… சமா. இளவரசன் …
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது ஒரு தனியார் அமைப்பாகும். இதன் சார்பாக விளையாடும் அணியைத் தான் இந்தியக் கிரிக்கெட் அணி என்று அழைக்கிறார்கள். 2023 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியை வழக்கத்திற்கு மாறாக அகமதாபாத்தில் நடத்துவதாகப் புலம்பிக் கொண்டிருந்தார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அதனால் என்ன, அது புதிதாகக் கட்டப்பட்ட மைதானம். அதாவது 2015 வரை அங்கிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமைக்காக 1,32,000 அமரும் வசதியுடன் கட்டப்பட்ட ஸ்டேடியம். என்ன ஒன்று… பட்டேலைத் தூக்கிவிட்டு, நரேந்திர மோடி பெயரை வைத்தார்கள். எனவே, அங்கே இறுதிப் போட்டியை நடத்துவதென்று முடிவு செய்திருந்தார்கள். பிசிசிஅய்-யின் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா ஆச்சே!
அதிலும், தொடர் வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய அணி. அதில் ஷமியின் பங்களிப்பு அபாரமானது. அவரைக் கரித்துக் கொண்டிருந்தவர்களெல்லாம், அரை இறுதிப் போட்டியில் அவரின் பங்களிப்பால் வாயை மூடிக் கொண்டிருந்தனர்.
இந்த முறை உலகப் போட்டி வழக்கத்திற்கு மாறாக சங்கி அடையாளங்களுடனே நடந்தது தான் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவது, வீரர்களுக்குக் காவி உடை வழங்குவது என்று இந்திய கிரிக்கெட்டையும், அதன் ரசிகர்களையும் ஹைஜாக் செய்யும் முழு முயற்சியில் இறங்கியிருந்தது பா.ஜ.க.
இந்த நிலையில் தான் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால் அப்படியே அந்தக் கோப்பையைத் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டு, இந்தியப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர். முடிவு வேறாயிற்று. அதில் அவர்கள் நடந்துகொண்ட விதமும் முகம் சுழிக்கும்படி இருந்தது. கோப்பையை ராமர் வடிவத்தில் இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா மோடியிடம் வழங்குவதைப் போன்ற ஓவியமெல்லாம் தீட்டி தயாராக இருந்தவர்களுக்கு,ஒட்டுமொத்த மைதானமும், இந்திய அணியின் நீல நிறத்தில் அமர்ந்திருக்க, பார்வையாளர்கள் தரப்பிலிருந்து தங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காது என்பதோடு, நிச்சயம் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அவர்களின் தொனி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டே களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணியும், அதன் கேப்டனும், சொன்னபடியே அரங்கில் இருந்தோரை ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்ப முடியாதபடி தங்கள் ஆட்டத் திறமையால் வாயடைக்க வைத்தனர்.
யாகம், வேண்டுதல், பிரார்த்தனை, ஜோசியம் என்று என்னவெல்லாமோ வித்தை காட்டிக் கொண்டிருந்தார்கள் ஊடகங்களில்! பார்வையாளர் அரங்கம் எப்படி இருந்தாலும், விளையாட்டு விளையாட்டாக நடந்தது மைதானத்தில்! இந்திய_ஆஸ்திரேலிய திறமையான வீரர்கள் சரியாக விளையாடினர். வெற்றி தோல்விகள் விளையாட்டு வீரர்களுக்கு இயல்பானவை. அவர்கள் கடந்துவிட்டார்கள்.
ஆனால், அதை வைத்துக் கொண்டு இந்தியாவிலிருந்து சிலர் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியும் இந்தியாவைச் சேர்ந்தவருமான வினி ராமனுக்கும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் என்பவரின் மனைவிக்கும் குழந்தைக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறார்களாம். இது போதாதென்று, “வாங்கிய உலகக் கோப்பை மீது கால் வைத்து பீர் சாப்பிடுகிறார்; அது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் மீது குஜராத்தில் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறாராம். மதவெறி எத்தகைய மடையர்களாகவும், மனிதத்தன்மை அற்றவர்களாகவும் ஆக்கும் என்பதற்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவுக்கு இவர்கள் சொல்லிய பெயர்க்காரணம் தான் ’அடேங்கப்பா’ ரகம்!
ஆஸ்திரேலியா என்றதும் ஏதோ வெள்ளைக்காரன் தேசம் என்று கருதிவிடாதீர்கள். இந்த ஒட்டுமொத்த உலகமும் யுதிர்ஷ்ட்ர மகாராஜாவால் ஆளப்பட்டதாகும். அதில் ஆஸ்திரேலியா என்றால் அஸ்திர ஆலயம் என்று பொருள். அதாவது பாண்டவர்கள் தங்களின் அஸ்திரங்களை வைத்திருந்த ஆலயம் தான் இன்று ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படுகிறது’ என்று தெலுங்கில் ஒரு வீடியோ ஓட்டியிருக்கிறார் ஓர் உபன்யாசகி. அது மட்டுமல்ல… மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இதையே சொல்லி, அதனால் தான் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது என்றும் எழுதியிருக்கிறார்.
ஒரு வேளை ராமாயணத்து ராமருக்கும், மகாபாரதத்துப் பாண்டவர்களுக்கும் போரோ என்னவோ? இந்தச் சங்கிகளின் உலகமே தனி தான்! ♦