– மஞ்சை வசந்தன்
தொல் தமிழர் வாழ்வில் ஜாதியில்லை, மதம் இல்லை, வருணம் இல்லை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடு. பெண்களுக்கே சமுதாயத்தில் முன்னுரிமை. சொத்து, நிர்வாகம், உரிமைகள் அனைத்தும் பெண்களிடமே இருந்தன. அதனால் தமிழர் சமுதாயம் தாய் வழிச் சமுதாயமாகும்.
ஆணும் பெண்ணும் காதல் கொண்டு இருமனமும் ஒத்துப்போனால் இருவரும் இணைந்து வாழத் தொடங்குவர். பெண்ணை மணந்துகொள்ளும் ஆண் பெண்ணின் வீட்டில் சென்று வாழ்வான். பெண் தன் குடும்பத்தில் நிலையாக இருப்பாள். பெற்றோர்களும் உறவினர்களும் அதை ஏற்பர். மற்றபடி திருமணச் சடங்குகள் எதுவும் தமிழர் வாழ்வில் இல்லை.
இதைக் கீழ்க்கண்ட சங்கப்பாடல் (குறுந்தொகை_40) தெளிவாகக் காட்டி நிற்கிறது.
‘‘யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’
யாய் = என்னுடைய தாய்;
ஞாய் = உன்னுடைய தாய்;
எந்தை = என் தந்தை;
நுந்தை = உன் தந்தை;
கேளிர் = உறவினர்;
செம்புலம் = செம்மண் நிலம்;
பெயல் = மழை;
பாடலின் பொருள்:
என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
இருவரும் அறிந்தோம் இல்லை!
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்?
உறவினர் இல்லை!
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? உறவின் வழி நாம் அறிமுகமாகவில்லை!
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
நம் அன்புடைய நெஞ்சங்கள் தாமாக ஒன்றுபட்டனவே!
செம்மண் நிலத்தில் பெய்த நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்று கலந்தனர் என்கிறது சங்கப் பாடல்
தமிழர்களில் ஜாதி, மத, சடங்குகள் அற்ற மணமுறையைத் தெளிவாக விளக்குகிறது கீழ்க்கண்ட பாடலும், விளக்கமும்
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குடத்தார் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நல்பல உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேனெப் புகுதந்து
பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.” (அகநாநூறு – மருதம்- 136)
மணம் நடத்தப்பெறும் இல்லத்தின் முன்னே தென்னங்கீற்றாலான பந்தல் போடப்படும். மணப் பந்தலைச் சுற்றிலும் பல்வேறு வகையான மலர் மாலைகள் தொங்கவிடப்படும். மணி மாலைகளையும் ஆங்காங்கே தொங்கவிடுவார்கள்.
உளுந்து பருப்பைச் சேர்த்து சமைக்கப்பட்ட பொங்கலை விருந்தினர்கள் உண்ண அளிப்பார்கள்.
புதுமணல் பரப்பப்பட்ட இடத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதுவே மணமேடை.
அதிகாலையில் இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலர் ஆற்றுக்குச் சென்று ஆற்றுநீரைக் குடங்களில் நிரப்பிக்கொண்டு வந்து மணப்பந்தலின் முன்னே வைப்பர். அக்குடத்தில் உள்ள நீரை நான்கு பெண்கள் எடுத்து மணப்பெண்ணிற்கு நீராட்டுவர்.
அவ்வாறு நீராட்டுகையில் “கற்பொழுக்கத்தில் கொஞ்சமும் பிறழாமல், பதினாறு பேறுகளையும் பெற்று உன் கணவன் மகிழும்படி நாளும் நடப்பாயாக!” என்று அனைவரும் வாழ்த்துவர். அதன்பின் அவளுக்குப் புத்தாடை அணிவித்து மணற்பரப்பில் அமர்த்துவர். பின் அனைவரும் வாழ்த்துக்கூறி மணமகனோடு சேர்ந்து வாழச் செய்வர்.
மேற்கண்ட திருமண முறையை ஆராய்ந்து பார்க்கும் போது பண்டைத் தமிழர்கள் திருமணத்தில், தாலி இல்லை. தரம் கெட்ட மந்திரம் இல்லை. எரிவளர்த்தல் இல்லை. ஏய்த்துப் பிழைக்கும் புரோகிதப் பார்ப்பான் இல்லை.
அம்மி மிதித்தல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
இப்பாடல் 1600 ஆண்டுகளுக்குமுன் நல்லூர்கிழாரால் எழுதப்பட்டது. இன்னும் ஆதாரம் வேண்டுவோர் கவிஞர் விற்றூற்று மூதெயினனார் எழுதிய அகம் – மருதம் 136யும் காண்க.)
இப்படிப்பட்ட மணநிகழ்வுகூட மிகப் பிற்காலகாலத்தில்தான் நடைமுறைக்கு வந்தது.
உறவில் திருமணம், அத்தை மகள், அக்கா மகளை மணத்தல் போன்ற உறவுக்குள் திருமணங்கள் தமிழரிடையே இல்லை. இந்த முறைகள் எல்லாம் பின்னாளில் ஆரியர் தமிழரோடு கலந்து வாழத் தொடங்கியபின் வந்த சீர்கேடுகள்.
ஆரியர்கள், இந்தியாவிற்குள் பிழைப்பதற்காக வந்த அயல்நாட்டவர். அவர்கள் இந்தியாவிற்குள் குடியேறியபோது தங்கள் இனத்துப் பெண்களோடு வரவில்லை. ஆண்கள் மட்டுமே வந்தனர். அதனால், அவர்கள் தங்கள் இனத்தைப் பெருக்கவும்; வாழ்க்கையில் துணையாக வாழவும் தமிழ்ப் பெண்களையே மணந்தனர்.
பெண்ணைத் தங்கள் வாரிசை உருவாக்கும் விளை நிலமாகவே கருதினர். அதனால் பெண்ணை ஆணின் உரிமைப் பொருளாய், உடைமையாய்க் கொண்டனர்.
அதனால், பெண்ணின் உரிமைகள் அனைத்தையும் பறித்தனர். பெண்ணை ஆணின் வாழ்நாள் அடிமையாக ஆக்கினர். தான் மணக்கும் பெண்ணை, பெண்ணின் பெற்றோரிடமிருந்து தானப் பொருளாகப் பெற்றனர். அதனால், அது “கன்னிகாதானம்” எனப்பட்டது.
ஜாதிக்குள் திருமணம், மதத்திற்குள் திருமணம் என்பதை இன்றைக்கும் கட்டாயப்படுத்தி,
காப்பாற்றி வருபவர்கள் ஆரியப் பார்ப்பனர்களே.
இருவேறு கலாச்சாரப் போர் திருமணம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை இருவேறு கலாச்சாரங்களுக்-கிடையே இருவித முறைகளில் நடந்தது. தொன்மைத் தமிழர் திருமணமுறை அறிவிற்கு உகந்த மனிதநேயத்தின் அடிப்படையிலானது. ஆரிய மணமுறை மடமை மலிந்த மனித விரோதச் செயல்முறையாகும்.
சமத்துவம்:
தமிழர் மணமுறை சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்பட்டு, சமஉரிமையுடன் சம பொறுப்பேற்று, செய்யப்பட்டது ஆகும். ஆனால், ஆரிய மணமுறை பெண்ணை மனிதப் பிறவியாகவே கருதாத ஆதிக்கம் நிறைந்த மணமுறையாகும்.
சமஉரிமை:
தமிழர் மணமுறை ஆணும் பெண்ணும் சமஉரிமையுடன் முடிவு செய்யும் மணமுறை. இதில் ஆணும் பெண்ணும் சமஉரிமையுடைய இணையர்களாக இணைவர். ஆனால், ஆரிய மணமுறையில் பெண் தானமாகப் பெறப்படும் பொருளாகிறாள். பெண்ணுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவள் வாழ் நாள் எல்லாம் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாள்.
வயது:
தமிழர் திருமணம் வயது வந்த ஆணும் பெண்ணும். முழு விருப்பத்தில், ஒரு வரையொருவர் விரும்பி ஏற்பது. ஆனால் ஆரிய மணமுறை குழந்தையாய் இருக்கும்போதே கட்டாயப்படுத்திச் சேர்க்கப்படுவது. இணைந்து வாழ வேண்டிய ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பங்களை எவ்வகையிலும் வெளிப்படுத்த முடியாத ஆதிக்கத் திருமணம். அது உடற்கூறு அடிப்படையிலும், உளவியல் அடிப்படையிலும், உரிமை அடிப்படையிலும் ஆரிய மணமுறை குற்ற நடைமுறையாகும்.
சடங்கு:
சடங்குகள் ஏதும் இன்றி வயது வந்த ஆணும், பெண்ணும் தங்கள் விருப்பத்தின்பேரில் சேர்ந்து வாழும் முறை தமிழருடையது. ஆனால், அக்னி வளர்த்தல், தாலி கட்டுதல், 7 அடி எடுத்து வைத்தல், அம்மி மிதித்தல், அருந்ததி
பார்த்தல் என்று அறிவுக்கு ஒவ்வாத சடங்குகளை அதிகம் கொண்டது ஆரிய மணமுறை.
விலகல் உரிமை:
இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் விருப்பம் இல்லையெனில் பிரிந்து வாழலாம்; விருப்பமானவருடன் வாழலாம் என்ற உரிமை தருவது தமிழர் மணமுறை. ஆனால், 5 வயதில் கணவனை இழந்தாலும் வாழ்நாள் எல்லாம் விதவையாய் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆரிய மணமுறை.
வருணம், ஜாதி, மதம்: வருண பேதம், ஜாதி பேதம், மத பேதம் அற்றது தமிழர் திருமண முறை. ஆண் என்ன ஊர்? அவர் பெற்றோர் யாவர்? பெண் எந்த ஊர்? அவர் பெற்றோர் யாவர்? என்று கூட அறியாத இரு உள்ளங்கள் காதலால் இணைந்து வாழும் மணமுறை தமிழருடையது. ஆனால், வருணக் கலப்பு, மதக் கலப்பு ஜாதிக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று வருணத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் திருமணம் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஆரிய மணமுறை.
பண்பாட்டுத் திணிப்பு:
இப்படி இருவேறு முரண்பட்ட மணமுறைகள் காலப்போக்கில் கடவுள், சாஸ்திரம், சடங்கு, புராணம், கோத்திரம் போன்ற காரணங்களால், தமிழர் மணமுறையை அழித்து, ஆரிய மணமுறை தன்னை நிலைப்படுத்திக்கொண்டது.
அதன் விளைவால் வந்தவையே புரோகிதத் திருமணங்கள். புரோகிதத் திருமணங்கள் ஆயிரமாண்டுகளாய் நிலைபெற்று அதுவே தமிழர்க்கும் திருமணமுறை என்றானது. சட்டப்படியும் அது ஏற்கப்பட்டது.
தாலியில்லாமல், புரோகிதர் இல்லாமல், சடங்குகள் இல்லாமல், ஏழு அடி நடக்காமல், அக்கினி வளர்க்காமல் அம்மி மிதிக்காமல் அருந்ததி பார்க்காமல் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பும் கூறிய நிலையும் இருந்தது.
பெரியாரின் சுயமரியாதைத் திருமணமுறை தமிழனைச் சூத்திரனாக்கி, இழிவுபடுத்தி, பெண்ணை அடிமையாக்கி, வீட்டில் முடக்கிய ஆரிய வைதிகத் திருமணமுறையை ஒழித்து, தன் மனத்திற்கு உகந்த அறிவுக்கும், உரிமைக்கும் கேடில்லாத புரோகிதம் இல்லா சுயமரியாதைத் திருமணமுறையை பெரியார் கொண்டுவந்தார்.
இதில் ஜாதி,, மத்திற்குள் தான் திருமணம் என்ற கட்டாயம் தகர்க்கப்பட்டது. தாலி கட்டாயமில்லை, மாலை மட்டுமே மாற்றிக் கொண்டால் போதும். சுயமரியாதைத் திருமணங்களில் புரோகிதரோ, மந்திரம் ஓதுவதோ, அக்கினி வளர்ப்பதோ இதர சடங்குகள் செய்வதோ கூடாது என்று நிபந்தனை கட்டாயமானது.
இத்திருமணமுறையை அரசியல் சட்டம் ஏற்கவில்லை. சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாது என்று சட்டம் கூறியது. என்றாலும் அதையும் மீறி அறிவுக்கும் மானத்திற்கும், உரிமைக்கும் முன்னுரிமையளித்து, இழிவு நீங்க சுயமரியாதைத் திருமணம் புரிந்தவர்கள் பலர்.
அண்ணா தந்த சட்ட அங்கீகாரம்
சட்டம் ஏற்கவில்லையென்றாலும் பெரியார், அண்ணா, கலைஞர், ஆசிரியர் கி. வீரமணி போன்ற தலைவர்களின் தலைமையிலும், உள்ளூர் பெரியார் தொண்டர்களின் தலைமையிலும் ஏராளமான திருமணங்கள் நடந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் 1967இல் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராய் ஆட்சிப் பொறுப்பேற்றதும், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளித்தார். அச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு நடந்த திருமணங்களும் செல்லும் என்று சட்டப்படி வழி செய்தார். அதன் பிறகு ஆரியப் பார்ப்பன மந்திரமோதும் வைதிகத்திருமணங்கள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு 90% மேல் சுயமரியாதைத் திருமணங்களே நடைபெற்றுவருகின்றன.
ஜாதி, மத மறுக்கும் மணங்கள் அறிவும், மானமும் கொண்ட திருமணங்கள் இன்று பரவலாக நடந்தாலும், ஜாதி, மதம் மறுத்து நடைபெறும் திருமணங்கள் இன்னும் அதிகம் நடைபெறவில்லை. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்பு மணங்கள் பெருமளவில் நடைபெற்றன. பத்திரிகை விளம்பரங்களில் ஜாதி, மதம் தடையில்லையென்ற அறிவிப்புகள் அதிக அளவில் இருந்தன. ஆனால், சுயநல அரசியலுக்காக ஜாதி மதம் சார்ந்த ஆட்சிகள் வரை ஜாதி, மத மறுப்பு மணங்கள் குறைந்தன.
ஜாதி, மதம் சார்ந்த கட்சிகள்
ஜாதி சார்ந்த, மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் வாக்குகள் பெறும் நோக்கில் ஜாதி உணர்வையும், மதஉணர்வையும் தூண்டிவருவதால் ஜாதிப் பிடிப்பும், மதப்பிடிப்பும் மேலோங்க மனிதம், இணக்கம், ஒற்றுமை குலைந்து வருகிறது. ஜாதிய பிடிப்புகளுக்கு, சடங்குகளுக்கு ஊடகங்களும் பெருங்காரணமாக அமைகின்றன. இந்த நிலை எதிர்காலச் சமுதாய நலத்துக்கு மிகவும் கேடானது. எனவே, இந்த நிலை ஒழிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
மத, ஜாதி மறுப்பு மணங்களே மனிதம் காக்கும் ஒரு ஜாதியினர் குடிக்கும் தண்ணீரில் இன்னொரு ஜாதியினர் மலத்தைக் கலக்கும் நிகழ்வும், வேறு ஜாதியில் பிறந்தவரை தன் பிள்ளை
திருமணம் செய்தால் பெற்றோர் வெட்டிக் கொல்லும் கொடுமையும், ஒரு மதத்தாரை இன்னொரு மதத்தார் தாக்கிக், கொல்லும் வெறியும் இன்று வளர்ந்து மனிதத்தை மண்ணில் புதைக்கும் அவலம் வளர்ந்து வருகிறது.
இந்த மனித விரோதக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டு, மதமற்ற, ஜாதி உணர்வற்ற, மனித உரிமைகள் மதிக்கப்படும், அறிவார்ந்த மனித நேயம் மேலோங்கும் சமுதாயம் அமைய ஜாதி மத மறுப்பு மணங்கள் ஒவ்வொரு வீட்டிலும் நடக்க வேண்டும்; நடத்தியாக வேண்டும்.
மதம், ஜாதி மறுத்து மணங்கள் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் அன்னை மணியம்மையாரால் 1974 ஆண்டு பெரியார் திடலில் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக அப்பணியைச் செய்துவருகிறது.
மன்றல் – ஜாதி மறுப்பு; இணைதேடல் பெருவிழா

திருச்சி – மன்றல்
சென்னையில் தொடங்கப்பட்டு கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தியுள்ளது. மணமுறிவு பெற்றோரும், துணையை இழந்தோரும் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
கட்சி, அமைப்புப் பாகுபாடின்றி, அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும், எக்கட்சியையும் சாராதவர்களும் இந்நிலையத்தின் உதவியோடு நல்ல வாழ்க்கை இணையரைத் தேர்ந்தெடுத்து சிறப்புற வாழ்ந்துவருகிறார்கள்.
திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் நலன் காக்கும் இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் அமைப்புகள் என பல தரப்பினரும் ஜாதி மறுப்பு/ மதமறுப்புத் திருமணங்கள் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய முற்போக்குச் சிந்தனையுள்ள குடும்பத்தினருக்குப் பயன்படும் வகையில், தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் ஜாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவினை ‘மன்றல் 2012’ என்ற பெயரில் நடத்தியது பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்.
தொடர்ந்து 2013ஆம் ஆண்டு திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, மீண்டும் சென்னை ஆகிய இடங்களில் மன்றல் நடைபெற்றது.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நவீன வசதிகளுடன் கூடிய இணையதளத்தின் மூலமும் தம் பணியைத் தொடர்ந்து வருகிறது.
ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியார், அதற்கான போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்த 26.11.2012 அன்று சென்னை – பெரியார் திடலில் நடைபெற்றது.
இரண்டு மாதங்களாக இந்நிகழ்ச்சிக்கான பணிகளும், விளம்பரங்களும் தொடர்ந்து செய்யப்பட்டிருந்தன. ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், ஜாதிக்
கட்டுமானம் உடைகிறது என்று மீண்டும் ஜாதிவெறிக் குரல்கள் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் இது நடத்தப்பட்டது.
அன்றைய நாளில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா
2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம்
1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா

மன்றல் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஜாதி ஒழிப்பில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தினர் தொடர்ந்து பதிவு செய்து கொண்டனர். தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை ஜாதி, மதம் தடையில்லாமல் தேர்ந்தெடுக்க இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இது மட்டுமில்லாமல், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான தனிப் பிரிவுகளும் இருந்தன.
இந்நிகழ்வு காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற்றது. இத்துடன் திருமணத்திற்குத் தயாராதல் குறித்த மருத்துவ, மனநல ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஏற்கெனவே ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களும், பல்துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம்
முன்பே, ஒருவருக்கொருவர் விரும்பி ஜாதி, மதம் பாராமல் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப் பாதுகாப்போடு இந்நிகழ்விலேயே திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பிய பலர் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை மேற்கொள்வதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் உரிய அடிப்படை மருத்துவ, மனவளச் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஜாதி மறுப்பு மணமக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
மேலும் சுயமரியாதை முறையில் ஜாதி மறுப்புத் திருமணங்களை சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் சில திருமணங்களே நடைபெற்றன. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 150 திருமணங்கள் வரை நடைபெற்றன. தற்போது 2012 முதல் “இந்த நிறுவனத்தின்மூலம் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான திருமணங்கள் பெரும்பாலும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக :
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் 2022 செப்டம்பர் 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரை நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் _ 1009
ஜாதிமறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் – 937
இதில்
வேற்று மாநிலத்தவர் இணையேற்பு நிகழ்வு – 36
பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் – 41
மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள்- 28
துணையை இழந்தோர் இணையேற்பு நிகழ்வுகள்- 16
ஓராண்டில்மட்டும் இந்த நிறுவனம் மூலம் நடந்த திருமணங்கள் 1009. அதில் மதமறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் 937.
எனவே, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செயல்படுத்திக்காட்டும் வழி சென்று, தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டுச் செயல்பட்டு, ஜாதி மறுப்பு, மதமறுப்பு மணங்களைப் பெருமளவில் நடத்தி, சமத்துவ சமுதாயத்தை, மனிதம் மிளிரும் சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ♦





