Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஏந்தல் பெரியார்! – முனைவர் கடவூர் மணிமாறன்

என்றும் இவரே பெரியாராம்;
இனமா னத்தை இயம்பியவர்
குன்றென நிமிர்ந்தே எழுந்திட்டார்
குவலயம் மதிக்க உயர்ந்திட்டார்!
சாதி மதங்களைச் சாடியவர்!
சமத்துவ உணர்வை ஊட்டியவர்!
வேதம் புராணம் பொய்புரட்டை
வெகுண்டே நாளும் விளக்கியவர்
இல்லா ஒன்றை இல்லையென்றார்!
ஏய்ப்போர் முகத்திரை கிழித்திட்டார்;
பொல்லா இழிவைப் பகுத்தறிவால்
போக்கிடக் கருத்து விருந்தளித்தார்!
வரலா றிவரை வாழ்த்திடுமே!
வைக்கம் மறவரைப் புகழ்ந்திடுமே!
அரசியல் விழிப்பை அளித்திட்டார்
ஆரியச் சூழ்ச்சியைத் தடுத்திட்டார்!
சுயமரி யாதையை எடுத்துரைத்தார்
சூத்திரப் பட்டம் துடைத்தெறிந்தார்!
பயமோ பக்தியோ தேவையில்லை
பகுத்தறி வொன்றே வேண்டுமென்றார்!
பெண்கள் உரிமைக் குரல்கொடுத்தார்
பீடுறப் புரட்சியை விளைத்திட்டார்!
மண்ணில் அனைவரும் சமமென்றார்
மந்திரம் சாத்திரம் பொய்யென்றார்!
ஏற்றத் தாழ்வினைக் கடிந்துரைத்தார்!
எழுத்தால் பேச்சால் இடித்துரைத்தே
மாற்றம் மலர்ந்திடப் போர்தொடுத்தார்!
மக்கள் நெஞ்சில் இடம்பிடித்தார்!
அண்ணா கலைஞர் ஆசிரியர்
அன்புத் தளபதி போற்றுகிற
எண்ணம் செயலால் சிறந்தொளிர்ந்த
ஏந்தல் பெரியார் புகழுரைப்போம்!  ♦