இணைய உலகம் : சிறுகனூரில் தந்தை பெரியார் மெட்டா வெர்ஸ் உலகம்

நவம்பர் 16-30,2021

முனைவர் வா.நேரு

நவீன தொழில் நுட்பத்தின் காரணமாக உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. 1980களில் கணினியும், 2005களில் ஸ்மார்ட் போனும், உலகை அடுத்தடுத்த உயரத்திற்குக் கொண்டு சென்றன. தற்போது மெட்டாவெர்ஸ் உலகம் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது.

மெட்டாவெர்ஸ் என்பது மெய் நிகர் உலகு. அதாவது மெய்யாக இருப்பது போல் இருக்கும். ஆனால், மெய்யான உலகம் அல்ல. இந்த மெய் நிகர் அல்லது மாய உலகத்தை உருவாக்குவதற்கு அவர்கள் சில தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தப் போகிறார்கள்.

மெட்டாவெர்ஸ் உலகத்தில் ஒரு விர்ச்சுவல் அலுவலகம் உருவாக்கப்படும். அதில் கலந்து கொள்ள நீங்கள் ஒரு ‘ஹெட்செட்’ அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம். அங்கிருந்து கொண்டு அலுவலகத்தில் ஓர் அறையில் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பர்களோடு உட்கார்ந்து வேலை பார்ப்பது போன்ற ஓர் உணர்வை, வசதிகளை இந்த விர்ச்சுவல் ‘ஒர்க் ரூம்’ உண்டாக்கிக் கொடுக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள். அதைப்போல நீங்கள் உங்கள் வீட்டில் இருந்துகொண்டே உணவு விடுதியில் நடக்கும் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டு பல பேரோடு இணைந்து நடனமாட முடியும். இதனைப் போன்ற மாய உலகம். நீங்கள் வீட்டில் இருப்பீர்கள், ஆனால், மெய் நிகர் உலகின் மூலமாக வேறு எங்கோ இணைந்து இருப்பீர்கள். அந்த வசதியினை இணைய வழி மெட்டாவெர்ஸ் கணினியும் நீங்கள் அணிந்திருக்கும் ‘ஹெட்செட்டும்’ இணைந்து கொடுக்கும். ஏற்கனவே சில திரைப்படங்கள் 3டி என்று வந்தவற்றை, ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. 3ஆ-வது பரிமாணத்தோடு, திரையில் தெரியும் உருவம், நமக்கு மிக அருகில் இருப்பது போல உணரச்செய்யும். இங்கு கண்ணாடிக்குப் பதிலாக ஹெட்செட்; திரையரங்கில் உட்கார்ந்திருப்பதிற்குப் பதில் நமது வீடு.

அதைப் போல ஆகுமெண்ட்டோடு ரியாலிட்டி. இது விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு மேம்பட்ட தொழில் நுட்பம். நாம் ஒரு தொலைக்காட்சி புதிதாக வாங்கப்போகிறோம் என்றால் கடைக்குச் செல்வோம். இருக்கும் பல கம்பெனிகளின் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பார்ப்போம். விலைகளைக் கேட்போம். தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கச் சொல்லி, எப்படி சேனல்கள் தெரிகிறது  என்று பார்ப்போம். பேரம் பேசி வாங்குவோம். இத்தனையையும் வீட்டில் இருந்து கொண்டே, கடையில் இருப்பது போன்று செய்ய முடியும். இப்படிப்பட்ட ஒரு தொழில் நுட்பம்தான் ஆகுமெண்ட்டோடு ரியாலிட்டி. நாம் அந்த இடத்தில் மெய்யாக இருக்க மாட்டோம். ஆனால், இருப்பது போல எல்லாவற்றையும் செய்ய இயலும்.

அதைப் போல ‘ஆர்ட்டிபீசியல் இண்டெலிசன்ஸ்’ என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு. ‘ரோபோட்’ என்று சொல்லப்படும் இயந்திர மனிதர்களைப்  பல நாடுகளில், பலவிதமான வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அந்த ஆர்ட்டிபீசியல் இண்டெலிசன்ஸ் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதனைப் போல ‘பிளாக்செயின்ஸ்’ எனப்படும் பொருளாதார முறை மெட்டாவெர்ஸ் உலகத்தில் பயன்படுத்தப்படும். இப்போது எல்லா தகவல்களும் மொத்தமாக ஒரே இடத்தில் சேமிக்கப்படுகின்றன. நாம் ஏதாவது ஒரு பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோம். நம்மைப் போன்று தமிழ்நாடு முழுவதும் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கு எல்லாம் ஒரு சூபர் செர்வரில் சேமிக்கப்படும். அந்த செர்வரின் மூலமாக, மொத்தமாக இருக்கும் இடத்தில் இருந்துதான் நாம் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதே, செலுத்தும்போதே சேமிக்கப்படும். ஆனால், பிளாக்செயின்ஸ் முறையில் அவை தனித்தனி செர்வர்கள் மூலமாக நடைபெறும் என்று குறிப்பிடுகிறார்கள். அதனைப் போல வானத்தை பிளாட்களாக மாற்றி விற்பனை செய்வது. அவை விர்ச்சுவல் பிளாட்டுகளாக இருக்கும். அந்த பிளாட்டை நாம் பார்க்க முடியாது. ஆனால், நமது பணத்தை அதில் முதலீடு செய்ய முடியும். நாம் அதனை விற்க முடியும், ஒத்தி வைக்க முடியும், வாடகைக்கு விட முடியும். இப்படி பூமிக்கு அப்பால் ஏற்படுத்தப்படும் மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் வணிகம் செய்ய முடியும். முதலீடு செய்ய முடியும். பூமிக்கு அப்பாலும் நமது முதலீடும் வணிகமும் விரியும்.

தந்தை பெரியார் காண விரும்பிய உலகம் எப்படிப்பட்ட உலகம் என்பதனை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் சிறுகனூரில் அமைய இருக்கும் பெரியார் உலகத்தில் காட்ட இருக்கிறார்கள். தந்தை பெரியாரைப் பற்றிய மெட்டாவெர்ஸ் உலகத்தை, டிஜிட்டல் பெரியார் உலகத்தை உருவாக்க முடியும். அதன் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களும், தந்தை பெரியாரைப் பற்றி அய்யா ஆசிரியரோடும், அவரின் நிழல் உருவத்தோடும் நேரில்  உரையாட முடியும். கேள்வி கேட்க முடியும். பதில் பெற முடியும். தென் கொரிய நாட்டின் தலைநகரான சியோல் நகரம் முழுமையாக மெட்டாவெர்ஸ் உலக நகரமாக மாற்றப்படும் என அந்த நாடு அறிவித்திருக்கிறது. அந்த நகரத்து மக்களுக்கு மிக மேம்பட்ட வாழ்க்கை முறையை இதன் மூலம் தரமுடியும் என்றும், முழுமையான மெட்டாவெர்ஸ் நகரமாக 2026இல் சியோல் மாறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

மார்க் ஜுகர் பெர்க், மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனைவரையும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளார். மருத்துவத்திலும், கல்வி கற்பிப்பதிலும் மிகப் பெரிய மாற்றங்களை இந்த மெட்டாவெர்ஸ் உலகம் கொண்டு வரும் எனக் குறிப்பிடுகிறார்கள். ஜீன்ஸ் என்னும் தமிழ் திரைப்படத்தில் அய்ஸ்வர்யா ராய் கணினி முன்னால் நடனம் ஆடுவார். அவரின் நிழல் உருவம், கணினியால் உருவாக்கப்பட்ட உருவம் வேறு ஓர் இடத்தில் நடனம் ஆடும். மெட்டாவெர்ஸ் உலகத்தில் இப்படி ஒரே நேரத்தில் பல நிழல் உருவங்களை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

ஒரு சாரார் மெட்டாவெர்ஸ் மனிதர்களுக்கு இடையிலான நேரடித் தகவல் தொடர்பை ரத்து செய்து மனிதர்களை மேலும் தனிமைப்படுத்தும் என்ற கருத்தினைக் கூறுகின்றனர். ‘மெட்டாவெர்ஸ் மனித சமுதாயத்திற்கு உகந்தது அல்ல’ என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி எரிக் ஷ்மிட் கருத்தும் மெட்டாவெர்ஸ்க்கு எதிராக சமூக ஊடகங்களில் பதியப்படுகிறது.

இணையத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. அண்மையில் ஒளியின்  மூலமாக இன்டர்நெட் இணைப்பு பெறும் வசதி வந்திருக்கிறது. வைஃபை என்பதற்குப் பதிலாக லைஃபை என்று ஒளியின் மூலமாகப் பெறப்படும் இணைய இணைப்பு குறிக்கப்படுகிறது. நாம் நினைக்க முடியாத அளவிற்கு இணைய வேகம் என்பது விரைவில் கிடைக்கப் போகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள். அதுவும் காப்பர், ஃபைபர் போன்ற கடத்தும் ஊடகங்கள் இல்லாமலேயே ஒளியின் மூலமாகவும் மற்றவற்றின் மூலமாகவும் மிக அதிவிரைவு இணைய இணைப்புகள் கிடைக்கப்போகின்றன.

“விஞ்ஞானம், வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன்படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டு பிடிப்புகளும், தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல், சகல மக்களுக்கும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையும்” என்று இனிவரும் உலகத்தில் தந்தை பெரியார் குறிப்பிடுவார். ஆனால், இந்த நாள் வரை உலகம் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்றுதான் முடங்கிக் கிடக்கிறது. சகல மக்களுக்கும் சவுகரியம் தருகிற பொதுச் சாதனங்களாக அமையக் கூடியவற்றை மெட்டாவெர்ஸ் உலகம் உருவாக்கினால் மகிழ்ச்சியே. இல்லையெனில்  மெட்டாவெர்ஸ் உலகமும்  உழைக்கும் பெரும்பாலான மக்களின் துயரத்தையே கூட்டும்.

பயன்பட்டவை: 1. பி.பி.சி.தமிழ் இணையதளம்

2. The Hindu, November 9, 2011.

3. மற்றும் சில இணையதளங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *