Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழர் தலைவருக்கு – தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது !

சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் மாண்புமிகு முதலமைச்சர் தேசியக் கொடியை 15.8.2023 காலை 9 மணிக்கு ஏற்றினார். அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் முதலாவதாக – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர் விருதும் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும் தமிழக முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்.

“தகைசால் தமிழர் விருது” வழங்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் பற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான – சிறப்பான குறிப்பில்,

“முனைவர் கி.வீரமணி அவர்கள் கடலூர் மாவட்டம் பழைய பட்டினத்தில் வாழ்ந்த சி.எஸ்.கிருஷ்ணசாமி-மீனாட்சி இணையருக்கு டிசம்பர் 2, 1933 அன்று மூன்றாவது மகனாகப் பிறந்தவர். இவரது இயற்பெயர் சாரங்கபாணி ஆகும். 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு. “சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு” ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர். 1962 இல் ‘விடுதலை’ நாளிதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று. தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகப் பணி செய்து வருபவர். மேலும், உண்மை, பெரியார் பிஞ்சு.  The Modern Rationalist- (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும் இணைய தளங்கள் வாயிலாக மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவர். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி.வீரமணி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது’’ தமிழ்நாடு அரசு வழங்கிச் சிறப்பிக்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வரின் வாழ்த்து

‘‘தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச்சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர்!

இனம், – மொழி, – நாடு மூன்றும் மூச்சென எந்நாளும் ஓய்வறியாமல் உழைத்துவரும் அவருக்கு, கலைஞர் 100இல் இந்த விருது வழங்குவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாய்க் கருதுகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடையாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டுத் தொய்வின்றித் தொடரட்டும்!’’
-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவர் பேட்டி

விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
”தகைசால் தமிழர் விருது” என்ற இந்த விருது என் பெயருக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், உண்மையில் இவ்விருது தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட விருது.
பெரியாருடைய இயக்கம் ஒரு தொடர் லட்சியப் பயணத்தைச் செய்து எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும்பொழுது, அதற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய எண்ணற்ற மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கக் கூடிய, வாழுகின்ற அத்துணைத் தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் உரியது. தமிழ்நாடு அரசு -”திராவிட மாடல்” அரசு இங்கே சிறப்பாக வழங்கிய தகைசால் தமிழர் விருது என்பது தனிப்பட்ட வீரமணி என்ற ஒரு நபருக்குக் கொடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை. இதை அடக்கத்தோடு நான் பதிவு செய்ய விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்த விருதைப் பெறுகின்ற நேரத்தில், இரண்டு செய்திகள் மிக முக்கியமானதாகும்.

45 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தாக்கப்பட்டு, நெருக்கடி நிலை காலத்தில், அந்தச் சிறைச்சாலைக் கொட்டடியில் தள்ளப்பட்டபொழுது, அவரது உடலில் ரத்தம் வழிகின்ற நிலையில், அவரை அணைத்துப் பிடித்த கைக்குத்தான் – அந்தக் கை இன்றைக்கு விருது கொடுத்திருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது, மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான சூழல் ஏற்பட்டது.

என்றாலும், ஒரு செய்தி மிகவும் முக்கியமானது; இவ்விருது பெரியாருக்குக் கொடுக்கப்பட்ட விருது; பெரியார் தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்ட விருது என்ற பெருமைகள் இருந்தாலும், இவ்விருதைக் கொடுத்தவர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றவர். அந்த வகையிலும் சரி, இவ்விருது கொடுக்கப்பட்ட காலம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தரக்கூடிய காலம்; அது என்னவென்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில், இவ்விருது அளிக்கப்பட்டு இருக்கிறது.
“களப்பணி செய்யும் கடமையை எனது மூச்சாக, பேச்சாக, எழுத்தாகக் கொண்டு நாட்டில் மனித சமத்துவமும், சமூகநீதியும் பேணப்படவும், மறுக்கப்படும் மனித உரிமை மீட்டெடுப்புக்கும், ‘அனைவருக்கும் அனைத்தும்‘ கிட்டும் சமத்துவ, சம வாய்ப்புச் சமூகத்தினை உருவாக்கும் பணியிலும் ஈடுபடுவேன். அந்தப் பணிக்காக எந்த விலையும் தர, என்றும் ஆயத்தமான உறுதியுடன் உள்ளவனாக உழைப்பேன்’’

தேசியக் கொடியேற்றும் அந்த உரிமையை, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்-களுக்கும் கலைஞர் பெற்றுத் தந்திருக்கிறார். இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அந்தக் கொடி ஏற்றிய காட்சியைப் பார்த்தபொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மாநில சுயாட்சியினுடைய முதல் கட்ட வெற்றி என்ற முறையில் அதைப் பார்க்கிறோம்.
தகைசால் தமிழர் விருது பெரியாருக்கு உரியது எனற காரணத்தினால், இவ்விருதுக்கு அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாயை – சிறுகனூரில் அமைக்கப்படும்- பெரியார் உலகத்திற்கு நான் இதை நன்கொடையாக அளிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு சார்பில் 15.8.2023 அன்று கொண்டாடப்பட்ட விடுதலை நாள் விழாவில் ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் –
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் இவ்வாண்டுக்குரிய ‘தகைசால் தமிழர்’ விருதினை எனக்கு அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளமைக்கு. எனது உளப்பூர்வமான, தலைதாழ்ந்த வணக்கம், நன்றி!

கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
தொடர் ஓட்டம்
துடிக்கும் இதயம்
அடர் கொள்கை
அடங்கா வீரம்
சுடர் மொழி
சூறாவளி
வாழ்வை மீறிய சாதனை
வயதை மீறிய இளமை
திராவிட இயக்க
உயிர் நூலகம்
ஆசிரியர் கி.வீரமணி
அந்தத்
தகைசால் தமிழரை
வணங்கி வாழ்த்துகிறேன்
மூத்தத் தலைவர்கள் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்’’ விருது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார் (சென்னை, 14.8.2023)

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்.

இருநிலையாளர்களுக்கும்
எமது நன்றி!

பாராட்டுகள் நம்மை தலைகவிழச் செய்கின்றன! எதிர்ப்புகள் தலையை நிமிர்த்துகின்றன! எனவே, இருநிலையாளர்களுக்கும் எமது நன்றி!
பயணங்கள் முடிவதில்லை!
லட்சியங்கள் தோற்பதில்லை!!
என்று தமது உள்ளத்து உணர்வுகளை வெளியிட்டார். ♦