மதுரையில் மரபணு ஆய்வு மய்யம்!

பிப்ரவரி 01-15

நமது உண்மை இதழில் (டிசம்பர் 16-31) ஜாதியை தகர்க்கும் மரபணு அறிவியல்  கட்டுரை படித்தேன். அதில் இவ்வாறான ஆய்வுகள் பலவற்றை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார். அதுபற்றி மேலதிக தகவல்கள் வருமாறு: தேசிய புவியியல் கழகம், அய்பிஎம் மற்றும் வெய்ட் குடும்ப அறக் கட்டளை ஆகியோர் இணைந்து 2005 ஆம் ஆண்டு முதல் ரூ.100 கோடி செலவில் உலக முழுவதும் உள்ள 11 ஆய்வு மய்யங்களை நிறுவி மனித மரபணு பரவல்பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

டாக்டர் ராமசாமி பிச்சப்பன் எனும் பேராசிரியர் தலைமையில், இந்தியாவுக்கான மய்யம் மதுரை காமராசர் பல்கலையில் ரூ. 4 கோடி செலவில் நிறுவப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக செயல்படுகிறது. பிரமலைக்கள்ளர்தான் 65000 ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதக் குழுவினர்; நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தவர்கள் 50000 ஆண்டுகளுக்குமுன் வந்த மற்றொரு குழுவைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இணையதளவரைபடத்தின்படி, நாகர்கோவில் நாடார்கள், விழுப்புரம் பறையர்கள் எனப் பல்வேறு சமூகத்தவரைப் பற்றியும், நாடு முழுவதும் மலைப்பகுதிகளில் வேறு சமூகக் கலப்பற்று வாழும் தொல்குடியினர் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுவரை உலக அளவில் 5 லட்சம் பேரை ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

ரூ. 11,000 விலையுள்ள டப்பாவிலுள்ள கன்னத்துக்குள் பஞ்சுக் குச்சியைத் தடவி எடுத்து அவர்களுக்கு அனுப்பினால் நாம் எங்கிருந்து எத்தனை ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள், தந்தை, தாய் வழிகள் என்ன என்னும் தகவல்கள் நமக்கு அளிப்பார்களாம்.

ஒன்று மட்டும் உறுதி. ஆப்பிரிக்காவின் எதியோப்பியா, கென்யா, தான்சானியா பகுதியில்தான் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித இனம் உருவானதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலில் வேட்டை சமூகமாக விளங்கி, தெற்கு ஆசியாவுக்கு நகர்ந்து பின்னர் மற்ற பகுதிகளில் பரவினர். பின்னர் வேட்டையாடும் சமூகம், வேளாண் சமூகமாக மாறிற்று. அதோடு ஜாதி, மதம், மொழி, நிறம் போன்ற நோய்களையும் உருவாக்கிக் கொண்டோம்!

– அ.காசிவிசுவநாதன், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *