Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வரலாற்றுச் சுவடுகள்

தேவஸ்தான மசோதா

சென்னை மாகாணத்தில் தேவஸ்தானங்களும் தர்ம ஸ்தாபனங்களும் இந்துமத, ஸ்தாபனங்களும் மொத்தத்தில் கோடிக்கணக்கான வரும்படி
உடையதுகளாயிருந்தும் அவை குறிப்பிட்ட காரியங்களுக்கு உபயோகப்படாமல் பெரும்பாலும் பிராமணர்களும், தாசி வேசி முதலிய விபசாரிகளும், வக்கீல்களும், அனுபவிக்கவும் தேவஸ்தான “ட்ரஸ்டி’’ என்போர்களும் மடாதிபதியென்போர்களும் சமயாச்சாரி என்போர்களும் லோககுரு என்போர்களும் மகந்துக்கள் என்போர்களும் சுயமாய் தங்கள் இஷ்டம்போல் அனுபவிக்கவும் கொலை, களவு, கள்குடி, விபசாரம் முதலிய பஞ்சமா பாதகங்களுக்கு உபயோகப்-படுத்தவும், சோம்பேறிகளுக்கும் விபசாரத் தரகர்களுக்கும் பொங்கிப்போடவும், உபயோகப்படுத்திக்கொண்டு வருவதை தென்னிந்தியர்கள் வெகுகாலமாய் அறிந்து வந்திருக்கிறார்களென்பதை நாம் கூறத் தேவையில்லை.

அதன் பலனாய் “காங்கிரஸ் கான்பரன்ஸ்’’ என்று சொல்லப்படும் ராஜீய ஸ்தாபனங்களின் மூலமாகவும், பல சமயசபைகள் மூலமாகவும், இவ்வக்கிரமங்களையெல்லாம் அடக்கிக் கோடிக்கணக்கான வரும்படியுள்ள சொத்துக்கள் ஒழுங்காய் பரிபாலிக்கப்படவும், அதன் வரும்படிகள் குறிப்பிட்ட விஷயங்களுக்கு கிரமமாய் உபயோகிக்கப்படவும், மீதியிருந்தால் இந்துமத சம்பந்தமான ஒழுக்கங் கற்பிக்க பொது ஜனங்களுக்கு உபயோகப்படவும் அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்து தக்கதான ஓர் சட்டம் செய்ய வேண்டியது நமது அரசாங்கத்தின் முக்கியக் கடனென்றும், கொஞ்சமும் காலதாமதம் செய்யாமல் உடனே செய்யப்படவேண்டியது மிகவும் அவசியமானதென்றும், இதுவரை செய்யாமல் அரசாங்கத்தார் கவலையீனமாயிருந்தது பெரிய குற்றமென்றும், இதற்கு முன் இதற்காக ஆயிரத்தெட்டு நூற்று அறுபத்திமூன்றிலும் (1863) அரசாங்கத்தாரால் செய்யப்பட்டிருக்கும் இந்துமத தர்மசொத்துகள் பரிபாலனச் சட்டம் போதுமான அளவு பந்தோபஸ்தளிக்கக் கூடியதாயில்லையென்றும், பல தீர்மானங்களைச் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியுமிருக்கிறது, உதாரணமாக, ஈரோட்டில் 1915ஆம் வருஷம் ஜூலை மாதம் 24, 25 தேதிகளில் டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் அக்கிராசனத்தின் கீழ்நடந்த கோயமுத்தூர் ஜில்லா இரண்டாவது கான்பரன்ஸ் என்னும் ராஜீய மகா நாட்டில், 8ஆவது தீர்மானமாக அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதாவது, “தர்ம ஸ்தாபனங்கள், மதசம்பந்தமான தேவாலயங்கள் சரிவர பரிபாலனம் செய்யப்படாததால் கிரமமாய் நடக்கும் வண்ணம் இப்போதிருக்கிற சட்டத்தை கொஞ்சமேனும் தாமதிக்காமல் சீர்திருத்தம் செய்து மாற்றிவிட வேண்டுமென்று கவர்ன்மெண்டாரை இக்கூட்டம் வற்புறுத்துகிறது” (இந்தத் தீர்மானத்தை ஸ்ரீமான், பி.வி. நரசிம்ம அய்யர்தான்பிரேரேபித்திருக்கிறார் என்பது நமது ஞாபகம்)

இவற்றை அனுசரித்தே சர்க்காரிலுள்ள இது சம்பந்தமான அதிகாரம் ஒரு இந்திய மந்திரியின் கைக்கு வந்ததும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து “சென்னை இந்து மத பரிபாலன மசோதா’’ என்னும் பெயரால் ஓர் சட்டத்தை இயற்றி, பொது மக்கள் பிரதிநிதியென்று சொல்லும் சட்டசபை அங்கத்தினர்களின் சம்மதம் பெற்று நிறைவேற்றி, அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி தர்மச் சொத்துகளை அதன் கிரமமான உபயோகத்திற்கு அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும் பொது மக்கள் தர்மச் சொத்தை தங்கள் வகுப்பார்களே உண்ணவேணும் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து பொது மக்களிடம் பணம் பறித்து தங்கள் வகுப்பார்க்கே பொங்கிப் போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய் தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணை தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல்களுக்கு அனுகூலமாயிருந்து பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமகா பாதகத் தரகர்கள், முதலியவர்களுக்கும், விரோதமாயிருந்தபடியாலும், இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படுவோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமான சொத்துகள் விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லதாராயிருப்பதனாலும், இந்தச் சட்டமானது பிராமணர்களுக்கு விரோதமாகவும், பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக ஏற்பட்டுப்போய்விட்டது.

இதனால் இக்கூட்டத்தைச் சேர்ந்த பிராமணர்களெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தச் சட்டமானது மதத்திற்கு விரோதமானது என்றும், மதமே போய் விட்டதென்றும், சர்க்காரார் இந்துமதத்தில் பிரவேசித்து விட்டார்களென்றும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களும் மந்திரிகளும் இச்சட்டத்தை உண்டாக்க அனுகூலமாயிருந்தார்களென்றும், பொய்யழுகை அழுதும் பொய்ப்பழி சுமத்தியும், தங்கள் ஜாதிப் பத்திரிகைகளான’’ இந்து, “சுதேசமித்திரன்,’’ “சுயராஜ்யா, முதலிய பிராமணப் பத்திரிகைகள் மூலமாய் சூழ்ச்சிப் பிரச்சாரம் செய்தும் பிராமணரல்லாதாரான சில அப்பாவிகளை ஏமாற்றியும், “பிராமண கீர்த்திக்கு ஆசைப்பட்ட சில பயங்கொள்ளிகளை சுவாதீனம் செய்துகொண்டும் இச்சட்டத்தை ஒரேயடியாய் தொலைத்துவிட தங்களாலான முயற்சிகளெல்லாம் செய்து பார்த்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள், மெம்பர்கள் முதலானவர்களுடைய உறுதியினாலும் முயற்சியினாலும் ஸ்ரீமான்களான ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் இந்தச் சட்டத்தின் அனுகூலத்தை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டி இந்துமதத்திற்கும் இந்துமத பரிபாலனத்திற்கும் இச்சட்டத்தால் யாதொரு கெடுதியும் உண்டாகாது என்றும் ஆனால் ஊரார் முதலைத் தின்று வாழ்வதுதான் தர்மமென்ற கொள்கையை உடைய பிராமண மதத்திற்குதான் ஒருசமயம் ஆபத்து வந்தாலும் வரலாம் என்றும் பத்திரிகை மூலமாகவும், பிரசங்கமூலமாகவும் பொதுஜனங்களுக்கு வெளிப்படுத்தியதின் பேரில், பிராமணர்களின் விஷமப் பிரச்சாரம் ஒருவாறாய் வெளிப்படையாய்க் குறைந்தது என்றாலும் இன்றைக்கும் ரகசியத்தில் எவ்வளவோ தந்திரங்களும் மந்திரங்களும் நடந்துகொண்டுதான் வருகிறது. இதற்கு அனுகூலமாய் நமது மடாதிபதிகளும் மகந்துக்களும் பொது ஜனங்களின் தர்மப்பணத்தை அள்ளி புளியங்கொட்டை போல் இறைத்துக்கொண்டுதான் வருகிறார்கள்.

அய்க்கோர்ட்டிலும் இச்சட்டம் சட்டப்படி செல்லாதென்றும் இதை தள்ளிவிடவேண்டுமென்றும் வியாஜ்யம் தொடுத்திருக்கிறார்கள். இந்த சட்டத்தில் என்ன கெடுதல் இருக்கிறது என்பதையாவது இந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி இந்துமதத்திற்கோ தர்மபரி பாலனத்திற்கோ என்ன ஆபத்திருக்கிறது என்பதையாவது இதுவரை எந்தப் பிராமணரும் எடுத்துச் சொன்னதேயில்லை.

மதம் போச்சு; தர்மம் போச்சு; இந்து மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள் என்று பொய்யழுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது.
எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக்-காதிருக்-கிறார்கள்? 1817லும் 1863லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள்? அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்து தக்கது செய்யவேண்டும் என்று காங்கிரசிலும் கான்பரன்சிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்குப் போனார்கள்? சட்டம் செய்யும் அதிகாரம் நம்மகைக்கு வந்துவிடும்.

நம்மிஷ்டம் போல் நம்ம ஜாதிக்கே எல்லா உரிமைகளும் இருக்கும்படியாக சட்டம் செய்துகொள்ளலாம் என்று நம்பியிருந்தார்கள்போலும்; அல்லது பிராமணரல்லாதார் இவற்றைக் கவனியாமல் இன்னும் பிராமணர்களே ஏகபோகமாய் உண்ணும்படி விட்டுக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார்கள் போலும்.
எந்தக் காரியத்திற்கு நாம் அரசாங்கத்தாரிடம் போகாமல் இருக்கிறோம்? நம்முடைய சாமிக்கு வைக்கும் நாமம் வடகலையா தென்கலையா என்பதை சர்க்காரிடம் போய்த்தான் தீர்மானித்துக் கொள்ளுகிறோம். மடாதிபதியார் இவரா, அவரா என்று தீர்மானிக்க சர்க்காரிடம்தான் போகிறோம். நாம் கோவிலுக்குள் போகலாமா வேண்டாமா என்பதற்கு சர்க்காரிடம் தான் போகிறோம். என் ஜாதி பெரியதா உன் ஜாதி பெரியதா என்பதற்கு சர்க்காரிடம் தான் போகிறோம். ஏழ்மைப்பட்ட தேசத்து பொது ஜனங்களின் பணம் வருஷம் ஒண்ணரைக் கோடி ரூபாய்க்கு மேல் மதத்தின் பேரால் வசூலித்து அயோக்கியர்களுக்கு பஞ்சமாபாதகத்துக்கும் உபயோகப்படுத்துவதைக் கவனிக்க ஒரு சட்டம் வந்தால் அது கூடாது என்று சொல்லுபவர்கள் யோக்கியர்களா?

நமக்குள் நாமே பார்த்துக்கொள்ளக் கூடாதா என்றால் இதுவிஷயத்தில் நமக்குள் என்ன யோக்கியப் பொறுப்பு; இருக்கிறது.’’ 10 லட்சம் இருபது லட்சம் போட்டு நீ கோயில் கட்டிக்கொடுத்து சொத்தும் விட வேண்டும்; நான் செங்கல்லை அடுப்பில் போட்டு சூடேற்றி ஈரத்துணிமேல் போட்டு ஆவியுண்டாக்கி சுடுசாதம் என்று வெறும் பாத்திரத்தை சாமிக்கு வைத்து ஆராதனை செய்ய வேண்டும்; அது சாதத்தின் ஆவியா சுடுசெங்கல் ஆவியா என்பதைக்கூட நீ பார்க்கக்கூடாது பார்த்தால் பாவம்’’ என்று சொல்லுகிற ஜனங்களை வைத்துக்கொண்டு நமக்குள் எப்படி சரிசெய்துகொள்கிறது? வைக்கத்தில் தெருவில் நடக்க எத்தனை பேர் ஜெயிலுக்குப் போக வேண்டி வந்தது! கல்பாத்தியில் தெருவில் நடக்க 144 யார் வேண்டுகோளின் பேரில் போடப்பட்டது? அதற்காக சர்க்கார் இடம் யார் போனது நமக்குள் சரிப்படுத்திக்கொள்ளக் கூடாதா என்கிற யோக்கியர்கள் இந்தச் சமயம் ஏன் சர்க்காரிடம் போகவிட்டார்கள்-? பொது ஜனங்கள் பணத்தில் நடத்தப்படும் வேதப் பாடசாலைகளில் பிராமணன்தான் படிக்கலாம் சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று சொல்லுகிறபோது நமக்குள் சரிப்படுத்திக்கொள்ளக்கூடாதா என்கிற பிரபுக்கள் எங்கே போயிருந்தார்கள்?

இவற்றை பிராமணரல்லாதார் தயவு செய்து கருத்தாய்க் கவனிக்கவேண்டும் பிராமணரல்லாதாருக்குள் கொஞ்சம் பிளவு ஏற்பட்டவுடன் சட்ட சபையால் இந்து தேவஸ்தானச் சட்டத்தை மாற்ற பிராமணர்களால் தீர்மானம் கொண்டுவந்தாய்விட்டது.

இனிவரப்போகும் சட்டசபைக்கும் தேவஸ்தானச் சட்டத்தை மாற்றச் சம்மதிக்கும் அங்கத்தினர்களுக்குச் சாதகமாய்ப் பிரச்சாரம் செய்யவும் அவர்கள் செலவுக்கு பணம் கொடுக்கவும், மகந்துக்களும் மடாதிபதிகளும் இப்போதிருந்தே ஏற்பாடு செய்து வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சிப் பிரச்சாரத்திற்கு இந்தப் பணம்தான் தாண்டவமாடும்.

சில பிராமணரல்லாதாரும் இப்பொழுதிருந்தே இதற்குச் சம்மதம் கொடுத்து சில மகந்துக்கள் தயவையும் மடாதிபதி
கள் தயவையும் சம்பாதித்துக்கொண்டு வருகிறார்கள்.

பிராமணரல்லாத ஓட்டர்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! கோட்டையை விட்டீர்களானால் பிறகு வெகுநாளைக்குப் பிடிக்க முடியாது.

– ’குடிஅரசு’ 22.11.1925