4.11.2002) இதோ ஓர் எடுத்துக்காட்டு:
கலிங்க நாட்டில் வாகீசர் என்ற பிராமணர் இருந்தார். இவர் வேதம் படிக்கவில்லை. ஆச்சாரங்களைப் பின்பற்றுவதில்லை. உப்பு, எண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்தார். சாஸ்திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களை இவர் தைரியமாகச் செய்வார். பாப காரியங்கள் செய்ய அஞ்சுவதே இல்லை. இப்படிப்பட்டவர் ஒரு நாள் காட்டிற்குச் சென்றபோது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இவரது உடலின் மாமிசங்களைக் கழுகுகள் தின்றன. அதில் ஒரு கழுகு அவரின் கணுக்கால் கட்டு எலும்பை மூக்கினால் தூக்கிக் கொண்டு சென்றது. காசி நகரில் கங்கை நதியைக் கடந்து செல்லும்போது வேறு கழுகுகளுக்கும், இந்தக் கழுகிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது வாகீசரின் உடல் எலும்பு கங்கை நதியில் விழுந்துவிட்டது.
அதுவரை நரக லோகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வாகீசருக்கு, கங்கையில் அவரின் உடல் எலும்பு விழுந்ததால் பரிகாரம் ஆகிவிட்டது. உடன் எமதர்ம மகாராஜா சித்ரகுப்தரைக் கூப்பிட்டு வாகீசரின் எலும்பு கங்கையில் விழுந்ததால், அவரின் பாபங்கள் விலகிவிட்டன. அதனால், இவரைச் சொர்க்கலோகத்திற்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவாயாக என தெரிவித்தார். அதனால் காசியில் தெரிந்தோ தெரியாமலோ அஸ்தி போடப்பட்டால் பாபம் விலகுகிறது. அதே நேரத்தில் முறையான சாஸ்திர சம்பிரதாயங்களுடன் அஸ்தி கரைக்கப்பட்டால், அந்த அஸ்தியின் சொந்தக்காரருக்கு புண்ணியலோகம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் காசியில் அஸ்தியைக் கரைப்பது புண்ணியம் என்று கூறப்படுகிறது.
(தினமலர் 4.11.2002)
மேற்கண்ட தகவல்கள் எதைத் தெரிவிக்கின்றன? எந்தக் கொடிய பாவங்களைச் செய்தாலும், கங்கையில் மூழ்கினால் அல்லது இறந்தபின் அவனது உடலின் எந்தப் பாகமாவது கங்கையில் விழுந்தால் புண்ணியம் கிடைக்குமாம். அப்படி என்றால் பாவங்கள் செய்ய யார் பயப்படுவார்கள்? பாவம் செய்யத் தூண்டுவதுதான் மதமா?
இதனால் ஒழுக்கம் வளருமா? அறிவு வளருமா? அழியுமா? சிந்திப்பீர்!
– கவிஞர் கலி.பூங்குன்றன்