பேராசிரியர் கடவூர் மணிமாறன்
தமிழ்நாடு தோன்றிய நாள் குறித்து நாளும்
தவறாகக் கருத்துகளைப் பரப்பு கின்றார்!
நிமிர்ந்தெழுந்த தமிழர்தம் அறிவுத் திண்மை
நிலைகுலைந்து போயினதோ? என்னும் போக்கில்
உமியனையார் அழுக்காறால் உளறு கின்றார்
ஒப்பரிய வரலாற்றின் உண்மை ஏலார்;
தமிழர்தம் ஒற்றுமையை புகழை வீழ்த்த
தருக்குற்றே ஓலமிடும் அவலம் என்னே!
மதராசும் மனதேயென் றார்ப்ப ரித்தார்;
மாநிலங்கள் பிரிவினையில் வருந்த, ஏய்த்தார்;
உதவாத, ஏற்காத முடிவை, மிக்க
உவகையுடன் திணிப்பதிலே வெற்றி கண்டார்;
மதவாத உணர்வாளர் அற்றை நாளில்
மனம்நோக மாநிலங்கள் பகுப்பைச் செய்தார்;
இதனையெல்லாம் உள்வாங்கி ஞாலம் போற்றும்
ஏந்தல்நம் அண்ணாவும் தீர்வு கண்டார்!
தமிழ்நாடு கன்னடம்ஆந் திரமும் மற்றும்
தகவுறவே கேரளமும் பிரிந்த பின்னர்
தமிழ்நாடு சட்டப்பே ரவையில் போற்றும்
தகுசூலை பதினெட்டில் அறுபத் தேழில்
தமிழ்நாடு பெயர்மாற்றம் சட்டம் தன்னைத்
தமிழ்கூறு நல்லுலகம் மகிழச் செய்தார்!
தமிழ்நாட்டின் உரிமைக்காய் பெரியார் அண்ணா
கலைஞருமே போராட்டக் களம்கண் டார்கள்!
நம்மொழியின் முதல்நூல்தொல் காப்பி யத்தில்
நவின்றுள்ள வேங்கடத்தை இழந்தோம்! அந்நாள்
செம்மாந்த வளம்சேர்க்கும் முல்லை யாற்றைச்
சேர்ந்துள்ள இடுக்கியினைக் கேர ளத்தார்
தம்வயமாய் ஆக்கினரே! ஆந்தி ரத்தார்
தமதாக்கிச் சித்தூரை வளைத்துக் கொண்டார்!
நம்மவர்க்கே நவம்பர்நல் ஒன்றாம் நாளோ
நமக்கான மாநிலமும் பிரிந்த நாளே!ஸீ