Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : ஜாதீ

கவிப்பேரரசு வைரமுத்து

 

ஜாதி ஒரு மாயை

 எந்த ரசாயனம்

ஜாதியின் நிறம் காட்டும்?

 

எந்த பவுதிகம்

ஜாதியின் குணம் காட்டும்?

 

“இப்போது தேவை

இன்ன ஜாதி ரத்தம்’’

வரி விளம்பரம் வந்ததுண்டா?

 

“இன்ன ஜாதி அரிசி

இங்கே கிடைக்கும்’’

கடையில் பலகை கண்டதுண்டா?

 

சொல்லுங்கள்

 

வெட்கத்தில் விழுகிறேன்

துக்கத்தில் அழுகிறேன்

 

உலகம்

விண்ணைத் துளைத்து

விடியவைக்கப் பார்க்கிறது

 

நாமோ பூமியைத் துளைக்கும்

புழுக்களாய்… புழுக்களாய்…

 

உலக மானுடம்

சிறகு தயாரிக்கச் சிந்திக்கிறது

நாமோ

இருக்கும் உடைகளையும்

இழந்துவிட்டு… இழந்துவிட்டு

 

இங்கு

எல்லா ஜாதியும் இருக்கிறது

இல்லாத ஒரே ஜாதி

மனிதஜாதி

 

இன்னும்

தீப்பந்தம் தேவை

ஜாதியின் சடலம் எரிக்க

 

இன்னும்

ஆயுதம் தேவை

வகுப்புவாதத்தின்

ஆணிவேர் அறுக்க

 

இப்போதைக்கு

ஒரு வெண்புறா தேவை

திரும்பத் திரும்பத்

தெற்கில் பறக்க

 

(வைரமுத்து கவிதைகள் தொகுப்பிலிருந்து…)