அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (281)

நவம்பர் 16-30,2021

ஊருக்கு நடுவே புதைக்கப்பட்ட ஆறுபேர்!

கி.வீரமணி

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மதுரை மேலூர் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் மற்றும் ஆறு தோழர்கள் ஜாதி வெறியர்களால் படுகொலை செய்யப்-பட்டார்கள். அவர்களின் குடும்பத்தினர்க்கு மதுரை சுற்றுப் பயணத்தின் போது 15.7.1997அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அங்கு சென்று, மிகவும் பாதிக்கப்பட்ட அந்தச் சகோதர -_ சகோதரிகளின் நிலையை அறிந்து, ஆறுதல் கூறினேன். அந்த மக்களைக் கண்டு ஆறுதல் சொல்ல முடியாத அளவுக்கு  நெஞ்சு விம்மி விம்மி அழுதது. வேதனையால் துடிக்கவே செய்தோம். மக்கள் அழுது புலம்பியது கண்டு நம்மால் ஆறுதல் சொல்ல முடியாத நிலையிலும் “கவலைப்படாதீர்கள். உங்கள்பால் அனுதாபம் கொண்டு ஆதரவு காட்டும் மனித நேயம் மிக்க மக்கள் பல லட்சக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கிறார்கள்’’ என்று கூறி தேற்றினேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். மேலூரில் திராவிடர் கழகக் கூட்டம் நடைபெற்றபோது மேடைக்கே வந்து மாலைக்குப் பதில் எனது கூட்டத்தில் அன்பளிப்பாக ரூபாய் வழங்கினார் என்ற தகவலை மாவட்டத் தலைவர் (மேலூர்) வழக்குரைஞர் மகேந்திரன் கூறியது கேட்டு, என்னால் அழுகையை அடக்கவே முடியாத நிலையில் அடக்கி பொங்கி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். அவருக்கு ஏற்கெனவே சிறு குழந்தைகள் இருந்த நிலையில், அவரது துணைவியார் அந்தப் பரிதாபத்திற்குரிய சகோதரி கருவுற்ற நிலையில் உள்ளார் என்பதும் துக்கத்தை மேலும் அதிகரித்த நிலை! அவரது வயதான பெற்றோர்களின் குமுறலை வர்ணிக்க வார்த்தை இல்லை.

“ஆறு பேர்களும் ஊர் நடுவே புதைக்கப்பட்டு மக்கள் இன்னமும் கும்பல் கும்பலாய் பயங்கலந்த வேதனை கொப்பளிக்கும் வெறித்த முகங்களுடன் அமர்ந்துள்ளனர்.

இப்போது அரசின் நடவடிக்கைகள் சில துவங்கியுள்ளன; காவல் துறையின் பாதுகாப்பு ஊர் முழுவதும் உள்ளது. ஜாதி வெறி நோய்க்கு இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோர் எந்த ஜாதி, எந்த மதம், எந்தக் கட்சிக்காரர்களாக இருப்பினும் அவர்கள் மீது சட்டம், நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றிப் பாய்ந்தாக வேண்டும்.

ஜாதிவெறியே! என்றுதான் இந்த தமிழ் மண்ணிலிருந்து நீ மறைவாயோ?

உடன்பிறந்த சகோதரர்களாக வாழுபவர்களையே உயிர்பலி கொள்-ளும் உன் வெறித்தனத்துக்கு ‘சமாதி’ கட்டும் நாள் எந்நாளோ! என்று 18.7.1997 அன்று விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் பிறகு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில்,

“இரு சமுதாய ஒற்றுமையினால் சாதிக்கக்கூடிய, சாதிக்க வேண்டிய காரியங்கள் நமது மக்களாட்சியில் ஏராளம் உண்டு என்பதை இருதரப்பாரும் மறந்திடக் கூடாது!

தந்தை பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்திற்கு இருவரும்இரு கண்கள்; இரு கண்களும் ஒளியுடன் திகழ வேண்டும் என்பதே நம் ஆசை _ஆர்வம்!

நமது இயக்கம் _ திராவிடர் கழகம் கூட இந்த இரு சாராரின் பிரச்சினைகளையும், பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, தக்க சமரசம் கண்டு அனைத்து மக்களையும் காப்பாற்ற என்றென்றும் சித்தமாக உள்ளது. எங்களுக்கு ஓட்டு அரசியல், பதவி அரசியல் கண்ணோட்டம் இல்லை. எனவே, எந்தச் சந்தேகப் பார்வையும் இன்றி இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டால், நாங்கள் என்றென்றும் அதற்குத் தயாராக உள்ளோம்!

எங்களின் உள்ளத்தில் வடியும் இரத்தக் கண்ணீரை அதன்மூலம் துடைத்துக் கொண்ட ஆறுதல் எங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு இதனால் வேறு ‘சுயநலம்’, ‘லாபம்’ இல்லை! சகோதரர்களே, தாராளமான மனதுடன் முன்வாருங்கள்!’’ என வேண்டுகோள் விடுத்தோம்.

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக மாண்புமிகு திரு.கே.ஆர்.நாராயணன் தேர்தலில் நின்று மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்துச் செய்தியை 19.7.1997 அன்று அனுப்பினோம். அதன் தமிழாக்கம்:

“குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள சிறப்புமிக்க வெற்றி குறித்து எமது எழுச்சியையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

இந்தச் சிறப்பான பதவிக்குத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சமூகநீதிக்கும், மதச் சார்பற்ற சக்திகளுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.

நமது வழிகாட்டிகளாகிய பெரியார், அம்பேத்கர் ஆகியோரால் அறிவூட்டப்பட்ட, இந்தியாவின் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களிடம் தங்கள் வெற்றி ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

திராவிடர் கழகம் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. நமது நாட்டின் வரலாற்றில் புதிய சகாப்தம் உதயமாகட்டும்’’ என வாழ்த்தினோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர் கழகத்திற்கு 7.9.1997 அன்று எழுதிய கடிதத்தில்,

“அன்புள்ள திரு.வீரமணி, தாங்கள் அனுப்பிய பாராட்டு _ வாழ்த்துச் செய்திக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய அன்பு உள்ளத்தையும், ஊக்கப்படுத்தும் சொற்களையும் கண்டு கழிபேருவகை அடைகிறேன். அந்தச் சொற்களை நான் மிகவும் மதிக்கிறேன். தங்களைப் போன்ற நண்பர்களின் நல்வாழ்த்துகளால், இந்த நாட்டு மக்கள் மனமுவந்து எனக்கு வழங்கியுள்ள பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்’’ எனக் கடிதத்தில் நெகிழ்ச்சியாக, குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.நல்லசிவன் அவர்கள், 20.7.1997அன்று நெல்லையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினோம். அவர் மறைவு குறித்து விடுதலையில் வெளியிட்ட அறிக்கையில்,

“தோழர் ஏ.நல்லசிவன் அவர்களுடன் நமக்குக் கொள்கை -_ அணுகுமுறைகளில் மிகவும் மாறுபாடு இருந்தது. என்றாலும், அவர் கொண்ட கொள்கைக்கு, அவர் ஏற்ற இயக்கத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு உழைத்த தன்னல மறுப்பாளர் அவர் என்பதில் நமக்கோ, பிறருக்கோ இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.

பழகுவதற்கு எளிய, இனிய சுபாவம் படைத்த அவர், கடுஞ்சொல்லைப் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தி அறியாத பண்பாளர்.

அவரை இழந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்தம் துயரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நாமும் பங்கு கொள்ளுகிறோம்’’ என குறிப்பிட்டோம்.

சென்னை திரு.வி.க.நகர் சமூகக் கூடத்தில் விசுவாசவரம் _ பொன்.இரத்தினாவதி ஆகியோருடைய செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் 20.7.1997 அன்று தலைமையேற்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். இவ்விழாவில், கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

காவிரி நீர் உரிமைகோரி தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் 22.7.1997 அன்று மிகச் சிறப்பான அளவுக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கழகத் தோழர்கள் 11 மணியளவில் தஞ்சை பேருந்து நிலையம் நோக்கி வந்து சேர்ந்தனர். தோழர்கள், “தந்தை பெரியார் வாழ்க!’’ என்ற ஒலி முழக்கங்களோடு வரவேற்றனர். அங்கிருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலையணிவித்தேன். பின்னர் கழகத் தோழர்களும், மகளிரும் நீண்ட வரிசையில் கழகக் கொடிகளைக் கைகளில் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

ஊர்வலத்தின் இறுதியில் ஒரு திறந்த ஆட்டோவில் நின்றபடி ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசுகையில், “காவிரி நீர்ப் பிரச்சினைக்காக ஒருமுறை எம்.ஜி.ஆர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதில் திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் கலந்து கொண்டோம். அப்பொழுது இந்தப் பிரச்சினையைப் பற்றி அச்சிட்ட ஒரு கருத்துரையை எம்.ஜி.ஆர் அவர்களுக்கும், மற்றக் கட்சிக்காரர்களுக்கும் தந்தோம். ஏறத்தாழ ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொன்னோம். இந்தக் காவிரி நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால் நடுவர் மன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு காணமுடியும் என்ற வரலாற்று உண்மையை முதல்முறையாக எடுத்துவைத்த பெருமை திராவிடர் கழகத்தைத்தான் சாரும். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தங்களுக்குள் நதிநீரைப் பகிர்ந்து கொள்ள ஓர் ஆணையத்தை அமைத்திருக்கின்றார்கள். அதற்கு “டெனசி வாலி அத்தாரிட்டி’’ என்னும் ஆணையத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைப்போல, நம் இரு மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க, “காவிரி வாலி அத்தாரிட்டி’’ _ “அதாவது காவிரி ஆணையத்தை வைத்துக் கொள்ளலாம்’’ என்ற ஒரு கருத்தை அன்றைக்கே தெளிவாகச் சுட்டிக்காட்டினோம்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீண்டும் தமிழ்நாட்டுக்கு ஒப்படைக்கப்பட வேண்டியும் 26.7.1997 அன்று இராமேசுவரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு கொண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதில் கச்சத்தீவு சம்பந்தமான முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழ்நாட்டில் தெற்கு மாவட்டங்களில் தொழில், வணிக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், தூத்துக்குடி, குளச்சல் ஆகிய துறைமுகங்களை சர்வதேசத் துறைமுகங்களாக ஆக்குவதற்கும், பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்குமாக வகுக்கப்பட்ட சேதுகால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுமானால், தனது கொழும்புத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து போகும் என்பதால், இலங்கை அரசு இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இத்திட்டத்தைக் கைவிடச் செய்தது. இதன் விளைவாக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியைப் போக்கும் வகையில் சேது கால்வாய்த் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுமாறு மாநாட்டில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழக மீனவர்கள் படுகொலை தடுக்கப்பட வேண்டும்; கச்சத்தீவு மீண்டும் தமிழகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் நிறைவுரையாற்றுகையில், இராமேசுவரம் கர்ணம்தான் கச்சத்தீவுக்கும் கர்ணமாக இருந்தார் என்னும் வரலாற்றுச் செய்தியை ஆதாரத்துடன் கூறினேன். மேலும், கச்சத் தீவுக்குரிய சர்வே எண் 1250 என்பதையும் மற்றும் சர்வதேச ரீதியாக எழுப்பப்படும் சட்டப் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறி வாதாடி கச்சத் தீவு நமக்குத்தான் சொந்தம். அதைப் பெற்றே தீருவோம் என்பதை ஆதாரத்துடன் கூறினேன். இது அப்பகுதி மக்களிடையே எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இம்மாநாட்டிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும், கழகத் தோழர்கள், அப்பகுதி மீனவர் சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மகத்தான மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் பொதுக் கூட்டமும் 31.7.1997 அன்று நடைபெற்றது.  கழகத் தோழர்களின் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், வீதி நாடகங்களும், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டன. இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், ஜாதி ஒழிப்பு அவசியமும், ஜாதிகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள இன்னல்களையும் எடுத்துக் கூறி உரையாற்றினேன். கடலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் நிகழ்வுகளை சிறப்பாக அமைத்திருந்தனர். பொதுக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக மாலை 6:00 மணியளவில் எனது இளமைக்கால நண்பரும், பெரியார் பெருந்தொண்டருமான பால வேலாயுதம் (இளவழகன்) அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், இயக்கத்தில் ‘இளவழகன்’ எனும் பெயரில் பணி செய்து கழக மேடைகளில் பகுத்தறிவுக் கருத்துகளை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறுவார் என்பதைச் சொல்லி, நாங்கள் இருவரும் எங்கள் ஆசிரியர் திராவிடமணி அவர்களின் தயாரிப்பில் உருவான படைக்கலன்களில் இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்ந்தேன். பழைய நினைவுகளைப் பரிமாறிக் கொள்ள இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திய தோழர் மு.சு. அவர்களையும் பாராட்டிப் பேசினேன்.

அனைத்துச் சமூகத்தினரும் ஒருங்கிணைந்து வாழும் குடியிருப்புப் பகுதிகளைக் கட்டி அதற்குச் ‘சமத்துவபுரம்’ என்று பெயரிடும் தமிழக முதல்வரின் முடிவை வரவேற்று 5.8.1997 அன்று அறிக்கை வெளியிட்டோம். அதில்,

கடந்த 12.7.1997 அன்று கோவையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் கமிட்டியில், ஏற்கெனவே நாம் பற்பல மாநாடுகள், கமிட்டிகள், கூட்டங்களில் கூறிவந்த ஜாதி ஒழிப்புக்கு வகை செய்யும் ஒரு திட்டத்தினையும் பல திட்டங்களோடு ஒன்றாக மத்திய _ மாநில அரசுகளுக்குச் சுட்டிக் காட்டினோம்.

“வீடுகள் கட்டிக் கொடுப்பதில் ஆதிதிராவிடருக்கு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கட்டித் தராமல், ஊர் நடுவே இடம்தேடி, மற்றபல ஜாதியாருடன் அவர்களும் கலந்து பழகும் வண்ணம் செய்தாக வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

நேற்று அனைத்துத் தரப்பினரும் நல்லிணக்கத்தோடு, சமத்துவமாக ஒரே குடியிருப்பில் ஒற்றுமையாக வாழும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘சமத்துவபுரம்’ என்ற பெயரில் குடியிருப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் முடிவு எடுத்து அறிவித்துள்ளதை நாம் வரவேற்கிறோம்.

இப்படி ‘சமத்துவபுரங்களை’ உருவாக்க முன்வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கலாம்! மின்சாரம், மற்ற சலுகை கட்டணமும் தரலாம். பள்ளி, மருத்துவமனைகளை அங்கே அரசு ஏற்பாடு செய்ய முன்வரலாம்!

உண்மையாக, சரியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஜாதி ஒழிப்பில் இது ஒரு சீரிய பணியாகும் என்பதால், தமிழ்நாடு அரசின் இம்முயற்சியைப் பாராட்டி வரவேற்கிறோம். கூடுமானவரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக்காமல் முக்கியப் பகுதியில் உருவாக்கினால் நல்லது!

இதுபோன்ற ஆக்கரீதியான திட்டங்கள்தான் ஜாதி ஒழிப்புக்கு _ தீண்டாமை ஒழிப்புக்கு அடிகோலும்’’ என அறிக்கை மூலம் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

சென்னை சூளை பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சங்கரன் அவர்கள் 6.8.1997 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிவிக்கப் பெரிதும் வருந்தினோம். அவரது மறைவு குறித்த இரங்கல் அறிக்கையில்,

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் அச்சகத் துறையில் பணியாற்றிய சங்கரன் அவர்கள், ஓய்வுக்குப் பின் முழுக்க முழுக்க இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். எந்நேரமும் கறுப்புச் சட்டை அணிந்து கழகக் கொள்கைளைப் பற்றியே பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார். பெரியார் திடலில் பெரும் நேரத்தைச் செலவழிப்பார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு எங்களுடன் வேலூர் மத்திய சிறைச் சாலையில் 15 நாள்கள் இருந்தார்.

1992இல் மரண சாசனத்தை எழுதி, தன் வீட்டில் மாட்டி வைத்து விட்டார். கருஞ்சட்டை அணிவிக்கப்பட்டு, எந்தவித சடங்குகளுக்கும் இடமின்றி, கழகத் தோழர்களால் எளிமையாக இறுதி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று அந்த மரண சாசனத்தில் குறிப்பிட்டு இருந்தார்.’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடடிருந்தேம்.

6.8.1997 மதியம் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உடல்நலம் விசாரித்து வந்ததும் குறிப்பிட்டிருந்தது.

தருமபுரியிலிருந்து தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். சென்னை ஓட்டேரி இடுகாட்டில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில்  திராவிடர் கழகத் தலைமை நிலையத்தின் சார்பில் உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மலர் மாலைவைத்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

பட்டுக்கோட்டையில் பகுத்தறிவுப் பிரச்சாரப் பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் 9.8.1997 அன்று பிரமாண்டமான அளவில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் நாவலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் இருந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் துவங்கியது. இதனை நாவலருடன் வேனில் அமர்ந்தபடியே ஊர்வலமாக வந்தத் தோழர்களுக்கு கை அசைத்து உற்சாகப்படுத்தினோம். கட்டுப்-பாட்டுடன் மிக நீண்ட வரிசையில் தோழர்கள் செல்வதைக் கண்டு நாவலர் வியந்தார்.

பொதுக்கூட்டத்தில் நாவலரின் ‘திராவிடர் இயக்க வரலாறு’ நூலை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினேன். இறுதியாக அ.தி.மு.க அவைத் தலைவர் டாக்டர் நாவலர் அவர்கள் உரையாற்றுகையில், “நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. பகுத்தறிவுக் கருத்துகளையே பேச வந்திருக்கிறேன். தமிழன் ஜாதி, மத, மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகக் கூடாது’’ என்பதை விளக்கி நீண்ட பெரும் உரையொன்றை நிகழ்த்தினார்.  பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி காலத்திலிருந்து எப்படி பகுத்தறிவுக் கோட்டையாகத் திகழ்ந்ததோ அதே உணர்வை மீண்டும் பிரதிபலித்ததை கழகத்தினர் நடத்திய அந்த மாநாட்டில் காண முடிந்தது. கழகப் பொறுப்பாளர்களின் சிறப்பான ஏற்பாட்டினைப் பாராட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன்.

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நகர குடும்ப நல மய்யம் மற்றும் பெரியார்-_மணியம்மை இலவச மருத்துவமனையில் பணிபுரியும் ஜி.குணசேகரன் அவர்களது தாயார் கிளியம்மாள் உடல்நலக் குறைவினால் 12.8.1997 அன்று மறைவுற்றார் என செய்தி அறிந்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தந்தி மூலம் இரங்கல் செய்தி அனுப்பினேன். இறுதி ஊர்வலத்தில் கழகப் பொறுப்பாளர்களும், பெரியார் நகர குடும்ப நல மய்யத்தைச் சார்ந்த ஊழியர்களும், ‘விடுதலை’ செய்திப் பிரிவு மற்றும் அனைத்துப் பிரிவு ஊழியர்களும கலந்து கொண்டனர்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *