கேள்வி : இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஒரு தமிழன், பிரதமராகும் வாய்ப்பே கிடையாதா? – க. ராசன், நெய்வேலி
பதில் : வாய்ப்பு முன்பு இருமுறை வந்து அவர்களே மறுதளித்ததால் நழுவிவிட்டது!
கேள்வி :சதி, பால்ய திருமணம், தேவதாசிமுறை இவைகளை எல்லாம் சட்டத்தால் ஒழித்த அரசு, மூடப்பழக்கத்தைச் சட்டத்தால் ஒழிக்கத் தயங்குவது ஏன்? – உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றங்குடி
பதில் : அரசியல் சட்ட அடிப்படைக் கடமையாகவே அது சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் கூட பாமர மூடமக்களின் வாக்கு வங்கியைக் கருதியும் பல்வேறு அரசியல் தலைவர்களே கூட இதற்குப் பலியானவர்கள் ஆனபடியால் தயக்கம் காட்டுகிறார்கள் போலும். கருத்துகளை நாம் கடுமையாகப் பிரச்சாரம் செய்தால், சட்டம் பிறகு தானே வந்து தீரும்.
கேள்வி : மனிதனை நெறிப்படுத்தவே மதங்கள் தோன்றின என்ற வாதம் சரியா?
ஜி.நளினி, பெரம்பூர்
பதில் : துவக்கத்தில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் அதன் தன்மை முற்றிலும் எதிராக மாறிவிட்டதே! (பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் என்ற நூலில் தந்தை பெரியார் அவர்கள் மதம் பற்றி எழுதுகையில் தங்கள் கேள்வியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.)
கேள்வி : கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆண்டவன் முகத்த பார்க்கணும், அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் என்று எழுதிய திரைப்படப் பாடலில் ஒரு சாண் வயிற்றுக்கு வழி இல்லை என்றால் ஒரு முழம் கயிறு அல்லவா என்று எழுதியுள்ளார். இது இளைஞர்களின் மனதைக் கோழையாக்கும் செயல் அல்லவா? சு.ஆறுமுகம், திருவாருர்
பதில் : அவர் எழுதிய பாடல்களில் மூடநம்பிக்கையை வளர்க்கும் பாடல்களும் உண்டு; மதத்தில் ஏறிவிட்டான், மதங்களைப் படைத்தவன் எதனைக் கண்டான் என்பது போன்ற பாடல்களும் உண்டு. பிறகு இறுதியில் அவர் ஒரு மதவாதியாகித்தான் மறைந்தார் என்பது வேதனைக்குரியது.
கேள்வி : மதங்கள் அற்ற உலகம் மலருமா? – கனகு. அருள், கோவூர்
பதில் : நிச்சயம் 22, 23ஆம் நூற்றாண்டுகள் அப்படித்தான் அமையப் போகின்றன!
கேள்வி : அ.தி.மு.க. ஆட்சியை ஆன்மீக ஆட்சி எனக் கூறலாமா?
எஸ்.கோவிந்தசாமி, பெரம்பூர்
பதில் : ஆன்மீக, ஆரிய ஆட்சி என்பதே இப்போதைய நிலைமை!
கேள்வி : தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது என்று சொல்லமுடியவில்லையே? – கு.கண்மணி, கோவில்பட்டி
பதில் :இருந்தால் அல்லவா உங்களால் கூறமுடியும்! நாய் விற்ற காசு குரைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்பதே அவைகளின் தத்துவம்! மகா வெட்கக்கேடு!
கேள்வி : ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று தலைவிரித்தாடிய ஊடகங்கள், இன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக வணிகப் பிரிவில் 2,00,000 கோடி ஊழல் நடந்திருப்பது பற்றி வாய் திறக்காதது ஏன்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : இதில் ஈடுபட்ட கேரளத்தவர்கள் – முன்னேறிய ஜாதியினர் – முன்பு பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் தனிச் செல்வாக்குப் படைத்த பெரிய மனிதர்கள் என்பதால்!
கேள்வி : அன்னா ஹசாரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஒரு சிலர் கூறுகின்றனரே? – வெங்கட.. இராசா, ம.பொடையூர்
பதில் : பாரத ரத்னா விருதுக்கு மரியாதை போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டனவே. மீண்டுமா?
கேள்வி : காந்தி பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெறுவது நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி, காந்தியைக் களங்கப்படுத்துவதாகவும் அமையும் என்று கூறிய சோனியா மற்றத் துறைகளில் நடைபெறும் ஊழலைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே? – த. சுரேஷ், நாகர்கோவில்
பதில் : காந்தி பற்றிய அப்படி மதிப்பீடாவது நம் நாட்டில் மிஞ்சி இருக்கிறதே என்று நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் அய்யா!


Leave a Reply