அய்யா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அய்யா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் பேசிய பேச்சாளர்களுள் பலர்,
அய்யா அவர்கள் ஈரோட்டில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். ஈரோட்டிற்கு அய்யா அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. அய்யா காசு விசயத்தில இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது. கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும் என்று அய்யாவின் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள்.
கூட்டம் முடியும்போது பேசிய அய்யா அவர்கள், நான் காசு பணம் விசயத்தில ரொம்பக் கணக்குப் பார்க்கிறேன்னு பேசியவர்களில் அதிகமானோர் சொன்னார்கள். நீங்கள் என்னை வாழ்த்தியபோது, அய்யா 100 வயசு வரையில் இருக்கணும், 101 வயசு வரையிலும் வாழணும் அப்படினுதானே வாழ்த்தினீர்கள். ஏன் லட்சம் வருசம் உயிரோடு வாழணும், அய்யா கோடி வருசம் வரை இருக்கணும்னு வாழ்த்தலே?
நீங்க சும்மா வாழ்த்தறதிலேயே ஒரு கணக்குப் பார்க்கறீங்க. கஞ்சத்தனம் காட்றீங்க இது பணம், காசு விசயம்கூட இல்லை. சும்மாவே வாழ்த்தப் போறீங்க _ அப்படியிருக்க என்னைப் பார்த்துக் கணக்குப் பார்க்கறீங்கன்னு சொல்வது நியாயமா? என்று கேட்டாராம்.
– நூல்: மேதைகளின் கருத்துக் களஞ்சியம்