ஈரோட்டுச் சூரியன் – 18

செப்டம்பர் 01-15

பிச்சையெடுத்த இராமசாமி

– கவிஞர் மதுமதி

விஜயவாடா  வீதிகளில்
பார்ப்பனர்  இருவரும்
பஜனைப்  பாடல்களைப் பாடி
பிச்சை கேட்டனர்;
பாடல்களை ரசித்தவர்கள்
பிச்சை போட்டனர்;

விருப்பமில்லாத
இராமசாமி
இருவரையும் தொடர்ந்தார்;
கவலையில் படர்ந்தார்:
அரிசி பொங்கி
உண்டு உறங்கும் நேரம்
பார்ப்பனர் இருவரும்
புராண விவாதங்களில்
ஈடுபடுவர்;
இராமசாமியின் கேள்விகளைச் சமாளிக்க – படாத பாடுபடுவர்;
இதையும்
வழிப்போக்கர்கள்
ரசித்துப் பார்ப்பர்;
இராமசாமியின்
சொல்லாற்றலை
ருசித்துக் கேட்பர்;

இம்மூவரின்
பேச்சாற்றலைக் கண்டு
வியந்து போனவர்
முருகேச முதலியார்..
அம்முதலி யார்?

மூவரும் தமிழ்நாட்டவர்
என அறிந்ததும்
அன்பை அவர்களிடம்
செலுத்தியவர்;
யாசகம் செய்வது இயலாமை
எனும் சிந்தனைத் தீயைக்
கொளுத்தியவர்;
நானும் தமிழன்
என்றார்;
மூவரையும் வீட்டிற்கு
அழைத்துச் சென்றார்;

உண்ண  உணவும்
இருக்க இடமும் கொடுத்தார்;
யாசகம் செய்வதையும்
சத்திரத்தில்
உறங்குவதையும் தடுத்தார்;

காஞ்சிபுரம்
சென்றிருக்கும் மனைவி
வீடு திரும்பும் வரை
மூவரும்
இங்கேயே தங்கலாம்;
அரிசிதனைப் பொங்கலாம்;
சமைக்கலாம்..
சுவைக்கலாம்..

முதலியார் சொல்ல
மூவரும் தலையாட்டினர்;
பிறகு தங்கள்
வேலையைக் காட்டினர்;

காலையில் முதலியார்
வேலைக்குச் சென்றுவிடுவார்;
மூவரும்
யாசகம் செய்யச்
சென்று விடுவர்;
முதலியாருக்கு முன்னதாக
வீட்டிற்கு வந்து விடுவர்;

பொங்க
அரிசி கிடைத்தும்
தங்க
இடம் கிடைத்தும்
யாசகம் புரிவதை
மறக்கவில்லை;
முதலியார் சொன்னதையும்
மறுக்கவில்லை;

இது
முதலியாருக்குத்
தெரிய வந்தது;
அது அவருக்குக்
கோபத்தைத் தந்தது;

– சூரியன் உதிக்கும்…

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *