– நர்த்தகி நடராஜ் தரும் புதிய தகவல்
தமிழர்களின் தொன்மை வாய்ந்த நாட்டியக்கலையில் தேர்ந்த கலைஞரும், மூன்றாம் பாலினர்க்கு திருநங்கை எனப்பெயர்வரக் காரணமானவருமான திருநங்கை நர்த்தகி நடராஜ் அண்மையில் சென்னை, ஸ்ரீ கிருஷ்ணகான சபாவின் 32ஆம் ஆண்டு நடனக்கலை மாநாட்டின் ஆய்வுக் கருத்தரங்கில் நாட்டிய ஆய்வு குறித்து புதிய தகவல் ஒன்றைக் கூறினார்.
கலையில்!… இருகோடுகளின் சங்கமம்… அதன் நீட்சியாக கலையின் வாயிலாகத் தழுவப்படும் இருபால்நிலை! இந்த ருசிகரமான தலைப்பு! என்னை மையப்படுத்தி உருவாக்கப் பட்டதோ? அல்லது எனக்காகவே உருவாக்கப்பட்டதோ? என நான் நினைத்து சிரித்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால்! இனி வரும் காலங்களில் இத்தலைப்பினை இருபால் எனக் கொள்ளாது பொதுவாக பால்நிலைகளில் அல்லது முப்பால் இனங்களில்! எனத் தேர்வு செய்தால் மகிழ்வேன்! சிந்திப்பீர்களாக! இதற்கு நான் மிகப் பொருத்தமானவள்! இந்த அரங்கினில் என்னைச் சிறுபிராயம் முதல் ஆண் உடையிலும், முழுமையற்ற, கலந்த! இருபால் உடையிலும், இன்று ஒரு முழுமையான பெண்ணாகவும் பார்த்தவர்கள்! பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நிறைந்துள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர், நர்த்தகி! நீங்கள் உங்கள் பெண்மையை முதலில் உணர்ந்த போது நடனத்தை மேற்கொண்டீர்களா? அல்லது நடனத்தை உணர்ந்த பொழுது பெண்மையினைக் கைக் கொண்டீர்களா? எது முந்தியது? எனும் சிந்திக்க வைக்கும் கேள்வியை என் முன் வைத்தார். இன்று வரை எனக்கே தெரியாத விடை அது! என்றேன். பெண்மையை உணர்ந்த பொழுது நடனத்திற்கு உயிர் கொடுத்தேன்! நடனத்தை உணர்ந்த பொழுது பெண்மைக்கு உயிர் கொடுத்தேன், என்று கூறினேன் – அதனால்! எனது கலையின் வெளிபாட்டின் போது… எப்பாலையும் உணராமல் மெய்ப்பால் நிலையினை மட்டும் கைக்கொள்ள முயற்சிப்பேன், என்று தன் உரையைத் தொடங்கினார் இசைக்கு எப்படி மொழி கிடையாதோ! அதேபோல! நடனத்திற்கு பால்நிலை கிடையாது!கலையினை வெளிப்படுத்தும் பொழுது, தான் ஏற்றுள்ள பாத்திரம் வெளிப்படாமல், அவரது பால்நிலை மட்டும் வெளிப்படுமேயானால், அது நடனக்கலையின் முழுமையைக் காட்டாது! ஓர் ஆண் கலைஞர் பெண் பாத்திரத் தையோ, ஒரு பெண் கலைஞர் ஆண் பாத்திரத்தையோ வெளிப் படுத்தும் பொழுது, அவரது இயல்பான பால்நிலை ரசிகர்களுக்கு மறந்து, அங்கே அந்தப் பாத்திரம் மட்டுமே தென்படும் என்றால், அதுதான் பிறவிக் கலைஞனின் கலைவெளிப்பாடாகும்! நான்! எனது நடனத்தில் ஆண் பாத்திரங்களை உணரும் பொழுது, என் உணர்வில், உடலில், எச்சம், சொச்சம் இருக்கும் ஆண்மையினை வெளிப்படுத்த முயற்சிப்பேன்,என்றவர் ஆண் போலவே அபிநயம் பிடித்துக் காட்டினார்.
“பெண்மை! ….ஆஹா! எத்தனை இனிமையான வார்த்தை! என் உயிரில் பிறந்து, உணர்வில் கலந்து, இதயம் நுழைந்து, உடலில் வெளிப்பட்ட ஓர் உன்னதம்! என் உயிரினைப் பற்றிக்கொண்டு, இன்று என்னை உயிருடன், உணர்வுடன், சுதந்திரமாய் வாழ வைத்திருக்கும் அற்புதம்! என் நடனத்தில், பெண்மையை வெளிப்படுத்தக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் என்னை நான் மறந்து, இறைநிலையை உணர்கின்றேன் என்பதே உண்மை! இப்பெண்மைக்கான அங்கீகாரத்தை, இந்த காற்றடைத்த பொய்யான உடலில் நிருபிக்கத்தான் எனது இத்தனை நாள் வாழ்க்கைப் போராட்டம்! அதில் வரலாற்றுப் பதிவாகும் படியான மகத்தான வெற்றியும் பெற்று வருகின்றேன் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த உண்மை!என மெய் சிலிர்த்தவர் பெண்மையின் மென்மையை அபிநயத்தில் கொண்டுவந்தார்.
“இன்று, என்னை உலகிற்கு அடையாளப் படுத்திய மூன்றாம் பால் நிலையான திருநங்கைத் தன்மை! பிறந்தது முதல், கேலி, அவமானம், ஏமாற்றம் எனத் தீராத உணர்வுப் புண்ணைத் தந்து என்னை ஓட ஓடத்துரத்தி, சமூகம் தந்த வலியை அனுபவித்து சோர்ந்து போகாமல்…. எதிர்ப்பில் இருந்தே எனக்குத் தேவையான மன உறுதியை, நிலை பிறழாத் தன்மையை உரமாக்கிக் கொண்டு, பால்நிலை உடலுக்குத்தான் உண்டே தவிர! ….. உலகின் எந்த உயிருக்கும், உள்ளத்திற்கும், உணர்விற்கும், பால்நிலை வேறுபாடு கிடையாது என உடைத்தெறிந்தேன். என் வாழ்க்கையைப் பணயம் வைத்தேன்! வென்றேன்!- என்று நர்த்தகி நடராஜ் பேசியபோது அவரது தன்னம்பிக்கை வெளிப்பட்டது.தொடர்ந்து அவர் பேசியபோது,
“பழந்தமிழகத்து ஆடல் வகைகளையும், ஆடல் முறைகளையும், அரங்க அமைப்பையும், இன்ன பிற நாட்டியத் தொடர்பான அபிநயச் செய்திகளையும் அள்ள அள்ளக் குறையாமல் வாரி வழங்கும் அற்புதக் காப்பியம் சிலப்பதிகாரம். இதில், அரங்கேற்றக் கதையில், நாட்டிய நன்நூலினை நன்கு கடைபிடித்து ஆடிய மாதவி, தனது காதற்கணவன் கோவலனுக்கு பதினோறு வகை ஆடலையும் ஆடிக்காட்டுகின்றாள். இப்பதினோறு வகை ஆடலில் ஒன்பதாவது வகையாக வருவது தனிச்சிறப்பான பேடி ஆடல். இது அய்ந்து வகை வீழ்ந்தாடல் வகையினில் ஒன்றாகும். இதனை, மன்மதன் பேடி எனும் அலி உருவம் கொண்டு சோ நகரத்து வீதியில் நிகழ்த்துகின்றான்.
ஏன்? எதற்காக? சோ நகரத்து அரசனான பானாசுரனின் மகள் உழை மீது மன்மதனின் மகன் அநிருத்தன் காதல் கொள்கிறான். அதனை ஏற்காத பானாசுரன் அநிருத்தனையும், உழையையும் சிறையில் அடைக்கின்றான். அவர்களை சிறையில் இருந்து மீட்பதற்காக, மன்மதன் உருமாறி இப் பேடி ஆடலை நிகழ்த்துகின்றான். ஆண்மை திரிந்து பெண்மை கோலத்துடன் மன்மதன் ஆடிய ஆடலே பேடிக் கூத்து! இது மட்டும் இன்றி மணிமேகலையில் பேடி வடிவங்கொண்ட ஆடற்கலைஞனின் தோற்றச் சிறப்பை, சீத்தலை சாத்தனார் விரிவாகத் தருகின்றார்.என்றார்.
அடுத்து நர்த்தகி நடராஜ் கூறிய கருத்துகளில் இதுவரை வெளிவராத ஆய்வுச் செய்திகள்.“ சிலப்பதிகாரம், மணிமேகலைக்கு முன்பாக இன்றும் தமிழர் நாகரிகத்தை உலகறியப் பறைசாற்றி வரும் சங்க இலக்கியத்தில் இந்த கூத்து வடிவம் இருந்ததா? ஆம்! இருந்தது என்கின்றது என்னெனப்படுங்கொல் தோழி! எனும் அகநானூற்றுப் பாடல் ஒன்று! இவை அபூர்வமான இலக்கியச் சான்றாகும்,என்று தனது ஆய்வுரையை முடித்தார்.
தமிழர் பண்பாட்டில் இசையும், நாட்டியமும் ஆதிநாள் தொட்டே இருந்து வந்துள்ளது என்பதற்கு நர்த்தகி நடராஜ் எடுத்துரைத்த ஆய்வுக் கருத்து புதிய ஆய்வுகளுக்கு அடிகோலியுள்ளது.