கேள்வி : தீண்டாமைக்கு மூல காரணமான ஜாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தில் வழிவகை செய்ய எந்த வகையில் போராட வேண்டும்? பொதுநல வழக்குப் போடலாமா?
– மா.கிருட்டிணன், மாரண்டஅள்ளி
பதில் : பொதுமக்கள் மன்றம்தான் சரியான இடம்; நீதிமன்றங்கள் இதைச் செய்யுங்கள் என்று கொள்கை முடிவுகளில் ஆணையிட முடியாது. விளைவுகள் _ சிறப்பானதாக அமையாது.
கேள்வி : அமெரிக்காவில் நீக்ரோக்களும், அமெரிக்கர்களும் கைகோர்த்துச் செல்வதுபோல, தமிழ்நாட்டில் ஆரியரும் திராவிடரும் கைகோர்க்க முடியாததற்கு என்ன காரணம்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : அங்கே இருப்பது வர்க்கபேதம்தான். நிறம் என்றாலும் மனுதர்மம்போல் _ தொட்டால் தீட்டு _ படித்தால் வாயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு _ கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றக் கட்டளை _ இவை மாதிரியெல்லாம் கிடையாதே! எனவேதான் அங்கு அது சாத்தியம். அங்கே தனிப்பட்ட கூட்டம் இனவெறி காரணமாக இருந்த கண்டனத்திற்குரிய முறை. இங்கே, சூத்திரன் _ பஞ்சமன், பெண்கள் படிக்கக் கூடாது என்பதுதானே வர்ணதர்மம்! எனவேதான் புரிகிறதா?
கேள்வி : இச்சையுடன் உச்சிமுகர்ந்து பச்சைத் தமிழனே என்று காமராசரை பெரியார் பாராட்டியதைக் கூட, அன்றைய காங்கிரசில் இருந்த சிலர் கொச்சைப்படுத்திப் பேசினார்கள் என்பது உண்மையா? – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : ஆமாம்! காமராசர் இடத்திற்கு வரமுயன்று தோற்றவர்கள் அவர்கள் _ இலவு காத்த கிளிகள் _ ஏமாந்தவர்கள். எனவே எரிச்சலைக் கொட்டினர்.
கேள்வி : தனித் தெலுங்கானா அறிவிப்பை அடுத்து மேலும் சில மாநிலங்களைப் பிரிக்க கோரிக்கை, போராட்டங்கள் நடைபெற்று வருகிறதே. புதிய மாநிலங்கள் உருவாவது சாதகமா? பாதகமா? – மன்னை சித்து, மன்னார்குடி-
பதில் : ஏன் உருவானால் என்ன குடிமூழ்கும்? அரசியல் சட்டப்படி தனி சிறு மாநிலங்களை உருவாக்குவதற்கு இடம் உள்ளதே! பி.ஜே.பி.யை முக்கியமாகக் கொண்ட மத்திய ஆட்சியில் 3, 4 மாநிலங்கள் உருவானதே! பூகம்பமா வந்தது?
கேள்வி : மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து நாடாளுமன்றத்தை முடக்குவது ஆரோக்கியமான அரசியலா?
_ வெங்கட. இராசா, ம.பொடையூர்
பதில் : மிகக் கேவலமான ஜனநாயகக் கொடுமையாகும்!
கேள்வி : பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு விடிவு காலம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறுகிறாரே?
_ சாக்கியமணி, காஞ்சி
பதில் : ஏற்கெனவே ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள்? ராஜபக்—-க்ஷவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு மத்தியப் பிரதேச பி.ஜே.பி. ஆட்சியில்தானே! ஏன் இப்படி ஓட்டு வேட்டைக்கு அரசியல் நடத்துகிறார்களோ!
கேள்வி : பாகிஸ்தான் என்றால் சண்டியர்த்தனமாய் முண்டா தட்டும் இந்தியா, சுண்டைக்காய் இலங்கையிடமும், சீனாவிடமும் வாலைச் சுருட்டிக்கொண்டு காலடியில் கிடப்பது ஏன்? – க.அன்பரசன், விழுப்புரம்
பதில் : தங்கள் மூதாதையர்களின் வழித்தோன்றல் அங்கே ஆளும் இனப் பாசமோ? என்ன எழவோ -_ இருக்கலாம்!
கேள்வி : பெரும்பாலான பத்திரிகைகள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மோடியை ஆதரிக்கின்றதே, இதற்கு என்ன காரணம்? – ஜி.நளினி, பெரியார் நகர்
பதில் : அவாளின் பிரச்சாரத் தந்திரங்களில் இதுவும் ஒன்று. கோயபெல்ஸ்களின் குருநாதர்களான துரோணாச்சாரிகள் இவர்கள்!
கேள்வி : தங்கள் சம்பளத்தைத் தாங்களே நிர்ணயித்துக்கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்தும் விலக்கு அளித்துக்கொண்டு, கிரிமினலாய் இருந்தாலும் தங்கள் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொண்டு நடப்பது – மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்கள் நல அரசா? அரசியல்வாதிகளுக்காக அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சுயநல அரசா? – திராவிடமுரசு, தஞ்சை
பதில் : பதவி வேட்டை அரசியல், பதவியில் எல்லோருக்கும் பங்கு என்பதால் எவருக்கும் எதிர்க்கும் மனப்பான்மை இருப்பதில்லை! தகவல் அறியும் சட்டத்திற்குள் கொண்டு வர எந்த அரசியல் கட்சியும் ஒப்புக்கொள்ள முன்வரவில்லையே _ இடதுசாரிக் கட்சிகள் உட்பட!
கேள்வி : வெள்ளைக்காரனால் சூட்டப்பட்ட பெயர்கள்தானே இந்தியாவும், இந்துவும்? வெள்ளைக்காரனே இல்லையென்று ஆனபிறகு, அவனால் வந்த இந்தியாவும், இந்துவும் மட்டும் இங்கே எதற்கு? – கி.மாசிலாமணி, மாமண்டூர்
பதில் : ஹி… ஹி… ஹிண்டு.. ஹிந்தியாவாக ஆகிவருகிறதே! ஹி… ஹி.. பார்க்கவில்லையா? பாரத் மாதாக்கீ ஜே!