1. பாடப் புத்தகங்களைப் பார்த்து பொதுத் தேர்வை எழுதும் புதிய திட்டம் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.
2. ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் கால அவகாசம் 4 மாதத்திலிருந்து 2 மாதமாக (60 நாள்கள்) மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
3.மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதைத் தடுக்கும் சட்டத் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை மே 1 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
4. கருணை மனுமீது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கத் தாமதமானதால், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர தாசின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
5. பிளஸ்2 தேர்வில் 35 சதவிகித மதிப்பெண்கள் எடுக்கும் ஆதிதிராவிட பழங்குடி இன மாணவ மாணவிகள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் அறிவித்துள்ளார்.
காணமல் போகும் குழந்தைகள்
குழந்தைகள் காணாமல் போகும் நகரங்களில் மும்பை முதலிடத்தில் இருப்பதாக மகாராஷ்டிர சட்டசபையில் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார். மும்பையில் 2011ஆம் ஆண்டில் 2,267 குழந்தைகள் காணாமல் போனதில், 607 குழந்தைகள் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 2011ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 41 குழந்தைகள் வீதம் 15,257 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். மேலும், 2,197 ஆண்களும், 2,475 பெண்களும் காணாமல் போனதில் 1,135 ஆண்களும் 1,484 பெண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கலப்புத் திருமணங்கள்
கலப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் பரிசுத்தொகையினை உயர்த்தி 75,000 ரூபாயாக உயர்த்தி இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 68.50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.
கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதிகள் ஒழிய வாய்ப்பு உள்ளது. 2009_2013ஆம் ஆண்டு தற்போது வரை 1,113 கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
ஜாதி என்ற தடையை மீறி இளம்பெண் களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தவே பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சமூக நீதித்துறைச் சிறப்புச் செயலர் சூட் கூறியுள்ளார்.