நரபலியைத் தூண்டிய முடநம்பிக்கை விளம்பரங்கள்

பிப்ரவரி 01-15

மனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம்? 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.

மனிதர்கள் தங்களின் நிலை உணர்ந்து தங்களை சமுதாயத்திற்கான ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு சமூக சீர்திருத்ததிற்காக அற்பணித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். சமூக சீர்திருத்தங்களில் மூடநம்பிக்கைகள் அழிக்கும் பணியை முதலில் கொண்டு வந்தது சீனம் தான்.இதன் கம்யூனிச தத்துவத்தின் காரணமாக சீனம் பற்றிய பல வரலாற்று உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை, அந்த வகையில் சீனர்களின் விஞ்ஞானம் அறிவை  எடுத்துக் காட்டுவது அவர்கள் கண்டறிந்த காகிதம். (மிங் வமிச மன்னர்கள் நிலச் சுவான்தார்களுக்கு இதர குறுநிலமன்னர்களின்  நிதி நிலை அறிக்கையை காகிதங்களில் எழுதி பொதுப் பார்வைக்கு வைத்தனர். அதுதான் இன்று நிதி நிலை அறிக்கையாக உருமாறி உலகெங்கும் அரசுகள் முதல் பெரிய சிறிய நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன) ஆனால் இந்தியாவில் நாகரீகம் வளர வளர அறிவியல் மூலமாகவேகூட ஊடகங்கள் மக்களின் மனதில்  மூடநம்பிக்கைகளைத் திணித்து மேலும் மேலும் அழுக்கெண்ணெய் படிந்த கண்ணாடியாக மனித உள்ளங்களை மாற்றி வருகின்றன. இன்று இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது அரசியல்வாதிகளில் ஆரம்பித்து ஊடகங்களில் துவங்கி சில சுயநல மதத்தலைவர்கள் வரை சென்று சேர்ந்து அது மக்களையும் மாய்த்துவருகிறது. அண்மையில் இந்திய குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி  திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். வழிப்பாட்டு உரிமை ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை; அதை நாம் குறைகூறவில்லை.இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்ட நாடு.அந்நாட்டின் உச்சபட்ச பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்,அரசின் செலவில் தனது தனிப்பட்ட மத நம்பிக்கைக்காக போய்வருவது தார்மீக ரீதியில் சரிதானா? இப்படி ஒவ்வொரு முறையும் முக்கிய அரசியல் தலைவர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதையும் அவர்கள் வழிபடுவதையும் பத்திரிக்கைகளும்,அரசு ஊடகங்களும் ஏன் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவேண்டும்?  இதற்கெல்லாம் முத்தாய்ப்பான ஒரு சிறப்பான தகவல். வடக்கில் உள்ள பிரபல இந்தி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்தவர். சமீபத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நுகர்வோர் பொருள் விற்கும் விளம்பரத்தில் நடித்தார். நடித்தது மட்டுமல்லாமல் அந்த பொருளை வாங்கியதால் நான் மிகவும் பலனடைந்தேன் என்று கூறுகிறார்.

 

அது என்ன பொருள் உயிர்கொல்லி நோயை தடுக்கும் மருந்து மாத்திரையா? ஆடைகளை கழுவ பயன்படுத்தும் சலவைதூளா? அல்லது சலவைகட்டியா? குளிர்பானமா? பாத அணியா? அல்லது புது வரவான அழகிய 4 சக்கர வாகனமா? இதில் எதுவுமே கிடையாது அது என்ன தெரியுமா! சுப தன் வர்ஷா லட்சுமி குபேர் யந்திரா(அதாவது நலமுடன் பணமழைகொட்டும் லட்சுமி குபேர யந்திரம்) மும்பையில் பொது இடங்களில் பாபா வங்காளி, ராஜஸ்தான் மாதாஜி, சனிமகராஜ் என்ற பெயரில் இவர்களிடம் வாருங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் கடை வியாபாரம் முதல், அயல் நாட்டு வேலை வரை இவர்களிடம் போனால் சிறப்பாக அமையும் என்றும் விளம்பரபடுத்துவார்கள், மும்பையில் புறநகர் ரெயிலில் எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரங்களைக் காணலாம், இதனால் பல ஏமாற்றுப்புகார்கள், கடத்தல்கள் மற்றும் சில நரபலி (தங்கப்புதையல் கிடைக்கும் என்ற பாபா வங்காளி என்ற சாமியாரின் ஆலோசனை கேட்டு பக்கத்து வீட்டு பையனை பலிகொடுத்த விவகாரம்.

தானே மாவட்டம்- ஆதாரம்:12\10\2009 மராட்டி தினசரி தைனிக் சகால்) இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மத்திய ரெயில்வே காவல் துறையினர் இணைந்து இது போன்ற விளம்பரங்களை மும்பையில் தடைசெய்தனர். இந்தி நடிகர் கோவிந்த செய்துவரும் விளம்பரமும் கிட்டத்தட்ட இதே போன்றது தான்  அப்படி என்னதான் கோவிந்தா சொல்கிறார். இதோ! தொலைக்காட்சியில் நமது நேரடி அரங்க நிகழ்ச்சி போல் மூன்று பேர். அவர்களுக்கு எதிரில் கோவிந்தா. அதன் பார்வையாளர்களாக 20 பேர். கோவிந்தாவின் முன்பு உட்கார்தவர் இஸ்லாமியரைப்போல் ஆதாப் என்று சொல்கிறார்( இஸ்லாமியர்களும் இதை பயன்படுத்துகிறார்களாம்) உடனே அவரது அனுபவங்களை சொல்கிறார். அவர் ஏதோ வேலைபார்த்துகொண்டு இருந்தாராம் அந்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாம், அந்த சிரமத்தில் இருக்கும் போது அவரது அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்(இதைக் கூறும் போது அவர் அழுகிறார்) உடனே அழுகையை நிறுத்திவிட்டு நான் தன் வருஷா லட்சுமி பற்றி அவரது நன்பரான இந்து பண்டிதர் ஒருவர் கூறினாராம். உடனே அதை வாங்கி பூசை செய்தாராம், அதன் பிறகு அவருக்கு வேலை கிடைத்ததாம். அன்னைக்கு அறுவைசிகிச்சை நடந்ததாம். இவருக்கும் திருமணம் நடந்ததாம். இப்படி  பல தாம்கள்… என்ன ஒரு பித்தலாட்டத்தனம் இது.

அதுவும் முக்கியமான தொலைக்காட்சியில் இது போன்ற ஏமாற்றும் விளம்பரங்களை  எப்படி நுகர்வோர் ஆணையம் அனுமதிக்கிறது? இதில் இணையதளங்களில் சிலர்(முக்கியமாக பேஸ்புக்கிலும்) இதை நான் பயன்படுத்தினேன், அற்புதமாக வேலை செய்கிறது, என்று நடிகர் கோவிந்தாவிற்கு நன்றிகள், மற்றும் காணிக்கைகள் எல்லாம் சொல்கிறார்கள், அந்தப் பொருளின் விலை 3000 ரூபாய், தபால் செலவுகள் 500 ரூபாய்.சேவைபிரிவு எண் எல்லாம் உண்டு சரி அப்படி அதில் என்னதான் இருக்கும்? ஒரு பெரிய சாவி குபேரனுடையதாம், சிறிய சாவி லட்சுமியுடைதாம்,  சிறிய லட்சுமி சிலை ஒன்று குபேரனின் (மைத்ரெய புத்தா இங்கு குபேரனகிவிட்டார்) சிலை, ஒரு ஜோடி செருப்பு(லட்சுமியின் பாதங்களாம்) இரண்டு செப்பு தகடுகள் மற்றும் ஒரு தட்டு ஆமை சிலை ஒன்று. இதில் சில கட்டங்களும் எழுத்துக்களும் உள்ள இரண்டு பொருட்கள்.இவை மட்டும் உலோகங்கள். மற்ற எல்லாம் மட்டரக பிளாஸ்டிக்குகள்(நுரை பிளாஸ்டிக்) அதன் மேல் தங்க நிற முலாம் பூசியவைகள்.  இவைகள் எல்லாம் மும்பை மீராரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளில் அச்சுவார்த்து தயார்செய்யப்படுகிறது. இதனுடைய மொத்த விலை என்று பார்த்தால் ஒரு சிலைக்கு 20 காசுகள். தகடுகள் ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் பகுதியில் தயாரிக்கின்றனர்.அதன் அடக்கவிலை 100 தகடு ரூ10 மட்டுமே. பாக்கேட்டுகள் டில்லியை அடுத்து உள்ள குர்காவ் என்ற நவீன தொழில் நகரத்தில் தயாராகின்றது. ஒரு டப்பா 2ரூபாய். (அதன் மேல் ஒட்டப்படும் படம் போட்ட காகிதத்துடன் சேர்த்து) அதாவது மூன்று ரூபாய் கூட பெறாத ஒன்றுக்கும் உதவாத பொருளை டெலிமார்கெட்டிங் மூலமாக 3,500 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். அதை வாங்கிகொண்டு இணையதளங்களில் பலர் எந்த திசையில் வைப்பது, எப்படி பூசை செய்வது, வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா? படுக்கை அறையில் வைக்கலாமா? என மடத்தனமாக கேள்விகள் கேட்பதுடன் பிறரையும் ஊக்கப்படுத்துகின்றனர்.

மும்பையில் தடைசெய்யப்பட்ட இந்த மூடநம்பிக்கை வியாபாரம் இப்போது தமிழகத்தை நோக்கிப் படையெடுத்துள்ளது. தமிழில் புதிதாக முளைத்துவரும் தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்களை மொழிமாற்றம் செய்து ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் ஈமு கோழி விளம்பரங்கள் வந்தன.அதில் நடித்த நடிகர்கள் மீது கூட பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

தகவல் ஒலிபரப்புத்துறை,நுகர்வோர் துறை ஆகியவை எப்படி இது போன்ற பொருள்களை விற்கவும் அதற்கு தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கிறது என்பதே நம் கேள்வி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரே இதை விளம்பரப்படுத்தும் போது அரசுத்துறைகள்  நடவடிக்கை எடுக்க துணிவதில்லை.அதுவும் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

அரசுகளுக்கு மட்டுமல்ல,இதில் ஊடகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.பணம் தருவார்கள் என்பதற்காக எந்த விளம்பரத்தையும் செய்யலாமா?

மருத்துவத்தையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கொண்டுவரவேண்டும் என்ர குரல் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது.அமருத்துவம் சேவையாக இருந்து அது தொழிலாக மாறிய பின்பு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.உயிர் காக்கும் மருத்துவத்தையே நுகர்வோர் சட்டத்தில் கொண்டுவர முயலும் காலத்தில் அப்பட்டமான ஏமாற்று வியாபாரமான யந்திர தந்திர மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தடுக்கவும்,அதற்கு செய்யப்படும் விளம்பரத்தை முடக்கவும் வேண்டாமா?

– சரவண ராஜேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *