யார் இந்த வடலூரார்?
ஈரோட்டுப் பெரியார் என்றால் அனைவரும் அறிவர். ஏன் பெரியார் என்றாலே அது 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற மானிடப் பற்றாளர் தந்தை பெரியார் அவர்களையே குறிக்கும். அதேபோல், வடலூர்ப் பெரியார் என்பவர் யார்?
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தாம் அவர். வள்ளலார் என்றாலே போதும்! அனைவரும் அறிவர். பெரியாரோடு வள்ளலாரை ஒப்பிடலாமா? வடலூர்ப் பெரியார் என்று வள்ளலாரையும் தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது ஏன்? அப்படிக் கூறலாமா? கூறுவது சரியா?
கூறலாம்; சரிதான் என்பதை அவரது திருவருட்பா ஆறாம் திருமுறைப் பாடல்கள் வழி அறிந்து கொள்ளலாம்.
சிந்தனை செய், மனமே!
நாம் இப்போது, வள்ளலாரின் அருட்பாக்களைத் தள்ளிவைத்து விட்டு அவரது எழுத்து, பேச்சு இவற்றின் அடிப்படையிலும் வடலூரார் பெரியார் கருத்தை ஒட்டிப் பேசியவர்; எழுதியவர் என்று எடுத்துக்காட்ட இருக்கிறோம். இருவருமே உலகளாவிய _ மானிடம் தழுவிய சிந்தனையாளர்கள் ஆவர் என்பதை நாம் மனம்கொளல் வேண்டும்.
ஒன்றுபட்ட கருத்து உடைமை
இருவரும் கீழ்க்கண்டவற்றுள் ஒத்த கருத்துடையவராகவே விளங்கினர். அவை, மத எதிர்ப்பு, வேத, ஆகம, புராண, சாத்திரம் _ இவற்றை எதிர்த்தல்; வர்ணாசிரமம் ஒழிப்பு; ஜாதி ஒழிப்பு; மூடநம்பிக்கைகள் ஒழிப்பு; பெண்ணியப் பெருமை; உலகளாவிய கொள்கை; தொண்டறம்; சமனியக் கோட்பாடு; மாந்தப்பற்று.
வேறுபட்ட கருத்துகள்
கடவுள், புலால் உண்ணுதல்.
வள்ளல் பெருமானின் வழிமுறைகள்
வள்ளலார், 1. தந்தை பெரியார் போலவே தமது கொள்கைக்கென ஒரு தனி நெறி கண்டவர் _ சமரச சன்மார்க்கம் சுயமரியாதை _ பகுத்தறிவுப் பாதை _ பெரியார்.
2. தந்தை பெரியார் போலவே தமது நெறிக்கு என, ஒரு தனி அமைப்புக் கண்டவர். பெரியார் _ சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம். வள்ளலார் _ சமரச சன்மார்க்க சங்கம்.
3. தந்தை பெரியார் போலவே, தமது நெறிக்கு _ இயக்கத்துக்கு என, தனிக்கொடி அமைத்தார். பெரியார் _ கருப்பு வண்ணத்தின் மய்யத்தில் வட்ட வடிவில் சிவப்பு வண்ணம். வள்ளலார் _ மேலே மஞ்சள்; கீழே வெண்ணிறம்.
4. தந்தை பெரியார் போலவே, தம் நெறிக்கென தனி முழக்கம் உருவாக்கினார். பெரியார்: கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.
வள்ளலார்: அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை.
வள்ளலார் தனி நிறுவனம் வகுத்தது ஏன்? 1925இல் நடைபெற்ற காஞ்சி காங்கிரசு பேரவைக் கூட்டத்தில் தனக்கு மரியாதை _ மதிப்பு இல்லை; தரப்படவில்லை: கொள்கையை மதிக்கவில்லை என்று அதிலிருந்து வெளியேறி, பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்டார். அதுபோல, சிதம்பரம் கோவிலில் வழிபடச் சென்ற வள்ளலார் ரசசிய லிங்கத்தைக் காட்டுமாறு தீட்சதர்களைக் கேட்டார். அங்கே போய்ப் பார்க்க விரும்பினார். நீ சூத்திரன், உள்ளே பிரவேசிக்கக்கூடாது; இங்கு வராதே, போ வெளியே! என்று கூறி மறுத்தனர் தீட்சதப் பார்ப்பனர்கள். வள்ளலாருக்குப் பெருஞ்சினம் வந்தது. இதற்கு _ சிதம்பரத்துக்கு எதிராக, நானே ஒரு சிதம்பரத் தலத்தை உருவாக்குகிறேன் பார்! என்று அறைகூவல்விட்டு வடலூரில் உத்தர ஞானசபை சிதம்பரம் என்னும் அமைப்பை நிறுவினார் 1872 ஜனவரி 25இல். இது கோவில் அன்று; சபை! கடவுள் இல்லை, இல்லை; அர்ச்சகர் இல்லை.
வள்ளலார் ஞானசபையில்,
1. தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். ஏனெனில் எளிமையானது. 2. பித்தளைக் குத்துவிளக்கு வேண்டாம். பித்தளைக் குத்துவிளக்கு இருந்தால் அது இந்துமத வழிபாட்டுப் பொருளாகிவிடும் என அறிவித்தார். திருநீறு அளிக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.
வந்துவிட்டான்யா! வந்துட்டான்!
ஞான சபைக்குள் மெல்ல மெல்ல நடைநடந்து ஆரியம் புகுந்துவிட்டது; பார்ப்பனியம் தன் பணியைப் பரப்பத் தொடங்கி விட்டது; வேதாகமப் பயிற்சி பெற்ற அரூர் சபாபதிக் குருக்கள் என்கிற பார்ப்பனர் வள்ளலாரிடம் வந்து ஞானசபையில் தங்க அனுமதி கேட்டார். மனிதநேயம் காரணமாக வள்ளலார் அனுமதி வழங்கினார். அவ்வளவுதான்! ஆரியத்தின் கால்கோள் நடத்தப்பட்டுவிட்டது.
கைவரிசை காட்டினார்!
குருக்கள் மெல்ல ஜோதி வழிபாட்டைப் புகுத்தினார். பூணூல் அணிந்தார்; குலாச்சாரங்கள் பின்பற்றினார்; பிறரையும் பின்பற்றச் செய்தார். ஆதரவு அணி திரட்டினார்! பார்த்தார் வள்ளலார்! எல்லாம் தமது நோக்கம் _ செயல்பாட்டுக்கு மாறாகப் போகின்றன என்று அறிந்தார்.
வெளியே போ வேதியரே!
ஞானசபையிலிருந்து குருக்களை வெளியேறச் சொன்னார் வள்ளலார். இதற்கு இசைந்து போவதாகச் சொல்லி, வெளியேறாமல் அங்கேயே தங்கினார். பார்ப்பனியத்துக்கு நடைபாவாடை விரிக்கப்பட்டது; ஆரியம் வலுவாகக் காலூன்றியது.
தைப்பூசத் திருநாளிலே…
தைப்பூசத் திருவிழா வந்தது; வள்ளலார் விருப்பத்திற்கு மாறாக, சபாபதிக் குருக்கள் அழைப்பிதழ் அச்சடித்துப் பரப்பினார். அந்த அழைப்பிதழில், அருட்பெருஞ்சோதி ஆண்டவர், தனிப்பெருங் கருணை நாயகி சமேதராய்க் காட்சி தருவதைக் கண்டு பலன்பெற வேண்டும் என அச்சிட்டிருந்தார். அருட்பெருஞ்சோதியை ஆண்டவன் ஆக்கினார். தனிப்பெருங் கருணையை அம்பாள் ஆக்கிவிட்டார்.
போட்டாரய்யா பூட்டு
சபாபதிக் குருக்களின் வழிபாட்டு முறை, கடவுள், அம்பாள் வழிபாடு முதலியவற்றை எல்லாம் வள்ளலார் விரும்பவில்லை. எதுவும் வள்ளலார் விருப்பப்படி நடக்கவில்லை! ஞானசபை விதிமுறைகளை வள்ளலார் வகுத்துக் கொடுத்துப் பயன் இல்லை! வேதாகமங் களின்மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை. வள்ளலார் பெரும் சலிப்புற்றார்! வேறு வழி தெரியவில்லை! ஆரியமே வல்லாண்மை செலுத்தியது. பார்த்தார் வள்ளலார்! அவருக்கு ஒரே வழிதான் தெரிந்தது! ஞானசபையைப் பூட்டி அதன் திறவுகோலைத் தம்மிடமே வைத்துக் கொண்டார். அறிவுப் பேரவை (ஞானசபை) அவ்வளவுதான்! மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது! பாவம் வள்ளலார்!
சின்னஞ்சிறு வயதில்:
வள்ளலார்ஆவதற்கு முன் இராமலிங்கம் சிறுவயதில் துடுக்குத்தனம் காட்டினார். படிப்பு ஏறவில்லை; படிப்பைத் தவிர்த்தார். தந்தை பெரியார் நிலையும் இதேதான். அச்சிறு பருவத்தில்தானே, ஜாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரம் பொய் என்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து, அப்பருவம் ஏறும்தோறும் எனதறிவை விளக்கம் செய்து, என்னை மேனிலையில் ஏற்றி, ஏற்றி நிலைக்க வைத்தீர்! என்று எழுதுகிறார் வடலூர்ப் பெரியார்.
எனக்குச் சிறுவயது முதற்கொண்டு, ஜாதியோ மதமோ கிடையாது! அதாவது, நான் அனுஷ்டிப்பது இல்லை என்று ஈரோட்டு வள்ளலார் எழுதியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வியப்பாக இருக்கிறது.
ஏன் வள்ளலாருக்கு எதிர்ப்பு?
வள்ளலாரை, சைவர்கள் கடுமையாக எதிர்த்தனர்; அவரது திருவருட்பாவை மருட்பா என்றனர். ஏன் இத்துணை எதிர்ப்பு? _ என்பதை மருட்பா மறுப்பு _ என்னும் நூலில் உள்ள சில பகுதிகளைக் கீழே பார்ப்போமா?
1. இராமலிங்கம் பிள்ளையினாலே, அநேகச் சைவர்கள் சைவ சமயமும் பொய்; அதனை அனுட்டிப்பவர்களும் பொய்யர். அவ்வுண்மையை இராமலிங்கம் பிள்ளையால் கண்டுகொள்ளுங்கள் என்று கிறித்தவர் சொல்லிச் சொல்லித் திரிய அவற்றை நம்பி, சைவத்தை வெறுத்த சிலர் கிறித்தவராகவும், சிலர் புத்தராகவும், சிலர் நாத்திகர் ஆகவும் சென்றனர். வள்ளலார் செயல்பாட்டின் வலிமையைப் பார்த்தீர்களா? சைவர்கள் பாவம், அலறுகிறார்களே?
2. கருங்குழியை தேவார, திருவாசகங்களில் புத்த மதத்தைக் கண்டு அதற்கு எதிராகப் புத்தமதத்தைப் போற்றிக் கூறுகிறார்… எல்லோருக்கும் பொதுவான சமரச வேதம் என்றதை மெய்ப்பித்ததற்கே புத்த மதத்தையும் பிடகத்தையும் வியக்கின்றார். வியக்கின்றது மட்டோ?
புத்தமதத்தை அனுட்டிக்குமாறு உண்டாக்கிய போதன் என்னும் செத்தொழிந்த புத்தனையும் துதித்துக் கூத்தாடினார்! படித்தீர்களா?
தந்தை பெரியாரால் அறிவன்என்றும், அவரது கொள்கை அறிவுக்குச் சொந்தமான கொள்கை; அறிவுதான் குரு (ஆசான்) என்றே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் புத்தர்.
உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அந்தப்படி நட; அவர் சொன்னார், இவர் சொன்னார், இவ்வளவு பெரியவர் சொன்னார் என்பது கூடாது _ என்று அறிவுக்கு முழு உரிமை கொடுத்து புத்தர் சொன்னார் _ (விடுதலை 3.2.1954) என்று அய்யா பெரியார் பின்னாளில் போற்றிப் புகழ்ந்த அண்ணல் புத்தரை அந்நாளிலேயே வள்ளலார் போற்றி வந்தது மதவாதிகளுக்கு வெறுப்பும் எதிர்ப்பும் கடுப்பும் ஏற்பட்டதால்தான் இக்கொள்கையைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
செத்து ஒழிந்த புத்தன் _ என்று வசைமொழிந்துள்ளார்களே, புத்தன் மட்டுமா செத்து ஒழிந்தான்? இவர்களின் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், விறல்மீண்ட நாயனார், அப்பூதி அடிகள் முதலான சைவ அடியார்கள் எல்லாம் செத்து ஒழியாமல் இன்றும் உயிரோடுதான் உலவிக் கொண்டிருக்கிறார்களா? சொல்லத் துணிச்சல் உண்டா? காட்டத் துணிவு உண்டா? அறைகூவல் விடுக்கிறோம்.
அறிவைத் தரும் ஆசானே! என்ற பொருளில், புத்தம் தரு போதா! -_ என்று வள்ளலார் புத்தரைப் போற்றிப் பாடியது இந்த வறட்டுச் சைவர்களுக்குப் பிடிக்குமா? திட்டித் தீர்த்திருக்கிறார்களே வள்ளலாரை?
மத, வேத மறுப்புச் சிந்தனைகள்
வள்ளலார் பேசுவதைக் கீழே படியுங்கள்:
நாம் முன்பு கேட்டும், லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம். இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்!
_ (சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை 1873 அக்டோபர் 22இல் ஏற்றி ஆற்றிய உரைப்பகுதி.)
சீர்திருத்தச் சிந்தனைகள்:
கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும், சத்ய லோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
தெய்வத்துக்கு கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதிலைச் சொல்லத் தெரியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் உண்மையறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். _ (உரைநடை)
கடவுளையும், கடவுள் பரப்புநர்களையும் வள்ளலார் விட்டுவைக்கவில்லை! பொறுப்பார்களா மதம் பிடித்தவர்கள்?
பெண்ணியச் சிந்தனைகள்:
பெண்களுக்கு யோகம், பேதமற்று அபேதமாய், படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது.
முற்பிறவி மறுபிறவி மறுப்புச் சிந்தனைகள்:
ஒருவன் நிகழ்காலத்துக்கு முந்திய பிறப்பு என்றோ, இறந்த பின்பு மறுபிறப்பு என்றோ எதுவுமில்லை _ என்றார் வள்ளலார். இவற்றிற்குப் புதிய விளக்கம் தருகிறார் அவர்.
பூர்வஜென்மம் (முற்பிறவி) என்பது கர்ப்ப கோளவாசம் (கருப்பையில் இருந்த நிலை). உத்தரஜென்மம் (மறுபிறவி) என்பது, ஜனனகாலம் (குழந்தையாய்ப் பிறக்கும் நிலை). வள்ளலாரின் சீர்திருத்தச் சிந்தனைகள் இதுவரை ஒருவாறு பார்த்தோம். பெரியாரின் கருத்துகளைப் பெரும்பாலும் கொண்டிருந்திருக்கிறார். எனவே, ஏறத்தாழ வள்ளலாரை வடலூர்ப் பெரியார் என்று நாம் ஏன் அழைத்தல் கூடாது?