பேனா, பென்சில், சாவி, ரிமோட் போன்ற சிறிய பொருள்களிலிருந்து முக்கிய ஆவணங்கள், பணம் போன்றவை வரை அனைத்தையும் வைத்த இடத்தினை மறந்துவிட்டுத் தேடுவதிலேயே அதிக நேரத்தை நம்மில் பலர் செலவு செய்கிறோம். நேரம் வீணாவது மட்டுமன்றி, தேவையில்லாத மன உளைச்சல், அதனால் பிறர்மீது கோபப்படும் சூழல் ஏற்படுகிறது.
இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட உதவும். சென்சார் கருவியை ஜெர்மன் நாட்டின் உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான புளோரியா சாப் குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
ஸ்மார்ட் போன் அல்லது கணினியுடன் இணைத்து அதில் உள்ள தேடுதல் மூலம் ஓரிரு வினாடிகளில் தேடும் பொருளினைக் கண்டுபிடித்துவிடலாம்.
பைன்டு மை ஸ்டப் என்ற இந்தக் கருவியின் உதவியுடன் நாம் தொலைத்த பொருளின் பெயரை கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். ஓரிரு வினாடிகளில் நாம் தொலைத்த பொருள் இருக்கும் இடத்தைத் தெரிவித்து விடுமாம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, டிரான் மீட்டர் மற்றும் சிப்ஸ் மிகவும் சிறிய அளவில் இருக்கும்.
இதன் விலையும் மிகவும் குறைவு. இன்றைய உலகில் கணினியுடன் நாம் எதனுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். மேலும், தொலைப்பேசித் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் போனில் இந்தக் கருவியைப் பொருத்தலாம். அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் இந்தக் கருவியின் விலை ரூ.5,000 வரை இருக்கும் என்று விஞ்ஞானி புளோரியா சாப் கூறியுள்ளார்.