முத்தன் காடன் முனியன் மாரி
எத்தனை தெய்வமடா?
மூலைக்கு மூலை ரத்தம் குடிக்கும்
எத்தனை கோவிலடா?
பக்தன் என்னும் பெயரினைச் சூடி
எத்தனை மூடனடா?
பாவம் புண்ணியம் பேசிப் பேசி
பறந்தது காலமடா… உண்டு தெய்வம் என்று சொல்ல மனமே கூசுதடா…..
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன், தங்கதுரை திரைப்படத்திற்காக எழுதிய பாடல் இது.
அர்த்தமுள்ள இந்துமதத்தில்தான் எத்தனை மூடநம்பிக்கைகள்…! தன் உணவைத்தேடி பூனை சென்றால், அச்சச்சோ… பூனை குறுக்கே போகுதே… சகுனம் சரியில்லயே என்று கூறும் ஊனமுற்ற மனங்கள் இங்கே உண்டு. `பூனை குறுக்கே போகாம நம்ம கூடவே கை கோர்த்துக்கிட்டா வரும் என்று சிந்திக்க முடியாத அளவுக்கு சிறு வயதிலேயே மூளை மழுங்கடிக்கப்படுகிறது.
மனித மனங்களை அண்டும் மூடநம்பிக்கைகளை முளையிலேயே களையாமல் விடுவதால் ஆயுள் முழுக்க அது மனிதனின் அறிவை முடமாக்குகிறது. பல்லியின் கத்தலுக்கும், காக்கையின் தட்டலுக்கும் அச்சப்படும் மனம்தான் மந்திரவாதியின் (தந்திரவாதியின்) மிரட்டுலுக்கு அஞ்சுகிறது. அவன் மனித மண்டை ஓட்டு எலும்பை வைத்து கொஞ்சம் மஞ்சள் குங்குமத்தைப் பூசி அச்சமுட்டினால் அவன் சொல்வதையெல்லாம் கேட்கும் பகுத்தறிவை இழக்கும் நிலைக்கு பக்தன் செல்கிறான். அதன் விளைவு காசு பணம் இழப்பு மட்டுமல்ல, மானத்தை இழக்கிறான்; மதியை இழக்கிறான்; ஏன்… உயிரையே இழக்கிறான். அதனால் உறவுகளை இழக்கிறான்.
நாளிதழ்களைத் திறந்தால் ஜோதிடரிடம் ஏமாந்தவர்களும், மந்திரவாதிகளிடம் பறி கொடுத்தவர்களும்தான் ஒவ்வொரு பக்கத்தையும் நிரப்புகிறார்கள். காவல் நிலையம் வந்து புகார் அளிக்கும் வழக்குகள் மட்டுமே பத்திரிகைகளில் நாம் படிப்பவை. ஆனால், காவல் நிலையத்திற்கே வராமல் உள்ளூர் பஞ்சாயத்துகளில் தீர்க்கப்படுபவையும் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் ஆட்பட்டு வெளியே யாரிடமும் சொல்லாமலேயே தன் மனத்தில் பூட்டி வைத்துக்கொள்பவர்கள் ஏராளம்.
வெளிச்சத்திற்கு வரும் அவற்றில் கடந்த மாதம் வந்த செய்திகள் இவை: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் நீண்ட காலமாக சொத்துப் பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக சிக்கலில் மாட்டித் தவித்தது. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த ஹரி பிரம்மன் என்ற மந்திரவாதி அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து மந்திர தந்திரங்களைச் செய்து வந்தான்.
23.8.2013 அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அவசரமாக ஓடி வந்து கதவைத் தட்டிய மந்திரவாதி, நல்ல நேரம் முடிவதற்குள் உடனடியாக பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளறைக்குச் சென்றான்.
உங்களது பீடை ஒழிய உங்கள் இளைய மகளைத் தனியாக வைத்துப் பூஜிக்க வேண்டும். அவளிடம்தான் தெய்வீக சக்திகள் குடிகொண்டு இருக்கின்றன என்று கூறிய ஹரி பிரம்மன் அவர்களின் 16 வயது மகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமியைப் பாலியல் வன்முறை செய்தான். ஒன்றும் நடக்காதது போல் வெளியே வந்த மந்திரவாதி, உங்கள் மகள் மீது தெய்வத்தின் அருள் வந்து அவள் மயங்கி விழுந்து விட்டாள். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். எனக்கு இன்னொரு வீட்டில் அவசர பூஜை இருக்கிறது என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நழுவினான்.
மயக்கம் தெளிந்த சிறுமி பெற்றோரிடம் உள்ளே நடந்த அக்கிரமத்தைக் கூறி அழுதாள். இதனையடுத்து அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சர்தார் புரா பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஹரி பிரம்மனைத் தேடி வருகின்றனர்.
குஜராத்தில் நடந்ததைப் போலவே சென்னையிலும் ஒரு இளம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள். அவளே பேசுகிறாள்:-
என் பெயர் அமுதா. என் அம்மா பெயர் வசந்தி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நான்கு ஆண்டுகளுக்கு முன் எனது அப்பா மாரியப்பன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் அம்மாவுக்கு விபசாரம்தான் முழு நேரத் தொழில். எங்கள் பகுதியில் அறவழிச் சித்தர் என்ற குறி சொல்லும் சாமியார் இருந்தார். என் அம்மா அவரைப் பார்க்க அடிக்கடி போவார். உனக்கு நல்ல படிப்பு வர ராத்திரி பூஜை பண்ணணும்னு சித்தர் சொல்லிருக்கிறார் என்று அம்மா ஒருநாள் சொன்னார். ராத்திரி பூஜைக்கு என்னை மட்டும் அறைக்குள் அனுப்பினார். என் உடைகளைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக உட்காரவைத்து, என் உடல் முழுவதும் திருநீற்றைப் பூசினார் சித்தர். பிறகு, தீர்த்தம் கொடுத்தார். அதைக் குடித்ததும் அரை மயக்கமாகி விட்டேன். என்னைப் படுக்கவைத்து சித்தர் எனக்குள் கலந்தார். அதை என்னால் உணர முடிந்தது. ஆனால், கத்த முடியவில்லை. பூஜை முடிந்து வெளியில் வந்து நான் என் அம்மாவிடம் இதைச் சொல்லி அழுதேன். ஆனால், ராத்திரி பூஜைன்னா அப்படித்தான்… இதையெல்லாம் பெருசுபடுத்தாதே! என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகு அடிக்கடி அந்தச் சாமியாரிடம் என்னை என் அம்மா அனுப்புவார்.
வேறு வழியில்லாமல் நானும் ராத்திரி பூஜைக்குச் செல்வேன். ஒரு நாள் அந்தச் சாமியார், என்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். பகல் நேரத்தில் கடைக்குள் வைத்தே குமார் என் மீது கைவைத்தான். தடுத்தேன். என்னை அடித்தான். நான் அழுது அடம்பிடித்தேன். குமார் எனக்கு ஒரு ஊசி போட்டான். நான் மயக்கமானதும் அந்த மிருகம் பட்டப்பகலில் கடைக்குள் வைத்தே என்னை வேட்டையாடியது. (ஜூனியர் விகடன் ஆகஸ்டு 25, 2013)- இது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழக்கு. குழந்தைகள் மீதான வன்முறையைப் புகார் செய்வதற்கான இலவச தொலைபேசி மூலம் இந்தக் கொடுமை தமிழ்நாடு காவல் துறையின் கவனத்துக்கு வர இப்போது அறவழிச்சித்தரும், அந்தச் சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அறவழிச் சித்தரின் வீட்டைச் சுற்றி விசாரித்தபோது இவரிடம் குறி கேட்க பெரும்பாலும் பெண்களே வருகிறார்கள் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களிடம் பெண்களே அதிகம் செல்வது ஏன்? மக்களை எளிதாக ஏமாற்றிக் காசு பறிக்கும் தந்திரத்துக்கு கடவுளும், அதன் அடித்தளத்தில் ஆட்டம் போடும் மூடநம்பிக்கையுமே முதல் காரணங்களாக இருக்கின்றன. இதனை பல்லாண்டு காலமாக மக்கள் கண்டும் கேட்டும் வருகிறார்கள். ஆனால், அதனை எதிர்க்கும் துணிவை பக்தி அடக்கிவிடுகிறது. இதனை உணர்ந்துதான் புதிது புதிதாக காவி வேடதாரிகள் உருவாகிறார்கள். இவர்களை ஊக்கப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகை என எல்லா ஊடகங்களிலும் சாமியார்களும் மந்திரவாதிகளும் ஜோசியர்களும் ஆக்கிரமித்துள்ளார்கள். நாய் விற்ற காசு குரைக்காது என்ற தத்துவத்தின்படி ஊடகங்களும் காசுகளுக்காக மேற்படி பேர்வழிகளுக்குப் பிரச்சார பீரங்கியாகச் செயல்படுகின்றன. அவை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட இடம் கொடுப்பதில்லை.
அர்த்தமற்ற மூடநம்பிக்கைகளை விளக்கி அமானுஷ்யங்கள் எனும் பெயரில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கமளிக்க பகுத்தறிவாளர்களை அனுமதிப்பதில்லை. தொலைக்காட்சி யுகம் தமிழகத்தில் ஏற்படுத்திய நாசங்களில் முதன்மையானது மூடநம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான். தங்களது டி.வி.க்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து விளம்பரங்களைக் குவிப்பதற்காக, எங்கேயோ மூலை முடுக்குகளில் கிடக்கும் கோவில்களையும், அதனைச் சார்ந்த மூடநம்பிக்கைகளையும் படம் பிடித்துக்காட்டி, அங்கு பாமர மற்றும் படித்த பாமர மக்கள் படையெடுக்கக் காரணமாக இருக்கின்றன.
தமிழகத்தில் அதிக மக்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சி முற்றிலும் மூடநம்பிக்கைகளை உள்ளடக்கிய புராண இதிகாசத் தொடர்களை ஒளிபரப்புகிறது. பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற பொய்க்கதைகளுக்குப் பூச்சூட்டி பரபரப்புச் செய்தியாக்குகிறது. இதனோடு போட்டி போடும் தொலைக்காட்சிகளும் இதேபோல நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. இப்படி பெரு ஊடகங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் முனைப்பாக இருப்பதும், மூடநம்பிக்கைகளின் மூலம் குற்றங்கள் பெருகுவதற்குக் காரணங்களாகும்.
நிகழ்ச்சிகளை மட்டுமல்ல, மூடநம்பிக்கை வியாபாரிகளான சாமியார்கள், ராசிக்கல் விற்பவர்கள், ஜோதிடர்கள் (இவர்களில் பலவகை உண்டு; ஒருவர் ஜாதகம் தேவையில்லை பிறந்தநாள் பலன் என்பார்; இன்னொருவரோ ஜாதகம், ராசி, பிறந்த நாள் எதுவுமே தேவையில்லை, உங்கள் முகத்தைப் பார்த்தே பலன் சொல்லுவேன் என்கிறார். எப்படியும் வருபவன் முகத்தோடுதானே வருவான்; முண்டங்கள் வரப்போவதில்லையே என்கிற தைரியம்தான். வேறென்ன) இத்தகையோர் தொலைக்காட்சியை அரை மணிநேரம் வாடகைக்கு எடுத்து பக்கத்தில் ஒரு நடிகையை உட்கார வைத்துக் கொண்டு புளுகுகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் முக்கால்வாசி டி.வி.க்கள் தங்கள் பகல் நேரத்தினை இவர்களை வைத்தே ஒப்பேற்றுகிறார்கள். இந்த விளம்பரத்தினைப் பார்க்கும் பெண்கள் ஜோதிடர்களின் வலையில் வீழ வாய்ப்புகள் அநேகம் உண்டு. நம்பவைத்து ஏமாற்றுதல் என்பது ஒரு நம்பிக்கை மோசடிக் குற்றம் என சட்டம் சொல்லுகிறது. வணிக விளம்பரங்களில் பொய் வாக்குறுதிகளைச் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டங்களின் அடிப்படையிலோ அல்லது பொது நியாயத்தின் அடிப்படையிலோ பார்த்தாலும், ஜோதிடம், ஜாதகம், குறி சொல்லுதல் ஆகியவற்றின் மூலம் ஏமாற்றுவதும் குற்றம்தானே.
சென்னையில் சிக்கியுள்ள அறவழிச்சித்தரை விசாரிக்க வலியுறுத்தியுள்ள தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழகக் காவல்துறைக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் தனது அறிக்கையில், “இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல்லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை னி பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு – மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன்வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று _ முக்கியமானது. அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.
Article 51a(h) “It shall be the duty of every citizen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.
கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரியவில்லை!
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்; அவர்களைத் தப்பிக்கவிட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம் என்று கூறியுள்ளதோடு மராட்டிய மநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் போல மத்திய, மாநில அரசுகளும் உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நம்முடைய மத்திய மாநில அரசுகள் என்பது மதச்சார்பற்ற அரசுகள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசும் அரசியல்வாதிகளும் தாங்கள் சார்ந்திருக்கும் மத சம்பந்தமான நிகழ்ச்சிகளிலோ, சாமியார்கள், ஜோதிடர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட அவர்களின் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலோ பங்கேற்கக்கூடாது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தித்தான் மோசடி செய்ய எண்ணும் மூடநம்பிக்கை வியாபாரிகள் தமது வணிகத்தைச் செய்கின்றனர்.
சட்டங்கள் இயற்றி நிறைவேற்றப்படுவதில் கடுமை காட்டுவதுடன், சமூகத்தில் பொறுப்புக்கொண்ட அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், சமூகத்தால் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுவோர், பிரபலமாக உள்ள கலைத்துறையினர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் மக்களுடன் தொடர்பு கொண்டுள்ள ஊடகத்துறையினர் தங்களது தனிப்பட்ட மத நம்பிக்கைகளைத் தனிப்பட்டவைகளாகவே வைத்துகொள்ள வேண்டும். தமது நம்பிக்கைகளை பொதுவில் செயல்படுத்தும்போது அது சட்டமீறலாக மட்டுமல்லாமல், சமூக மனிதனின் பொறுப்புணர்ச்சியை மீறிய செயலாகவும் ஆகிறது. அரசுகளும் சட்டமும் சட்டத்தை நிறைவேற்றும் அலுவலர்களும் தத்தமது பொறுப்பை உணர்ந்தாலே மூடநம்பிக்கையால் இழக்கப்படும் மனித மாண்பை, மானத்தை, உயிர்களைக் காப்பாற்ற முடியும். – –
– அன்பன்
மகாராஷ்ட்ராவில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநில அரசு 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்த பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்துள்ளது.
மாநில அமைச்சரவை 21.8.2013 அன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி, சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
எனினும் இந்தச் சட்டம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அது காலாவதியாகிவிடும். தற்போது மஹாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் கையொப்பமிட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();