“அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கக்கூடாது- அண்மையில் முகநூலில் பலரும் எழுதிய பதிவு இது.அப்படியென்ன அந்தக் காட்சியில் இருந்தது? 17 வயதுச் சிறுமி ஒருத்தி பொது இடத்தில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பதறிப் போய் அப்படிப் பதிவிட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த ரிசானா நபீக் என்ற அந்தச் சிறுமிக்கு சவூதி அரேபியா நாட்டில் அளிக்கப்பட்ட கொடூர மரணதண்டனைதான் உலகில் வாழும் மனிதர்களின் மனங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது.உலகில் பல் நாடுகள் மரணதண்டனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளன.இந்தியாவில் மரணதண்டனைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.ஆனால்,சவூதி அரேபியா போன்ற மதங்கள் கோலோச்சும் நாடுகளில் இன்னும் மரணதண்டனைகள் மனிதத்தைக் கொன்றுகொண்டிருக்கின்றன.
யார் இந்த ரிசானா? இலங்கையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவள் ரிசானா. 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகச் சென்று ஒரு வீட்டில் வேலை செய்துவந்தாள்.அங்கு தனது எஜமானியின் குழந்தையைக் கொன்றுவிட்டாள் என்பது இவள் மீதான குற்றச்சாட்டு.விசாரணை நடத்திய சவூதி அரேபியாவின் தவாமி நீதிமன்றம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி 2007 ஆம் ஆண்டு மரணதண்டனை விதித்தது.ஹாங்க்காங்கில் உள்ள ஆசிய மனித உரிமை அமைப்பின் உதவியுடன் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ரியாத் உயர்நீதிமன்றத்தில் ரிசானாவுக்கு ஆதரவாக மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்தது.ஆனால்,அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர்,ரிசானாவின் கருணை மனுவும் சவூதி அரசால் நிராகரிக்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் விரும்பினால் குற்றவாளியை மன்னிக்கலாம் என்பது ஷரீயத் சட்டம்.ஆனால்,இந்த வழக்கில் இறந்துபோன குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை.
4 மாதக் குழந்தையைத் திட்டமிட்டு ரிசானா கொல்லவில்லை.பாலூட்டும் போது மூச்சுத் திணறி குழந்தை இறந்துள்ளது.4 மாதக் குழந்தையைக் கொல்ல ஒரு சிறுமிக்கு மனம் வருமா?
சவுதி அரேபியாவுக்கு நான் 01.04.2005-ல் வந்தேன்.அங்கு ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைப்பது, கழுவுவது, 4 மாதக் குழந்தையை பார்த்துக்கொள்வது ஆகிய வேலையைச் செய்து கொண்டு இருந்தேன்.அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியிருக்கும்.
அப்போது யாரும் வீட்டில் இல்லை. அங்குள்ள 4 மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். வழக்கம் போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் வெளியேவர ஆரம்பித்தது.அப்போது நான் குழந்தையின் தொண்டையை மெதுவாகதடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூங்குகிறதென நினைத்தேன்.
குழந்தையின் தாயான எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி என்னை செருப்பால் அடித்துவிட்டு குழந்தையைதூக்கிக்கொண்டு போனார். எனது மூக்கிலும் கன்னத்திலும் எஜமானி அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.பின்னர், என்னை காவல்துறையிடம் ஒப்படைத்து அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாகக் கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை எலக்ட்ரிக் ஷாக் வைக்கப்போவதாகக் கூறினார்கள்.இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிக்கொடுத்த தாளில் கையொப்பம் போட்டேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாககுழந்தையை கொல்ல நான் கழுத்தை நெறிக்கவில்லை. மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன்.-இது ரிசானா எழுதிய கருணை மனு.
இதன்மூலம் ரிசானா துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது தெரியவருகிறது. இச்சம்பவம் நடந்தபோது ரிசானாவின் உண்மையான வயது 17.ஆனால்,வயதை அதிகமாகக் குறிப்பிட்டு அவளுக்கு பாஸ்போர்ட் வாங்கி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.மைனர் குற்றவாளிகளுக்கு பன்னாட்டு மனித உரிமை ஆவணத்தின்படி மரணதண்டனை விதிக்கப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தான் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுவிடுவோம் என்றும்,ஊருக்குத் திரும்பிவிடலாம் என்றும் ரிசானா இறக்கும் வரை நம்பிக்கொண்டு இருந்திருக்கிறாள்.தன்னிடம் இருந்த 500 சவூதி ரியால் பணத்தை தானமாகக் கொடுத்துவிடும்படிக் கூறியிருக்கிறாள்.இது ரிசானாவுக்கு மரண தண்டனை வித்திக்கப்படுவதற்கு(9.1.2013)சில மணி நேரத்திற்கு முன் அவளைச் சந்தித்த மௌல்வி ஏ.ஜே.எம்.மக்தூம்,ரிசானாவின் குடும்பத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செய்தி.
இஸ்லாமிய மத நம்பிக்கையாளரான இந்த மௌல்வி, இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து அவளை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது, இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக என்று கூட பிரார்த்தித்தேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஒரு மத நம்பிக்கையாளருக்கே மனம் பொறுக்கவில்லை.மதங்கள் சாராத மனிதநேயர்களின் மனங்கள் என்ன பாடுபடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?அதனால்தான் இந்த மரணதண்டனைக் காட்சியைப் பார்த்தவர்கள் நான் இந்தக் காட்சியைப் பார்த்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
மதங்கள் அன்பைபோதிக்கின்றன என்று சொல்லப்படுகிறது.அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்று இறைவனை இஸ்லாம் வர்ணிக்கிறது.இந்த நம்பிக்கைகொண்ட சவூதி மக்களும்,அந்நாட்டு ஊடகங்களும்கூட ரிசானாவுக்கு மரணதண்டனை கூடாது;மன்னிக்கப்படவேண்டும் என்றே குரல் எழுப்பியிருக்கின்றனர்.ரிசானாவின் பெற்றோருக்கு சவூதி இளவரசர் பெரும் பணத்தை நட்டஈடாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால்,அவர்கள் அதனைப் பெறவிரும்பவில்லை;மறுத்துவிட்டனர்.
மனிதன் போட்டுக்கொண்ட எல்லைக் கோடுகளைத்தாண்டி இன்று இணையம் என்னும் அறிவியல் அற்புதம் உலகத்தையே இணைத்துக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அன்றாடச் சம்பவங்களை உலகம் அடுத்த நொடியே பார்க்கிறது. நாடுகளால்,மதங்களால், இனங்களால்,மொழிகளால் பிரிந்திருக்கும் மனிதன் இப்போதுதான் மனிதத்தை நோக்கி நகர்ந்துவருகிறான்.அதனால்தான் எங்கோ இருக்கும் சவூதி அரேபியாவில் நிகழும் கொடுமையைக் கண்டிக்க அங்குள்ள மக்களோடு நாமும் இணைகிறோம்.
இத்தகைய காலகட்டத்தில் இன்னும் ஆதிகால கொடூர தண்டனைகளை நடைமுறைப்படுத்தலாமா? மனித மனங்களை,குணங்களை புரிந்துகொள்ளும் உணர்வு நமக்கு இல்லையா? தவறு செய்வது மனிதனின் இயல்புதான்.அதற்கு தண்டனைகளும் தேவைதான்.தண்டனை என்பது மனிதனைத் திருத்துவதற்குத்தான் இருக்கவேண்டுமே தவிர,அவனைக் கொல்லுவதாக இருக்கலாமா?நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்ற அய்யம் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் அடிக்கடி எழுகிறது.
– அன்பன்