மும்பை இரத்தினம் அம்மையாரின் நீங்கா நினைவுகள்..!

2023 கட்டுரைகள் நவம்பர் 16-30, 2023

நேர்காணல் 
… வி.சி.வில்வம் …

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்து பெரியாரியல் கொள்கைகளைத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தக் கூடிய மாநிலம் மராத்தியம்!
தமிழ்நாட்டில் 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நான்கே ஆண்டுகளில் மராத்திய மாநிலம் மும்பையில் 1948இல் திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது! அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மராத்திய மாநிலமும் மராத்திய வாழ் தோழர்களும்!

மராத்திய மாநிலத்தின் வேர்களாக, விழுதுகளாகக் கருதப்படுவோர் மானமிகுவாளர்கள் பொ.தொல்காப்பியன், எம்.மோசஸ், ஜோசப் ஜார்ஜ், பெ.மந்திர மூர்த்தி, திராவிடன், த.மு.ஆரிய சங்காரன், ஆர்.ஏ.சுப்பையா,‌சி.என்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.அன்பழகன்,என்.ஏ.சோமசுந்தரம், வி.நடேசன், ஞா.இராவணன், எஸ்.இராசு, எஸ்.பெருமாள், ஏ.பி.நெல்லையா (விடுதலை முகவர்), சு.நெல்லையப்பா, மாரா.சு.இசக்கி, சி.வேலாயுதம், ம.தயாளன், பி.இரத்தினசாமி, மு.தருமராசன் போன்றோர்!

இதில் பொ.தொல்காப்பியன் அவர்களை மும்பை இயக்கத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். இவரின் இயற்பெயர் ஆனைமலை கணபதி. தொடக்கத்தில் கொழும்பில் வசித்த நிலையில், பிறகு மும்பை சென்றுள்ளார். 1953 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்த போது, மும்பை மாநகரிலும் பிள்ளையார் சிலை உடைப்பை நடத்த பொ.தொல்காப்பியன் முயற்சி செய்துள்ளார். அந்தளவிற்கு கொள்கைகளும், உணர்வுகளும் நிறைந்த மண்ணாக மராத்திய மாநிலம் இருந்து வந்திருக்கிறது!

இந்நிலையில் பொ.தொல்காப்பியன் அவர்கள் 1990ஆம் ஆண்டு, தமது 70ஆம் அகவையில் மறைவுற்றார். அவர்களின் வாழ்விணையர் இரத்தினம் அம்மாள் (வயது 87) மும்பையில் செம்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.

அவரது கொள்கை அனுபவங்களை, நம் இளம் தோழர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் “உண்மை” இதழுக்கு நாம் நேர்காணல் செய்தபோது,

அம்மா வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்…

என் பெயர் தொ.இரத்தினம். வயது 87 ஆகிறது. சொந்த ஊர் திருச்சி. காந்தி மார்க்கெட் அருகே எங்கள் வீடு உள்ளது. எனது இணையர் பெயர் தொல்காப்பியன். அவர்கள் மும்பையில் வசித்து வந்தார்கள்.

எங்களுக்குள் இணையேற்பு நிகழ்வு முடிந்ததும் நானும் மும்பை வந்துவிட்டேன்.
திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது?

திருச்சி பெரியார் மாளிகையில் 1953 ஆம் ஆண்டு தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் ஒரு சேர எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். நாங்கள் ஜாதி மறுத்த, தாலி மறுத்த இணையர்கள்! இணையேற்பு முடிந்ததும் மும்பை தீவா பகுதிக்குக் குடி வந்தோம். அப்போது நான் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். மராத்தி, இந்தி சரளமாகப் பேசுவேன்.‌

தங்களுக்குப் பெரியார் கொள்கை எப்போது அறிமுகம் ஆனது?

திருமணத்திற்கு முன் அதிகம் அறிமுகம் இல்லை. பெரியார், மணியம்மையாரைச் சந்தித்த பிறகும், இணையேற்பு முடிந்த பிறகும் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டேன். தாராவி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். அந்தக் காலத்திலேயே குடும்பம், குடும்பமாகத் தமிழர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோம். “பம்பாய் முரசு” எனும் தமிழ்ப் பத்திரிகையை, எங்களின் கௌதமன் அச்சகம் மூலம் இணையர் தொல்காப்பியன் நடத்தி வந்தார்.‌அங்கும் தோழர்கள் அதிகம் வருவார்கள்.

அந்தக் கால கட்டத்தில் மும்பை மாநகரில் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

தமிழ்நாடு போலவே மும்பையிலும் இயக்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும்.
எனது இணையர் திராவிடர் கழகச் செயல்பாடுகளில் ஆர்வமாக இருப்பார். இயக்கத்தைக் கடந்தும், மும்பை வாழ் தமிழர்களிடம் சிறப்பாகப் பழகுவார். மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் கூட ஒருமுறை போட்டியிட்டார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இருவரையும் அழைத்து நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளோம்.‌பெரியார் மூன்று முறை மும்பை வந்ததாக எனக்கு நினைவு. எங்கள் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போவோம். பெரியார் பிறந்த நாள் விழா, மாநாடுகள், சிறு சிறு நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து நடைபெறும். எம்.ஆர் இராதா அவர்கள் கூட மும்பை நிகழ்ச்சிக்கு வந்து, எங்கள் வீட்டில் தங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களும், தொல்காப்பியன் அவர்களும் நல்ல நட்பில் இருந்தார்கள்.‌

எங்கள் குழந்தைகளுக்கு ‘பொன்னரசி’, ‘காமராஜ்’, ‘செல்வமணி’ போன்ற பெயர்களை பெரியார் வைத்தார். எங்கள் பிள்ளைகளுக்குமே சுயமரியாதைத் திருமணம் தான் செய்து வைத்தோம். மும்பையில் யாராவது தாலி கட்டாமல் திருமணம் செய்தால் தொல்காப்பியன் அவர்கள் ரூ. 100 பரிசளிப்பார்கள்.

தமிழ்நாட்டிற்கு இப்போது பயணம் செய்வதுண்டா?

அதிகம் செல்வது கிடையாது. இணையர் தொல்காப்பியன் அவர்களின் நினைவு நாளான ஜனவரி 9 அன்று, ஒவ்வோர் ஆண்டும் மகன் காமராஜ் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சென்று வருவார். தான் இறந்த பிறகு எந்தச் சடங்குகளும் கூடாது, பெரியார், அம்பேத்கர் படங்கள் அருகில் இருக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைத்திருந்தார்கள். அதன்படியே செய்து, மேலப்பாளையத்தில் நினைவுச் சதுக்கம் எழுப்பியுள்ளோம்.

மும்பை திராவிடர் கழகத்தின் தோற்றுநர்கள் பொ.தொல்காப்பியன், பெ.மந்திரமூர்த்தி, ஜோசப் ஜார்ஜ் மூவருமே மேலப்பாளையம் ஊரைச் சேர்ந்தவர்கள் தான். இதில் ஜோசப் ஜார்ஜ் என்பவர் தான், “கிறிஸ்தவர்கள் சிந்தனைக்கு” எனும் நூல் எழுதியவர். மேலப்பாளையம், திராவிடர் கழகத்தின் கோட்டையாக அறியப்பட்ட ஊர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தோழமைக் குறித்துக் கூறுங்கள்?

தமிழ்நாட்டில் மாநாடுகள் நடைபெற்றால், மும்பையில் இருந்து குடும்பத்துடன்
செல்வோம். பெரியார், மணியம்மையார் இருவரையும் சந்தித்து வருவோம். பெரியார் இல்லத்தில் 3 நாட்கள் நாங்கள் தங்கியுள்
ளோம். அதேபோல திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களையும் நன்கு அறிவேன். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.‌ மும்பை நிகழ்ச்சிக்கு வந்த போது ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையார் இருவரும் எங்கள் வீட்டில் தங்கிய நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது. அது 1965_66 ஆக இருக்கும் என நினைக்கிறேன்.‌அப்போது நாங்கள் செம்பியன் பகுதியில் உள்ள சுபாஸ் நகரில் இருந்தோம்.
தவிர, மும்பை வந்த பிற காலங்களிலும் ஆசிரியரைச் சந்திப்போம். இப்போது என்னால் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். ஆசிரியர் அவர்களையும், மோகனா அம்மையார் அவர்களையும் சந்திக்கும் விருப்பம் இருக்கிறது.
(இந்தச் செய்தியைப் பகிர்ந்துக் கொண்ட கணத்தில் அவர்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. உடனே ஆசிரியர் அவர்களைக் கைப்பேசி வழி தொடர்பு கொண்டு இரத்தினம் அம்மையாரைப் பேச வைத்தோம். அவ்வளவு உற்சாகம்! அவ்வளவு நிறைவு!)

ஆசிரியர் தொடர்பான மலரும் நினைவுகள் வேறென்ன இருக்கிறது?

தொல்காப்பியன் அவர்களுக்கு 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சி மட்டுங்கா பகுதியில் நடத்தப்பட்டது. அதனையொட்டி மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின்படிதான் இவ்விரண்டும் நடைபெற்றன. அந்நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் வருகை தந்தார்கள். மோகனா அவர்கள் புத்தாடை எல்லாம் எடுத்து வந்து எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டார்கள்.‌அந்த சமயம் நாங்கள் அனைவரும் புனே சுற்றுலா சென்றோம்.

பெரியார் – மணியம்மையார், ஆசிரியர் – மோகனா அம்மா என இயக்கம் என்பதைக் கடந்து, குடும்ப ரீதியாகவும் பழகும் பெரும் வாய்ப்பை நான் பெற்றேன். பெரியார், பட்டையாய்  அகலமாய் இருக்கும் பெல்ட் அணிவார். அதை தொல்காப்பியன் அவர்களிடம் கூறி, மும்பையில் இருந்து வாங்கி அனுப்பச் சொல்வார். அவற்றை எல்லாம் மறக்க முடியாது!

கடந்த 2008 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளை, மகளிர் மட்டுமே நடத்தினார்கள். அந்நிகழ்வில் என்னை அய்யா படத்தை திறக்கச் சொன்னார்கள்.
அப்போது போலவே இப்போதும் இயக்கம் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது!
அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

-என்று தனது பேட்டியை நிறைவு செய்தார்.♦