Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள்

கட்டடங்கள் சொல்ல மறந்த கதை

மண்ணையும் கல்லையும் சுமந்திடும் தலை
சாய்ந்துக்கொண்டு ஓய்வெடுக்க துணைபுரியாத தலையணைகள்

போலியாக புன்னகைத்தும்
அவ்வப்போது அங்கங்களை இலைமறை
காயாக காண்பித்தால் மட்டுமே
ஆயுள் முழுதும் வேலை அற்பப்பிறவிகளால்

இரட்டை அர்த்தங்கள்
கொண்ட பேச்சு, சின்ன சின்ன
சில்மிஷங்களை அவ்வப்போது
அரங்கேற்றிடும் ஈனவர்கள்

இயந்திரமாய் செயல்பட்டாலும்
இளகிய மனதில் பிள்ளைகளின்
நினைவுகள் மட்டுமே,
அவர்களை
அணைத்தபடி உறங்கும்வரை

படும் துன்பங்களை
இரவு அடுப்பில் எரியும் விறகில்
பொசுக்கிவிடுவதால் சில மணிநேர
அசதி உறக்கம்
காலையில் மேஸ்திரியுடன் வேலைக்கு
செல்லும்போது கூடிப்பேசிடும் கொடூர சமூகம்
கொச்சையான உறவுகளுக்கு அடையாளம்
எங்களை காட்டியபடி – புரிந்துவிட்டன செவிகளுக்கு, இது தொடர்நிகழ்வு ஆகிவிட்டதால்

பாரத்துடனே பயணிக்கும்
எங்களது வாழ்க்கை – தேடிக்கொண்டிருக்கிறோம்
என் போன்றோர்
சற்றே இறக்கி வைக்க _ இந்த சமூகத்தில சுத்தமான ஓர் இடத்தை

– புதுவை ஈழன்

இடையினத்தின் வலி

இயற்கை எழுதிய பிழையெழுத்து,
திருநங்கை அவள் இடையெழுத்து.

உணர்வை சொல்லிட முடியாது
சொன்னால் யாருக்கும் புரியாது.
என்னுள் நடந்தது பெருமாற்றம்,
வாழ்விலே எமக்கு ஏமாற்றம்.
திராவிடப் பெயரால் தமிழன்னை,
அன்பை பொழிந்தால் எல்லோர்க்கும்,
அவளின் அன்பு பிள்ளைகளே,
வம்பை தருவது முறைதானோ.

தமிழே தந்தது ஒதுக்கீடு,
தமிழா உனக்கேன் முரண்பாடு.

கருவில் வளர்ந்தோம் ஆணாக,
தெருவில் வளர்ந்தோம் பெண்ணாக,
உருவில் தெரிந்தோம் பொதுவாக,
மருவாய் நெஞ்சில் காயங்கள்.

இயலா அன்பு உம்மிடத்தில்
இருந்தும் நமக்கு பயமில்லை,
வம்பு வேண்டாம் நண்பர்களே,
வாழ விட்டுப் பாருங்கள்.

தமிழ்அரசு, அய்யம்பேட்டை

காதல் மதம்

சமூகமே களம் ஜாதிகளுடனே சமர்
ஆயுதமேந்து காதலைக் கொண்டு…
தகரம் தங்கமாகும் ரசவாதம் நிகழுமென்றால்
இந்த ரசாயன கிளர்ச்சியில்
குறையென்ன?
குற்றமும் என்ன?
ஓரினச் சேர்க்கை கதை வாசகர்கள்
ஆண் பெண் காதலை
இனக்கவர்ச்சி என சொல்லித் திரிகிறார்கள்?!
ஆம், மதத்தை துரத்தியடிப்பதும்
மனிதத்தை இனங்கவர்வதையும்
உன் காதல் நிகழ்த்துமென்றால்
ஒப்புக்கொள்
என் மதம் மனிதமென்று…
என் மதம் அன்பென்று…
என் மதம் காதலென்று…
பூ. இராமச்சந்திரன்

கனவு

அலங்காரம் செய்யும்முன்
காண்கின்ற
அம்மனின் நிர்வாணம்
அடிக்கடி வந்து போகின்றது
அர்ச்சகனின் கனவில்…

முரண்

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை…
இரும்புக் குதிரையில் (ஸ்கூட்டர்)
பறக்கும்
இருமுடி கட்டிய
பக்தனுக்கு…
– ஆல. தமிழ்ப்பித்தன். புனல்வேலி