கருடனும் கருநாகமும்

ஜூலை 01-15

 

– ப.உ.சண்முகம்

திராவிட இயக்கப் பேச்சாளர்களுள் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும் மேல்சபை உறுப்பினராகவும், அமைச்ச ராகவும் பதவிகளை வகித்துள்ளார்.

கோடையிலே வாடி குளிர் நிழலில் அமர்ந்து கூவும் குயிலும், கதிரவன் ஒளியை மறைத்திடும் கார்முகில் கண்டதும் கலாபம் விரித்தாடும் மயிலும், அம்புலியின் அழகைக் கண்டதும் சிரிக்கும் அல்லியும், பனிபோக்கும் பகலவனைக் கண்டதும் பல்லிளிக்கும் தாமரையும், காலத்தின் கரத்தால் பூவெல்லாம் காயாவதும், பருவத்தின் சேட்டையால் காயெல்லாம் பழமாவதும், இயற்கையின் விளையாட்டுகள் என்று எவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால்…. பச்சை மரமாயினும் அதிகமாக உராய்ந்தால் தீ பிடிப்பதைப் பார்த்துப் பழகிய சமுதாயம் பருவத்தின் பொலிவால் எழிலோடு விளங்கும் வாலிபர்கள் உராய்தல் கூடாது; உராய்ந்தாலும் உறவு கொண்டாடக் கூடாது;  உறவு கொண்டாடினாலும் உரிமை கோரக் கூடாதென்று கருதுகிறது! காலம் தனது தந்திரக் கரங்களால் …இல்லை… மந்திரக் கரங்களால் கள்ளமில்லா கண்களிலே காந்த ஒளியையும், சின்னஞ்சிறு கன்னங்களிலே சிங்கார வண்ணத்தையும், அரும்புப் பற்களிலே அழகிய தோற்றத்தையும், பால் மணக்கும் வாயினிலே இனிக்கும் பழச்சாற்றினையும், மழலை உமிழும் இதழ்களிலே மன்மதக் களஞ்சியமாம் புன்னகையையும், சின்ன இடைகளிலே மின்னல் அழகையும், சிந்தையைக் குறிரச் செய்யும் சிங்காரச் சிரிப்பிலே சஞ்கிதச் சுவையையும் சேர்ப்பதோடா விட்டு விடுகிறது? இல்லை….  தான் மாற்றியமைத்த உருவங்களை சந்திக்கச் செய்வதும், சந்தித்தவர்களின் பந்தத்தை வளர்ப்பதும் நாள் நடத்தும் நாடகமாகி விட்டதே! இந்த நாடகங்களிலே கண்ணீரும் புன்னகையும் மாறி மாறி வருவதும் _ மணக்கோலமாகப் பலவும், பிணக்கோலமாக பலவும் முடிவதும் சாதாரண காட்சிகளன்றோ?

ஆனால் மணக்கோலமுமின்றி பிணக்கோலமுமின்றி முடிபவைகள்கூட உண்டு என்று நீங்கள் அறியமாட்டீர்கள்.

சாந்தாவின் காதல் நாடகமே இதற்கு சாட்சி!

பூத்த மலலெல்லாம் காயாவதில்லை; காய்ப்பதெல்லாம் கனியவதுமில்லை; கனியாவதெல்லாமே சுவைப்பதுமில்லை. அதே போல்தான் சந்திக்கும் இளம் உள்ளங்களெல்லாம் காதல் கொள்வதில்லை;  காதல் கொண்டவரெல்லாம் களிப்பெய்துவதுமில்லை; களிப்பெய்தியோர் எல்லோர் வாழ்வுமே நிலைப்பதுமில்லை!

காதல் _ சுவை சொட்டும் இச்சொல்லை ஏட்டில் படிக்கும்போது ஏற்படும் இன்பம் வீட்டில் பார்க்கும்போது ஏற்படுவதில்லை. கோபம் கொப்பளித்து வருவதும், இருமபுத் திரையிட்டு அழிக்க முயல்வதும் வாடிக்கையாகக் கொண்டுள்ள நம் சமுதாயத்தில்தான் காதலர்களாயினர் சாந்தா _ சந்திரன் இருவரும்!

சாந்தா _ ஏழையின் குடிசையிலே நடமாடும நிலா! தாயற்றவள் என்ற வாட்டம் தீண்டாதவாறு தாண்டவராயன் பாதுகாத்து வளர்த்த கலைப்பேழை அவள்!

சந்திரன்_மாடிவீட்டு மலர்! வனப்பும் வளமான உடற்கட்டும் கொண்ட இக்காளை மாணிக்கம் செட்டியாருடைய ஏக வாரிசு. ஆதலால் சுகத்திலேயே வளர்ந்தான்.

தாண்டவராயன் மாணிக்கம் செட்டிய்ர் வீடு நெடுநாள் வேலைக்காரன். அவன் மட்டுமல்ல; மாண்டுவிட்ட அவன் மனைவி மங்களம் மயானம் சென்று ஓய்வு பெறும்வரை மாணிக்கம் செட்டியார் வீட்டில் மாடாய் உழைத்தவள். மாணிக்கம் செட்டியாரின் மனைவி மரகதத்தின் அந்தரங்க வேலைக்காரி!

செட்டியார் வெறும் சீமான் மட்டுமல்ல; காலத்தையொட்டி கதர்க் குல்லாய் போட்டவர். காந்தி படத்துக்கும் நேரு படத்துக்கும் இடையில் தனது படத்தை மாட்டி மகிழும் மனோபாவம் கொண்டவர். சாதி ஒழிப்பு சங்கம் என்று ஒன்றை நிறுவி அதற்குச் செயலாளராக இருந்து வருபவர்.

சந்திரன் _சாந்தா! தென்றலிலே நீந்திடும் அத்தேன் சிட்டுகள் காதலர்களானார்கள், காவிய அகராதிப்படி!

எனினும் தாலி தொங்கும் கயிற்றால் பிணைக்கப்படாததால் அவர்கள் காதல் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆயினும் அவர்கள் மனக்கோட்டை நிர்மாணித்து, அருகே கற்பனைத் தடாகம் தோண்டி, அதிலே களிப்போடு நீராடி வந்தனர். போராட வேண்டிய அளவிற்கு சமுதாயம் பயங்கரமானது என்பதை அவர்கள் அறியவில்லை. காரணம், சந்திரன் தந்தைதான் சாதி ஒழிப்புச் சங்க செயலாளராயிற்றே!

சந்திரன் நடத்தையிலே சந்தேகம் கொண்டார் செட்டியார். அவன் போக்கைக் கவனிக்க ஆரம்பித்தார்…. புரிந்து கொண்டார்! வேலைக்காரன் மகள் தன் மகன் மடியில் படுத்து காதற் கதைகள் பேசுவதை அவரே கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்…. திடுக்கிட்டார்!

தங்கத் தொடடிலிலே தகர பொம்மை!

செட்டியார் மகன் மடியிலே நாயுடு மகள்!

சாதி உணர்ச்சி செட்டியார் உள்ளத்திலே நாகமாகியது! வீடு திரும்பினார்… நெடுநேரம் சிந்தனையை செலவிட்டார்! கடைசியில் மகனுக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்.

தகப்பனாரின் முயற்சி தனயனுக்குத் தெரிந்தது. வெள்ளம் வரும முன்னே அணை போட வேண்டும என்பதை அறிந்த சந்திரன் தகப்பனார் எதிரில் போய் நின்றான்.
அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார்.

அப்பா, எனக்காக பெண் தேடுவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?

ஆமாம்…. பெண் தங்க நகை மட்டும் போட்டு வந்தா போதாது பாரு. அவள் நிறமும் தங்கமா இருக்கனுமில்லே! அதுக்காகத்தான் அலையறேன். நீயோ எனக்கு ஒரே பையன். கண்ணுக்கழகா கல்யாணம் செய்து பார்க்கலாம்னு ஆசை… உங்க அம்மாவோ வர்ர மருமக தன்னைவிட அழகா இருக்கனும்னு சொல்றா… நேற்று ஒரு பெண்ணைப் பார்த்தோம். ஒரே பொண்ணு _ லட்ச ரூபா சொத்து இருக்கு _ என்னா பண்றது? பெண் கருப்பு! இன்றைக்கு ஒரு பெண் பார்த்தோம். சொத்து இல்லை. அட சொத்து இல்லாவிட்டாலும் போகுது; பொண்ணு அழகா இருந்தா போதும்னு பார்த்தேன். கண்ணு சரியாயில்லை!

அப்பா… அவ்வளவு சிரமம் தங்களுக்கு வேண்டாம். இதோ இந்த முகவரிக்குப் போங்கள். எனக்குப் பிடித்தமான பெண் இருக்கிறாள். அவளை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்.

தாண்டவராயன்,
27, தெரிய தெரு

என்னடா, இது.. நம்ம வீட்டு வேலைக்காரன் விலாசமல்லவா இது?
ஆமாம்! அவர் மகள் சாந்தா!

என்னடா… விளையாடுகிறாயா?

விளையாட்டா? உங்களிடமா? உண்மையைத்தான் சொல்கிறேன்.அவளைத்தான் நான் மணப்பேன்!

அதுதான் முடியாது!

ஏன்? ஏழையென்று பாக்கிறீர்களா? ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை பாரத நாட்டில் இருக்கக்கூடாதென்று எத்தனையோ முறை நீங்களே பேசியிருக்கிறீர்களே!

ஏண்டா அவள் யாரு… நம்ப யாரு… யோசிச்சியா?

யாரா?… என்ன சொல்கிறீர்கள்?

என்னவா? அவள் என்ன சாதி… நாம்ப என்ன சாதி?

சாதியா? நீங்களா பேசுகிறீர்கள்? சாதி ஒழிப்புப் சங்க செயலாளர் நீங்களப்பா!

செயலாளரா இருந்தா.. சொந்தம் பந்தம் எல்லாம் விட்டுடறதுன்னு அர்த்தமா?

அப்பா, நீங்கள் இப்படிப் பேசுவதைக் கேட்டால் ஊர் சிரிக்கும். சாதி கூடாதென்று உபதேசம் செய்துவிட்டு இன்று சாதிக்காக வாதாடுகிறீர்கள்! அப்பா… திட்வட்டமாச் சொல்லி விட்டேன். மணந்தால் அவளைத்தான் மணப்பேன். இல்லையெல்… இல்லை என்பதற்கு இடமேயில்லை… நீங்கள் சம்மதிக்கா விட்டால், சாதி ஒழிப்பு சங்கச் செயலாளர் சாதி வேற்றுமையால்தான் இணங்க மறுத்தார் என ஊர் அறியச் செய்து விட்டு, சட்டத்தின் துணை கொண்டு அவளை மணந்தே தீருவேன்!

என்னடா மிரட்றே?

மிரட்டவில்லை. உண்மையைத்தான் சொல்லுகிறேன். யோசித்துப் பாருங்கள்; பத்து வருட காலமாக சாதி ஒழிப்புச் சங்கம் நடத்தி வருபவரா இப்படிப் பேசுவது? சாதியை ஒழிக்க காந்தி கையாண்ட விதங்களை விளக்கீனீர்களே _ அவர் மகனுக்கு பெண் தந்த ராஜாஜியைப் பாராட்டினீர்களே _ கலப்பு மணம் என்றாலேயே முன் நின்று நடத்தினீர்களே _ இப்போது ஏன் பின் வாங்குகிறீர்கள்?

செட்டியார் தடுமாறினார்.

சாதி ஒழிப்புப் சங்கம் ஒரு விளம்பரப் பலகை என்பதை அறியாத பிள்ளையிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தார்.
ஆமாம்… சரி… தாண்டவராயன் சம்மதிக்கணுமே….

கேட்டு விட்டேன்…. நீங்கள் சம்மதித்தால் போதும்!

தாண்டவராயன் பேரில் பழி போட திட்டமிட்டார் செட்டியார். முடியவில்லை… உலாவினார்… யோசித்தார்…. எதைச் சொல்லித் தடுப்பது என்று ஆராய்ந்தார். மகனோ மிஞ்சி விட்டான்; மறுத்தால் மானம் போய்விடும்…. யோசித்தார்…. ஏதேதோ அவர் மனதில் பட்டது. அமைதியோடு ஆரம்பித்தார்.
சந்திரா! வேண்டாம்; அந்தப் பெண்ணை மறந்துடுடா!

முடியாது…..

நான் சொன்னா அதிலே ஆயிரம் அடங்கியிருக்கும்டா; சொல்றதைக் கேளு!
அப்பா… அவளை மறப்பேன் என்பதை மறந்து விடுங்கள்!
நான் சொல்றேன்….

யார் சொன்னாலும் முடியாது!

அப்பா சொன்னா அதிலே ஏதோ இருக்கும்னு உன்னாலே….
எது சொன்னாலும் சரி… சாந்தாவை மறக்க முடியாது!
நான் மறுத்தால்…?

மறுத்தால்… மறுநாளே பதிவுத் திருமணம்!
வேண்டாமடா… பிடிவாதம் செய்யாதே!
வேண்டாமடா… பிடிவாதம் செய்யாதே
முடியாது….

டேய், அவளை யாருன்னு நினைச்சுக்கிட்டே…?

இதுவரையில் என் காதலி_இனிமேல் என்  மனைவி!

என்ன காதலியா? தங்கச்சியாடா காதலி?

என்ன? தங்கையா? சாந்தா என் தங்கையா?

ஆமாண்டா ஆமாம்; சாந்தா எனக்குப் பிறந்தவள்! அதனால்தான் அவளைச் செல்லமாக நான் அழைப்பது… உபசரிப்பது! ஆகையாலே நீ அவளை மறந்துதான் தீரவேண்டும்

அப்பா… தாண்டவராயன் மகள் உங்கள் மகளா?

ஆமாம்… மங்களம் எனது வைப்பாட்டி! உனக்குப் புரியாதுடா மகனே, பெரிய இடங்களில் எல்லாம் இதைப் போல ரகசியம் அதிகம் இருக்கும்டா!

தடான்று கதவைத் திறந்துகொண்டு தாண்டவராயன் உள்ளே நுழைந்தான்.

செட்டியாரே! என்ன சொன்னீர்? என் மனைவி உங்கள் வைப்பாட்டியா? செல்வச் செருக்கா; அல்லது சாதித் திமிரா? ஏழையென்றால் எது வேண்டுமென்றாலும் பேசலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? சீமானே! சாதி ஒழிப்புச் சங்கத் தலைவரே… கேள்… என் மனைவிமீது மாசு கற்பித்தீர்! ஆனால் நீர் அறியமாட்டீர் சந்திரன் யாரென்று. உங்கள் கார் டிரைவர் கந்தசாமியின் மகனையா அவன்!

உமது மகனுக்கு மட்டுமல்ல; உமக்கும்கூடப் புரியாதையா; பெரிய இடங்களில் எல்லாம் இதைப் போல ரகசியம் _ வெட்கக் கேடான ரகசியம் அதிகம் இருக்குமய்யா!
டேய், என்ன சொன்னே? என்று சீறினார் செட்டியார்.

நிறுத்து… போய்ப்பார் தோட்டத்திலே… கந்தசாமி தலைக்கு உன் பெண்சாதி தைல் தேய்க்கிறாள்! என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் தாண்டவராயன்.

செட்டியார் கருடனைக் கண்ட கருநாக மானார்! முகத்தை மறைத்துக் கொண்டார் தன் கரங்களால்! விரல்கள் வழியாய் வழிந்த நீர் தரையை நனைத்தது!

நன்றி: முரசொலி பொங்கல் மலர், 1958

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *