Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தலையங்கம் – எங்கும் அமைப்போம் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்!’’

 

தஞ்சையிலும் திருச்சியிலும் (21, 22-1-2023) நாள்களில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல், திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் ஆகியவற்றிற்கு  குறுகிய கால அறிவிப்பானாலும்கூட ஏராளமான மாணவ, இளைஞரணித் தோழர்கள், திரண்டு வந்து, உற்சாகத்துடன் பங்கேற்றது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.
எதையும் எதிர்பாராமல் ‘மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கருதி’ உழைக்கும் கொள்கைச் செல்வங்களின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது, நம்மை ஒருவகை புத்தாக்கத்திற்காளாக்கியது!
பெரியாரைச் ‘சுவாசிக்கும்’ இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் என்பதால், இத்தகைய கொள்கைப் பட்டாளத்தால் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்த முடியும்! நிச்சயம் செய்யவும் போகிறார்கள் அவர்கள்!
அதில் நாம் ஒரு முக்கிய அறிவிப்பினை அவர்கள் முன் செய்தோம்.
உடல் வலிமையைப் பெருக்கிட…
ஒவ்வொரு கிராமம், நகர்ப்புறங்களில் 5 நபர்களைச் சேர்த்து _ மாலை நேரம் அல்லது வாரம் இருமுறை _ ஓர் இடத்தில் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு மொத்தம் மாலையில் 1 மணி நேரத்தை மட்டும் ஒதுக்கி, உடல் வலிமையைப் பெருக்கி, உடல் வளம் பேணும் பழக்கத்தவர்களாக _ நமது இயக்க மாணவர்கள், இளைஞர்கள் முப்பாலரும் உடற்பயிற்சி, சிலம்பம், கால்பந்து, கைப்பந்து, சடுகுடு, கராத்தே முதலிய வீர விளையாட்டுகளில் கலந்துகொண்டு ஆடி, பெரும் பயிற்சியைச் செய்து வீடு திரும்ப வேண்டும்.
5 பேருக்கு ஒரு அமைப்பாளர் என்று துவக்கி, எங்கெங்கும் பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள் பரவி, அடர்ந்த காடு போல இன்னும் 6 மாதத்திற்குள் உருவாக்கிவிட வேண்டும்.
உடற்கொடை பதிவு செய்தல் வேண்டும்
வெள்ளைக் கால் சட்டை, கருப்புச் சட்டை சீருடைக்குப் பதில் ‘டி ஷர்ட்’ அதில் கழகத்தின் உருவம் பதித்திருப்பதை சீராக வாங்கி அணிந்து பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அதிலேயே பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம், பெரியார் குருதிக் கொடைக் கழகம், விழிக்கொடை, மறைந்தபின் உடற்கொடை இவைகளையும் பதிவு செய்தலும் நடைபெறலாம்.
ஒவ்வொரு அணிக்கும் திராவிட இயக்கத் தலைவர்கள், சுயமரியாதைச் சுடரொளிகள், உள்ளூர்க்கார கொள்கை மாவீரரின் எவர் பெயரிலும் (தலைமைக் கழகம் ஒப்புதல் பெற்று) அமைத்தல் அவசியம்.
பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தில் ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள், ஓய்வுற்ற காவல்துறை அதிகாரிகள், ராணுவ வீரர்கள் வழிகாட்டும் பயிற்றுநர்களாக அமையலாம்.
அவர்களையும் அடையாளம் கண்டாக வேண்டும்_ பட்டியல் தயாராக வேண்டும்.
புத்துணர்ச்சியோடு பெரும் பணியில்…
விரிவுபடுத்தப்பட்ட புதிய “பெரியார் வீர விளையாட்டுக் கழகம்’’ புத்துணர்ச்சியோடு புதிதாகப் பெரும் பணியில் ஈடுபட வேண்டும்.
நம் இளைஞர்களை கட்டுப்பாடு காக்கும் கடமை வீரர்களாக, சுயமரியாதைச் சுடர் ஏந்தும் கொள்கையால் வார்த்தெடுக்கப்படும் புடம் போட்ட கொள்கையாளர்களாக ஆக்கிட. இதுவே நல்ல தருணம். இந்த முயற்சிக்கு, இளைஞர், மாணவர்களுக்கு நமது கழகப் பொறுப்பாளர்கள் செயல் ஊக்கிகளாக அமைதல் அவசியம் _
அவசரம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்