வியாபாரியும் பிக்காரியும்

ஜூலை 01-15

– மதிமன்னன்.சு

2014இல் இந்தியாவுக்கு ஒரு பிரதமரைத் தந்திருக்கும் குஜராத்தில் ஒரு பழமொழி உண்டு. ஜெனோ ராஜா வியாபாரி _ எனி பிரஜா பிக்காரி என்பது பழமொழி. உங்கள் மன்னன் வியாபாரி ஆனால் மக்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் என்பது அதன் பொருள். வியாபாரி எனும் குஜராத்திச் சொல் தமிழில் எப்படி இடம்பெற்று தமிழ்ச் சொல் என்றே கருதப்பட்டு வருகிறது? பிக்காரி எனும் சொல் என் நண்பர்களால் வசவுச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது 1970களில்! எப்படி இது நிகழ்ந்தது? அதுதான் இந்தியாவின் பன்முகத் தன்மையின் விளைவு எனலாமோ?

 

மூன்றுமுறை குஜராத்தின் மன்னராக இருந்த வியாபாரி இந்தியாவின் மாமன்னர் ஆகிவிட்டார். மக்கள் பிக்காரிகளாக நீடிப்பார்களா? அல்லது அவர்களும் வியாபாரிகளாக மாற்றப்படுவார்களா? 125 கோடியில் மதச் சிறுபான்மையரைத் தவிர, பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தவர்களாவது வியாபாரிகளாக மாற்றப்படுவார்களா? அவர்களுக்காக மட்டும்தானே, இந்திய மாமன்னர் ராஜ்ய பரிபாலனம் செய்வார்? அப்படித்தானே பிரச்சாரம் செய்யப்பட்டது? அவர்களின் ராஜநீதி அப்படிப்பட்டதுதானே! 2002இல் இந்தவகை ராஜநீதியைத்தானே மாமன்னர் நடத்திக் காட்டினார்! வெளிப்படையாக வெடித்திருப்பாரே, வாஜ்பேயி! அத்வானி தடுத்து ஆட்கொண்டார்! இப்போது அனுபவிக்கிறார்.

கொல்கத்தாக் கோளாறு

283 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு முசுலிம்கூட இல்லையே! குஜராத் சட்டமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட அதே நிலையை இந்தியா முழுமைக்கும் கொண்டு வருவதற்கு ஆசைப்பட்ட ஆர்.எஸ்.எசின் ஆள்தானே இப்போது மாமன்னர்! இப்போது இந்தியாவில் நாம் ஆட்சியைப் பிடித்துவிட்டால் 25 வருஷம் நாம்தான்! இப்போது பிடிக்காவிட்டால் இன்னும் 100 வருஷத்திற்குப் பிடிக்க முடியாது என்று எச்சரித்தாரே மோகன் பாகவத்! கடந்த ஆண்டு ஆகஸ்டில் கொல்கத்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்பில்! அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபாரிதான் மோடி! இப்படி எல்லாக் கசுமாலங்களும் காணக் கிட்டுவது கொல்கத்தாவில்தான். வரலாற்றைப் பாருங்கள், இந்து மதத்தைக் காப்பாற்ற, வேதங்களின் பெருமையைத் தூக்கிப் பிடிக்க என்று பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் தோன்றியது அங்கேதான். இந்துமதத்தவர்க்குத் துப்பாக்கிச் சுடுதல் போன்ற வன்செயல் பயிற்சிகள் அளிக்கப்படத் தொடங்கியது அங்கேதான்! கேசவராம் பலிராம் ஹெக்டேவர் பயிற்சி எடுத்ததும் அங்கேதான்!

இராணுவத்திலேகூட இந்து எனும் உணர்வு வளர்க்கப்பட வேண்டும் என்று பரிட்சித்துப் பார்க்கப்பட்டதும் அங்கேதான்! இப்போது ஆர்.எஸ்.எஸ். ஆட்சியைப் பிடித்துவிட்டது. அவர்கள் கணக்குப்படி இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர்களை ஆட்டமுடியாது அசைக்கவும் முடியாது! என்கிறார்கள்.

குஜராத் இப்படித்தான்

நவராத்திரிக் கொண்டாட்டப் பாடல்களில்கூட பாகிஸ்தானை வசைமாரி பொழியும் பாடல்களைப் புதிது புதிதாகப் புனைந்து பாடும் குஜராத்திகளின் வியாபாரி தலைமையில் அமைந்துள்ள இந்திய ஆட்சி அவ்வளவு காலம் நீடிக்குமா? பாகிஸ்தானுக்குப் பக்கத்து மாநிலமாக இருந்தாலும்கூட, ராஜஸ்தானைப் போல இந்து மன்னர்களோ இசுலாமிய மன்னர்களோ ஆண்ட பகுதியல்ல குஜராத். வணிகப் பரம்பரையினரின் நீதியும் நிருவாகமும்தான் அங்கே நடந்துள்ளது. ஜாதிகூட அங்கு ஆதிக்கம் செலுத்தும் தன்மை குறைவு என்கிறார்கள். மெஹ்சனா நாடாளுமன்ற தொகுதித் தேர்தல் 1980இல் நடந்தபோது, பட்டேல் ஜாதியைச் சேர்ந்த ஆத்மாராம் பட்டேல் என்பவர் பார்ப்பன வேட்பாளரிடம் தோற்றுப் போன செய்தியைக் கூறுகிறார்கள். அந்தத் தொகுதியில் பட்டேல் வாக்காளர்கள் 3 லட்சம். பார்ப்பன வாக்காளர்கள் ஒரு லட்சம் மட்டுமே! அந்த அளவுக்குப் பார்ப்பனச் செல்வாக்கு!

புகையிலை விற்பவர்களும் எண்ணெய் விற்பவர்களும் எலெக்ஷனுக்கு நிற்க ஏன் ஆசைப்படுகிறார்கள்? என்று திமிர்வாதம் பேசிய திலக் பம்பாயில்தான் இருந்தார். ஆனால் அம்மாநிலத்தின் ஒரு பகுதியாக விளங்கிய குஜராத்தில் வாணிய செட்டியார் ஜாதியைச் சேர்ந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்திய மாமன்னராக வந்துவிட்டார். திலக்கின் பிணம் கல்லறைக்குள் நெளியுமோ? வாய்ப்பில்லை அவர் உடலைத்தான் எரித்துவிட்டார்களே! வேறு பழமொழியை ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும்.

மதவெறி மாநிலம்

ஆனாலும் குஜராத்திகளின் மதவெறி மிகப் பிரசித்தம். பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டு கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருக்கும் குஜராத்திகள் முசுலிம்களை கடும் வைரிகளாகவே பார்க்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே புகழ் பெற்று விளங்கிய மூன்று குஜராத்திகளில் _ (காந்தி, ஜின்னா, பட்டேல்) ஒருவர் முசுலிம் என்பதாலோ? அத்தகைய பகையுணர்வு பெருக்கெடுத்து விம்மும் 56 அங்குல மார்பளவுக்காரரின் மனதிலும் வருங்காலங்களில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ? காலம்தான் காட்டும்.

கைராட்டையையும் கதர்த் துணியையும் அடையாளங்களாகக் கொண்ட காந்தியின் குஜராத்தில் பாலியஸ்டர் துணித் தொழிலைத் தொடங்கி லட்சங் கோடிகளைக் குவித்துவிட்ட திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி போன்ற துணிச்சல்மிக்க தொழில் அதிபர்கள் அங்கே ஏராளம். மோடி எனும் வியாபாரி ஆண்டதால் கவுதம் அடானி, ராஜேஷ் அடானி, சிரஸ் பூனாவாவா, சஞ்சய் லால்பாய், உதய் கோடக், அமித் பட்டேல், திலிப் சங்வி எனப் பல்துறைப் பணக்காரர்களின் பட்டியல் நீளும். எப்படி இப்படிப் பட்டியல்? சோப்டா பூஜை செய்து கணக்குப் புத்தகங்களைக் கும்பிட்டு வருவதாலா? தாளில் தைக்கப்பட்ட புத்தகங்களைக் கும்பிடுவதால் குபேரன் வந்துவிடுவானா? கணக்குப் புத்தகங்களின் உள்ளடக்கம் எப்படியோ, அப்படித்தானே வருமானமும்? புதிய கணக்கு தொடங்குவதும் கும்பிடுவதும் குஜராத்திகளுக்குத் தீபாவளியில்தான்! நரகாசுரனோ, கிருஷ்ணனின் பெண்டாட்டிகளில் ஒருத்தியோ அவர்களின் தீபாவளிக்குத் தொடர்பில்லை.

குஜராத்திக் கிரிமினல்கள்

குஜராத்தின் கிரிமினல் சைடுக்கு வருவோம்! செங்கல் அடுக்கி வைப்பதைப் போல ஆயிரம் ரூபாய்க் கட்டுகளையும் தங்கக் கட்டிகளையும் வைத்திருந்து 2010இல் கைது செய்யப்பட்ட கேதன் தேசாய் எனும் பார்ப்பனர் குஜராத்தி. 1971இல் தொலைப்பேசியில் இந்திராகாந்தி பேசுவது போலப் பேசி பாரத ஸ்டேட் வங்கியில் லட்சக்கணக்கில் பணம் எடுத்த மோசடிப் பேர்வழி ருஸ்தம் நகர்வாலா குஜராத்திதான். ஸ்டாக் மார்க்கெட்டில் தப்பாட்டம் ஆடிக் கோடிக்கணக்கில் முதலீட்டாளர்களுக்கு நட்டம் விளைவித்த கேதன் பாரேக், ஊழல் செய்து 5,600 கோடி நட்டம் விளைவித்து இந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட ஜிக்னேஷ் ஷா, கிரிக்கெட் சூதாட்டக்காரன் ஷோபன் மேத்தா, நிழல் உலக வணிக மோசடிக்காரன் பரத் ஷா, பங்குச் சந்தை மோசடிக்காரன் ஹர்ஷத் மேத்தா, ஆயிரக்கணக்கான பொய் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி மோசடி செய்த ரூபால்பென் பஞ்சால் (பெண்) போன்ற அனைவருமே குஜராத்திகளே!

கணக்குப் புத்தகங்களைக் கும்பிடுவது முக்கியமா? கண்க்குகளை நேர்மையாகப் பராமரிப்பது தேவையா? இந்தக் கேள்வியை எந்தக் குஜராத்தியும் கேட்டுக் கொள்வதில்லை. சோப்டா பூஜை நடந்து கொண்டிருக்கிறது.

பேரெடுத்த குஜராத்திகள்

உலகப் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஜூபின் மேதா குஜராத்தியே! காந்தி திரைப்படத்தில் காந்தி வேடத்தில் நடித்த பென் கிங்ஸ்லி குஜராத்திதான்.

இவரது இயற்பெயர் கிருஷ்ண பண்டிட் பாஞ்சி என்பது. தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஆலிவுட் படங்களில் நடித்த பெர்சிஸ் கம்பாட்டா எனும் நடிகையும் குஜராத்தியே. தீபாமேத்தாவுடன் இணைந்து செயல்படும் கதாசிரியர் பாப்சி சித்வா எனும் பெண்ணும் குஜராத்திதான்! தென்ஆப்ரிக்காவின் உலகப் புகழ் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஹஷிம் அம்லா குஜராத்திதான்! குஜராத்தின் பலன்புக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தான் சென்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்டட் குஜராத்திதான்! இம்மாதிரிப் பட்டியலும் நீண்டதுதான்.

பிற்போக்கும் – முற்போக்கும்

மற்றொரு வியாபாரப் பிரிவான மார்வாரிகளைப் போலன்றி குஜராத்திகள் கடல் கடக்கக் கூடாது என்று முடங்கிவிடவில்லை. ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்று வணிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனாலும் மரக்கறி உணவுப் பழக்கத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள். பொது ஆண்டு 1143 முதல் 1173 வரை குஜராத்தை ஆண்ட குமாரபால் எனும் மன்னன் சமண மதத்திற்கு மாறி உயிரை உணவுக்காகக் கூடக் கொல்லக்கூடாது என்று பிரகடனப்படுத்தியதன் விளைவு அவர்கள் காய்கறி உணவுகளைச் சாப்பிடுவது! இந்தச் சமண மதத்தின் தாக்கத்தால்தான் குஜராத்தி ஜெயின்கள் தம் வருமானத்தின் ஒரு பகுதியை இல்லாத மக்களுக்கு உதவுவதில் செலவிடும் பண்பு உருவாகியுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதும், கால்நடைகள் காப்புச் சாலைகள் கட்டுவதும் இத்தாக்கத்தின் வெளிப்பாடுகள்தாம். ஜெயின் உணவு என்பதேகூட தனியானது.

இசுலாமியரின் ஹலால் உணவு, யூதர்களின் கோஷர் உணவு போல இதுவும் தனிவகை. இதற்கென உணவு விடுதிகள் உண்டு. உணவு விடுதிகளில் தனிப் பிரிவும் உண்டு. இத்தகைய பத்தாம் பசலித்தனம் இருந்தும்கூட, குஜராத்திகளிடையே உள்ள முற்போக்கு எண்ணம் பாராட்டிப் பின்பற்றத்தக்கது. மூன்று மாதங்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய ஒப்பந்தத் திருமணங்கள் குஜராத்தில்தான் முதன்முதலில் நடந்தது. மைத்ரி கறார் எனும் உறவுமுறை குஜராத்தில் உண்டு. அதாவது சம்பிரதாயமான மணமுறையை மேற்கொள்ளாமல் சேர்ந்து வாழும் முறை அங்கே நிலவுகிறது. திருமணமாகாத பெண்கள், நவராத்திரி உற்சவத்தின்போது இரவு முழுவதும் நடனமாடும் பழக்கமும் உண்டு. பெற்றோர் அவர்களைக் கண்கொட்டாமல் காவல்காப்பது கிடையாது. ஓரினச் சேர்க்கையாளன் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள ராஜ்பிபால அரச வமிசத்தைச் சேர்ந்த மனவேந்த்ர சிங் கோஹில் குஜராத்திதான். பிற்போக்கும் முற்போக்கும் கலந்த கலவை குஜராத் என்றால் மிகையல்ல. அவற்றுள் எது மிகை என்பதைக் காணவேண்டும். இந்தக் கலவைக் கனவான்தான் இந்திய மாமன்னராக வந்துள்ளார்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *