காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்….

ஜனவரி 16-31 - 2014

நரையாய் பூமுகத்தில் – புன்னகை
நரம்பின் நார்களா
இடிமின்னலைப் புடம்போட்ட – இல்லை
எரிமலையின் வேர்களா

மூடத்தனக் காய்கள் – உச்சி
மலையேற எத்தனிக்க
ஒற்றுதலின்றிக் கருவறுத்த – நீ
ஒற்றைத்தாயம் நாயகரே

கைபர் போலன் – சிறு
கணவாய் வழிபுகுந்த
ஆரிய முகத்திரையை – கிழித்தீர்
அறிவொளிப் பெரியோனே

நாத்திக பூமியை – உன்
நெற்றிக்கண்ணில் சுழலவிட்டு
ஆத்திகக் குடுமியவிழ – அவா
ஆத்திரத்தில் தீயிட்டாய்

தூபக்கால் தீபக்கால் – கண்டு
தொப்பென்று விழுந்தவனுக்கு
யானைக்கால் பயணமிட்டீர் – எழுப்பி
ஞானப்பால் புகட்டத்தான்

ஆலிங்கன லீலைகளால் – இங்கே
ஆகுதி புகையெரிக்கும்
விபூதி பூதங்களுக்கு – அதன்
விலாவொடிய உடுக்கடித்தீர்

நெய்யிலும் நீரிலும் – பேதமா?
நியாய வாதமிட்டு
பொய்யின் புரவலருக்கு – நூல்
பெய்யும் புலவரானீர்

கையிருந்தும் களவா – உயர்
கற்பிதம் சொல்லி
மெய்யது உள்ளவரை – உயிர்
மெய்யாய் வாழ்ந்தீர்

சமத்துப் பேச்சில் – உனது
சமத்துவ வீச்சிருக்க
கரையேறும் கலப்புமணம் – நீதான்
கலங்கரை விளக்கிருக்க

பாட்டாளி மகனுனக்கு – தைப்
புத்தாண்டு பொங்கலா
பட்டுடுத்த தொகையில்ல – பொருமுறேன்
புதுப்பானை கலங்கலா

கல்லைத் தொழுதே – ஒரு
கல்லாமைப் பிண்டமா
மண்டூகமா நிற்பதென்ன – இன்னும்
மண்டியிட்ட முண்டமா

மந்திர எந்திரங்கள் – அட
மாந்திரிக அனுசரணையா
விஞ்ஞான யுகாந்திரத்தில் – சூன்யத்துக்கு
வெஞ்சாமர உபசரணையா

வயற்காட்டு மகசூல் – நூறு
விழுக்காடாம் போடா
தன்னலமென்ற ஊழலிருக்க – ஆகாது
தன்னிறைவு நாடா

தொடுத்தாரே கேள்விகளை – ஏதும்
தோனலையா காரணமா
எழாத பிணத்துக்கு – அடே
ஏழடுக்குத் தோரணமா

எருதுபூட்ட உழுமோ – கேளீர்
எங்கேனும் நுகத்தடி
பார்ப்பனியத்தைக் களையெடுக்க – நின்
போர்வாளே கைத்தடி

வீதியில்லா ஊரும் – உந்தன்
விதிநின்று பாடும்
காதில்லாப் புராணம் – அன்று
காததூரம் ஓடும்.

– சேரங்குலத்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *