வரலாற்றுச் சுவடு… : “ஏம்மா… உன் பேரு என்ன காவிரியா?’’

2022 ஆகஸ்ட் 01-15 2022 வரலாற்றுச் சுவடு

கலைஞர் குறித்து ஆசிரியர் வழங்கும் நினைவுக் குறிப்புகள்!
திராவிட இயக்கத்தில் பாலபாடம் பயின்றவர் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி! தொடக்க காலங்களில் தோழர்களோடு கிராமங்கள்தோறும் சைக்கிளில் பயணம் செய்து கழகப் பிரசாரப் பணியாற்றியவர்!
“கலைஞருக்கும் எனக்குமான உறவு என்பது 75 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிறுவயது மாணவப் பருவத்திலிருந்தே தொடங்கியது!
1.-5.-1945இ-ல், “தென்மண்டல திராவிட மாணவர்கள் மாநாட்டை’’ திருவாரூரில் மாணவராக இருந்த கலைஞர்தான் தலைமை-யேற்று நடத்தினார். அப்போது 12 வயது மாணவனான எனக்கு ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பில் பேச வாய்ப்பளித்தவர் கலைஞர்!”

“2009ஆம் ஆண்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சைக்காக கலைஞர் அனுமதிக்கப்-பட்டிருந்தார். அறுவைச் சிகிச்சை எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
மருத்துவர், அங்கிருந்த பெண் செவிலியரிடம், “மயக்கம் தெளிந்து பேஷன்ட் விழிக்கும்போது, அனஸ்தீஸியாவின் பாதிப்பால் தண்ணீர் தாகம் எடுக்கும். ஆனாலும், அதிகளவில் தண்ணீர் கொடுத்துவிடக் கூடாது. அது உடல்நிலையைப் பாதிக்கும். எனவே, நாக்கு நனையும்படி சில சொட்டு நீரை மட்டும் கொடுங்கள்’’ என்று அறிவுறுத்திவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

கலைஞருக்கு மெள்ள மெள்ள மயக்கம் தெளிய ஆரம்பித்தது. மருத்துவர் சொல்லியிருந்தது போலவே, அவருக்குத் தாகம் எடுத்தது. செவிலியரை அழைத்து தண்ணீர் கேட்டார். அந்தச் செவிலியரும் மருத்துவர் சொல்லியிருந்தபடியே சில துளி நீரை மட்டும் பருகக் கொடுத்தார். தாகம் தணியாத கலைஞர், மீண்டும் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அப்போதும், அந்தச் செவிலியர் சில துளி நீரை மட்டும் கொடுக்கவே…. “ஏம்மா… உன்பேரு என்ன காவிரியா?’’ என்று கேட்டேவிட்டார் கலைஞர்.
அந்த செவிலியப் பெண்ணுக்கோ அவரது கேள்வி புரியவில்லை. உடனிருந்த நாங்களோ அந்தச் சூழ்நிலையிலும் சிரித்துவிட்டோம்.
‘விடுதலை’ மாலை நேரப் பத்திரிகை. பெரியார் திடல் அலுவலகத்தில் காலையிலேயே, ‘விடுதலை’ நாளேட்டுக்குத் தயாராகும் அன்றைய செய்திகளைப் படித்துப் பார்த்து பிழை திருத்தம் மற்றும் செய்திகள் குறித்த வடிவமைப்புகளைச் சரிபார்த்துவிட்டுத்தான் அடையாறிலுள்ள என் வீட்டுக்கு மதிய உணவுக்காக வந்து சேருவேன்.

மாலையில் அச்சடிக்கப்பட்ட ‘விடுதலை’ நாளிதழ்களை சைக்கிளில் கொண்டுபோய் வீடு வீடாக வழங்கும் நண்பர், கலைஞர் குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியில் ‘விடுதலை’ நாளிதழை வழங்கிவிட்டு, அடையாறுப் பகுதியிலுள்ள எனது வீட்டுக்கு நாளிதழைக் கொண்டு வருவார். இந்த இடைப்பட்ட நேரத்துக்குள், கலைஞர் ‘விடுதலை’ நாளிதழைப் படித்துப் பார்த்து அதிலுள்ள எழுத்துப் பிழை அல்லது கருத்துப் பிழைகளைக் குறித்து வைத்துக்-கொண்டு தொலைபேசியிலேயே என்னிடம் விசாரிப்பார்.

“பத்திரிகையின் ஆசிரியர் நான் என்றாலும்-கூட, முதலில் உங்களுக்குத்தான் பத்திரிகை வருகிறது. நீங்களும் படித்துப் பார்த்து, கருத்து சொல்கிறீர்கள்… அதனால் முதல் ஆசிரியர் நீங்கள்தான். அந்தக் காலத்தில் ஈரோட்டுக் குருகுலத்தில், ‘குடிஅரசு’ பத்திரிகையின் உதவியாளராகப் பிழைதிருத்தம் செய்த பணியை இப்போதுவரை செய்து வருகிறீர்கள். அந்த வகையில், நீங்கள்தான் உண்மையான முதல் ஆசிரியர்!’’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு!
பெரியாரின் வழியில், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்தவர் கலைஞர். முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதும் கூட, நாளிதழ்களில் ஆரம்பித்து வார இதழ், புத்தகங்கள் என அனைத்தையும் விரைந்து வாசிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு!

அதுமட்டுமல்ல… அமைச்சர் பெருமக்கள், என்னைப் போன்ற நண்பர்கள் புடைசூழ சாயங்கால நேரத்தில், மெரினா கடற்கரை மணலில் அமர்ந்து பேசுவது கலைஞருக்கு ரொம்பவும் பிடிக்கும். அகில இந்திய வானொலி நிலையத்துக்கு நேர் எதிரில் இருக்கும் கடற்கரைப் பகுதியில், அமர்ந்து பேசிக்-கொண்டிருப்-போம். முறுக்கு, சீடை என்று நொறுக்குத் தீனி யாராவது கொண்டு வருவார்கள். அதையும் சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடுவோம்.

அந்த உரையாடல்களுக்கு நடுவிலேயும், நாளைய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பதில் சொல்லவேண்டும், என்னென்ன குறிப்புகள் எடுக்க வேண்டும் என்பது குறித்-தெல்லாம் அவ்வப்போது உதவியாளர் சண்முகநாதனிடம் குறிப்புகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
இரவு நேரம் என்பதால், கடற்கரையில் அதிக வெளிச்சம் இருக்காது. எனவே, பக்கத்தில் காவலுக்கு நின்று கொண்டிருக்கும் காவலர்-களிடமிருந்து டார்ச் லைட்டை வாங்கி காகிதத்தில் வெளிச்சம் பாய்ச்சி குறிப்புகள் எழுதிக் கொடுப்பார். அந்தளவுக்கு ஓய்வின்றி உழைப்பவர்!”

தன்மானமும், இனமானமுமே கலைஞர் விரும்பிய வெகுமானம்!

‘‘நீதிக்கட்சி 1916இல் உருவானதற்குப் பிறகு, உருவான திராவிட இயக்கம், இயல்பாக ஓர் இனவெறி இயக்கமாக மாறியிருக்க முடியும்; மாறாக, அது தமிழ் மொழி, பண்பாடு, சமூகநீதி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்து ஒரு கலாச்சார இயக்கமாக வலுப்பெற்றது. அதற்கான காரணம் இவர்கள்தாம் _ திராவிடர் கழகத்துக்கு ரத்தத்தையும், சதையையும் வழங்கிய கலாச்சார அடையாளங்கள் _ திரிமூர்த்திகளான பெரியார் _ அண்ணா _ கருணாநிதி ஆகியோர்.
பெரியார் அற்புதமான சிந்தனையாளர்; அவருடைய புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வேறு காலகட்டத்தில் _ வேறு சூழலில், அவர் உலக சீர்திருத்தவாதியாகவும் கொண்டாடப்-பட்டிருப்பார். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காலமாக இருந்ததாலும், தமிழ்-நாட்டின் பின்னணி காரணமாகவும் அவர் மாநிலத்திற்குள்ளேயே முடக்கப்பட்டார்.

அண்ணாவும், கருணாநிதியும் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள். சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு திராவிட இயக்கத்திற்கு உரம் ஏற்றியதற்கு அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.’’ என்றார் அறிஞர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மேனாள் ஆசிரியர்)
_ இது ஓர் உண்மையான, அற்புதமான, அறிவியல் ஆய்வுக் கருத்தாகும்!
கலைஞர் என்ற கடும் உழைப்பாளி _ காரணம், அவர் அதைக் கற்றுக்கொண்ட பீடம் ஈரோட்டுக் குருகுல வாசம் என்பதன்மூலம்! ஓய்வறியா உழைப்பினை அவர் இறுதிவரை (உடல்நலம் குன்றிய காலம் தவிர) இந்தச் சமுதாயத்திற்கு ஈந்த ஒப்பற்ற கொடையாளர்!
அவர் ஓர் பல்கலைக்கழகம்! பேச்சு, எழுத்து, விவாதம், ஏடு நடத்துதல், சட்டமன்றத்தின் சரித்திரப் பணி, கலைத் துறையில் எவரும் எட்டிப் பிடிக்க முடியாத ஏற்றமிகு சாதனை-கள், இவை எல்லாவற்றையும் தாண்டிய ஆட்சியின் ஆளுமை முத்திரையால் _ கொள்கை லட்சியங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்தார்.
அரசியல் மிரட்டல்களையும், பழிவாங்கல்-களையும் துணிவுடன் எதிர்கொண்டு, பழிவாங்கியவர்களையே தன் பக்கம் ஈர்த்து, பகை மறந்து, அருள் சுரந்து, ஆளுமையால் வென்ற தனித்ததோர் அரசியல் ராஜதந்திரம் கலந்தது; காலத்திற்கேற்ற கச்சிதமான அணுகுமுறை! காலத்தை வென்ற அரசியல் பாடங்களை எழுதி புதிய வரலாறு படைத்த தனித்துவம்.

‘‘உங்களை ஒரு வரியில் சுய விமர்சனப்-படுத்திக் கொள்ள என்ன சொல்வீர்கள்?’’ என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்ற பதில்! நறுக்குத் தெறித்த கொள்கைப் பிரகடனம். கலைஞரைப் பின்பற்ற விரும்பும் இளைய தலைமுறைக்கும் இது ஒரு கலங்கரை வெளிச்சம் அல்லவா!
1973இல் தந்தை பெரியாரின் உடலை அடக்கம் செய்யும்பொழுது, தமிழ்நாடு அரசு மரியாதை கொடுக்க அவர் முடிவெடுத்தார் _ முதலமைச்சராக இருந்த நிலையில். ‘‘இதனால் ஆட்சிக்கு ஆபத்து வரலாம்‘’ என்றவுடன், ‘‘அதற்காக நான் ஆட்சியை இழந்தாலும், வருத்தப்படமாட்டேன் _ மகிழ்ச்சியடைவேன்’’ என்று துணிவுடன் சொல்லி, வரலாற்றில் ஒரு புதிய முன்மாதிரியை (Precedents) ஏற்படுத்திய அரசியல் துணிச்சல்காரர்!
‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதைதான் தனது அரசால் தர முடிந்தது; அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமல் புதைக்க வேண்டி வந்துவிட்டதே!’ என்று ஆதங்கப்பட்டு, அடுத்துப் பதவிக்கு வந்தபோது அம்முள்ளை அகற்றிட அவர் புதியதோர் சட்டம் மூலம் வழி கண்டார். அவர் வழி ஆட்சி நடத்தும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் _ ‘‘திராவிட மாடல் ஆட்சியின்’’மூலம் திக்கெட்டும் புகழுடன் ஆட்சி புரியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் _ அதனை முழுமையாகச் சாதித்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, முள்ளை எடுத்தெறிந்து, முத்திரை பொறித்தார்!