இலக்கியங்கள் போற்றும் “தை’யில் தமிழ்ப் புத்தாண்டு – கி.தளபதிராஜ்

ஜனவரி 16-31

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!

என்றார்  புரட்சிக்கவிஞர்!

தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான்.இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்-நடத்தும் கலாச்சார பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத்தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன.

தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பது எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழா வாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டு களுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (பிணீக்ஷீமீ திமீவீஸ்ணீறீ) என்ற கருத்தில் தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப் படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகை யைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்” (1959) என்றார் அறிவுலகஆசான் தந்தை பெரியார்.

பொங்கல்விழாவை “மே தின” த்திற்கே முன்னோடி என்றார் பேரறிஞர் அண்ணா! மற்ற விழாப்போல இந்த விழா, மாயவாழ்வை நம்பாதே! ஈசன் பாதம் சேர்ந்திடுவாய்! என்ற வாழ்க்கை நிலையாமை பற்றிய எண்ணத்தின் மீது எழுந்ததன்று. வாழ்க்கைப் பெறும்பொறுப்பு, தூய கடமை என்று கொண்டு அதில் சுவையைத் துய்ப்பதுடன், பயன்பெறும் முறையும், கண்டுபெற்ற பயன் பிறருக்கும் பகிர்ந்தளிக்கும் வகை கண்டு அதற்கேற்ப நாம் நடந்து செல்ல வேண்டிய நன்னெறியாகும். எனவேதான் இந்த விழாவினிலே ஏற்புடைய கருத்துகட்கு நெஞ்சம் இடமளித்திடும் பாங்கு காண்கிறோம். வாழ்த்துகிறோம்! வாழ்த்துப்பெற்று மகிழ்கிறோம்! என்றார்.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் – (நற்றிணை)
தைஇத் திங்கள் தண்ணிய தரினும் – (குறுந்தொகை)
தைஇத் திங்கள் தண்கயம் போல் – (புறநானூறு)
தைஇத் திங்கள் தண்கயம் போல் – (ஐங்குறுநூறு)
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ-(கலித்தொகை)
என பற்பலஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங் களிலேயே தை திங்களின் சிறப்புகள் இடம்பெற்றி ருப்பதாக தமிழ் ஆசிரியர்கள் குறிக்கின்றனர்.

மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”

எனும் சீவகசிந்தாமணி பாடலிலிருந்து கி.பி 9ம் நூற்றாண்டிலேயே பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெற்றதற்கான ஆதாரங்கள் காட்டப்படுகிறது.
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என  ஒரு ஆண்டை ஆறு பருவமாக கனித்த தமிழன் இளவேனில் பருவ துவக்கத்தை புத்தாண்டின் தொடக்கமாய் கண்டான்.
சீனர், ஜப்பானியர், எனப் பலகோடி மக்களும் இளவேனில் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழன் வாழ்வில் “தை” முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கொள்ளப்படுகிறது.இன்றளவும் கிராமப்புறங்களில் எந்த ஒரு நிகழ்வையும் “தை”யை ஒட்டியே பேசப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் முதுமொழியும் இதை பறைசாற்றும்.

கி.பி.16ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த அப்போ டூபாய் எனும் போர்ச்சுக்கீசியர் இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்” எனும் நூலினை எழுதியுள்ளார்

அதில் தென்னகத்தில் கொண்டாடப்படும் `பொங்கல் விழா’ உழவர்களுடைய அறுவடைத் திருநாளாக ஊர்கள் தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டதை விவரித்துள்ளார்.

சோவியத் தமிழறிஞர் விதாலி புர்னீகா என்பவர் 1980 களில் தமிழ்நாட்டிற்கு வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தன் அனுபவங்களை “பிறப்பு முதல் இறப்புவரை தமிழகக் காட்சிகள்” என்ற நூலை 1986 ம் ஆண்டில் எழுதியுள்ளார். “வாழ்வைப் புதுப்பிக்கும் பொங்கல்” என தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவினை சிறப்புற மேன்மை படுத்தியுள்ளார்.இவ்விழா தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தான் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலில் – ஜாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய விக்கிரம சகம் எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. விக்கிரம சகம் 60 ஆண்டுகளை வரையறுத்தது. “பிரபவ” ஆண்டில் தொடங்கி “அட்சய” ஆண்டில் முடியும்.

இவைகளில் ஒரு பெயர்கூட தமிழில் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்!

“கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்” என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த  மானமுள்ள தமிழனும் ஏற்றுகொள்ள முடியாது.

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் தமிழ் ஆண்டு பின்பற்றுவது என்றும், தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்றும் முடிவு செய்தார்கள். திரு.வி.க, கா.சு.பிள்ளை,சோமசுந்தர பாரதியார்,கி.ஆ.பெ.விசுவநாதம்,மற்றும் பல பேரறிஞர்கள் கலந்துகொண்டனர்.

1939 ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திரு.வி.க.,மறைமலையடிகளார் உமாமகேசுவரனார், கா.சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,எனப் பலரும் பங்கேற்றனர். தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அந்த மாநாட்டிலும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள், பொங்கள் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா !
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்! திராவிடர் கழகமும் பல்வேறு அமைப்புகளும் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளாய் அறிவிக்க வேண்டி தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்ததன் பேரில் அய்ந்தாம் முறையாக தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று “தை” முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக அறிவித்தார்.

தேனில் விழுந்த பலாச்சுலை போல் “தமிழர் திருநாள் பொங்கல்” எத்திக்கும் தித்தித்திட தமிழர் வாழ்வில் தன்னிகரில்லா இடம்பெற்றது. மக்களிடையே மகிழ்ச்சி பெருவெள்ளம் கறைபுறன்டது.

தமிழன் வாழ்வில் மீட்சியா? கலாச்சாரப் புரட்சியா? அடுக்குமா அக்கிரஹார கும்பலுக்கு? பார்ப்பன ஏடுகள் ஒன்று கூடி ஒப்பாரிவைத்து ஓலமிட்டன!

ஆரியம் ஆட்சியைப் பிடித்தது !  மீண்டும் அரியனையில் சித்திரை ! ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!

ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!

தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்

சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்

அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!

ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!

தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால் சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

எனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவு கொள்வோம்!

ஆரியம் அழியும்! தமிழர் வாழ்வும் மானமும் வீறுகொண்டெழும்!

என ஓங்காரக்குரல் எழுப்பி வீடுதோறும் பொங்கிடுவோம் இனஉணர்வுப் பொங்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *