முகப்புக் கட்டுரை : ஆக்கிரமிப்புகளை அகற்றலும் தேக்கமில்லா வடிகாலும் உடனடித் தேவை!

நவம்பர் 16-30,2021

மஞ்சை வசந்தன்

மழை என்பது மகிழ வேண்டிய ஒன்று. ஆனால், ஊழல் ஆட்சியாளர்களின் முறை-கேட்டால், ஆக்கிரமிப்பால், வடிகால்கள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் எல்லாம் தூர்ந்துபோய், மண் நிரப்பப்பட்டு பாழாக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவுதான், மழை பெய்தாலே சாலைகளில் நீர் தேங்கி வீடுகளுக்குள் நுழையும் அவலம். தேங்கிய நீர் வடிய வாய்ப்பில்லாமல், எல்லா கழிவுகளும் அதில் கலக்க நோய்த் தொற்று, தண்ணீர் மாசு என்று பல்வேறு பக்க விளைவுகள். நான்கைந்து நாள்கள்கூட இந்நிலை நீடிப்பதால் மக்கள் அடையும் தொல்லைகள் ஏராளம். உணவு, மருந்து, இருப்பிடம் இன்றி அடையும் அவலம். இந்த சீர்கேட்டின் உச்சம்தான் 2015ஆம் ஆண்டு பெரும் வெள்ளம். அதன்பின் மழை என்றாலே அச்சப்படுகின்ற ஒன்றாக ஆகிவிட்டது.
2015ஆம் ஆண்டு பெருவெள்ளம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செய்த தப்பால், ஊழலால், முறைகேட்டால், பொறுப்பற்ற செயல்பாடுகளால் வந்தது. ஏரியின் முழு கொள்ளளவு நிரம்பாத நிலையிலே நீரைத் திறந்து விட்டு மக்களை, உடைமைகளை அழித்தனர். வணிகர்கள், பொதுமக்கள் என்று  எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பும், இன்னல்களும் ஏராளம்! ஏராளம்! சென்னை மாநகரம், புறநகர்ப் பகுதிகள் என்று எல்லா இடங்களும் பாதிக்கப்பட்டு மக்கள் அடைந்த தொல்லை, இழப்புக்கு அளவில்லை. உயிரிழப்புகளின் உண்மையான கணக்குக் கூட இன்றுவரை இல்லை.
இவ்வளவு பெரிய பாதிப்புக்குப் பிறகும்கூட பாடம் கற்காத அ.தி.மு.க. அரசு வடிகால் அமைப்பதிலும், ஆக்கிரமிப்புகளை அகற்று-வதிலும் அக்கறை காட்டவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிப்பதிலே முனைப்புக் காட்டியது.

வெள்ளத்தால் வெளிவந்த ஊழல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், “கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெற்ற நிதியை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் உள்ளாட்சியில் கடந்த ஆட்சியில் எந்தப் பணிகளும் நடக்கவே இல்லை. கமிஷன் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி கொள்ளையடித்திருக்கிறார்கள். இதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
தி.நகர் மூழ்கியதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சியின் பொறியாளர்கள் கூறுகையில், “தி.நகரின் வழியாக மாம்பலம் கால்வாய் ஓடுகிறது. அதாவது, இந்தக் கால்வாய் வள்ளுவர் கோட்டத்திலிருந்து மாம்பலம், தி.நகர் பாண்டிபஜார், சி.அய்.டி. நகர், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., சைதாப்பேட்டை வழியாக அடையாறை அடைகிறது. கிட்டத்தட்ட இதன் நீளம் 6 கிலோ மீட்டர். இந்தப் பகுதியில் பொழியும் மழை நீர் மற்றும் கால்வாயில் வரும் வெள்ளம் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாமல் மாம்பலம் கால்வாய் அமைந்திருந்தது. இதனால் பெரும்பாலும் தி.நகர் பகுதி வெள்ளப் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடும்.
இந்த முறை தப்பிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், பாண்டி பஜாரில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான். திட்டத்தினை செயல்படுத்தியபோது அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளையும் (கான்க்ரீட் துண்டுகள்), தேவையற்ற பொருள்களையும் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்திவிட வேண்டும். அப்படி எடுத்துச் செல்வதால் திட்டத்தின் காண்ட்ராக்டருக்கு அதிகச் செலவாகும். இதனால் மாம்பலம் கால்வாயிலேயே கழிவுகளைக் கொட்டி விட்டனர். இதனால் மாம்பலம் கால்வாய் ஏகத்துக்கும் அடைத்து-விட்டது. மழை நீரும் வெள்ளமும் மாம்பலம் கால்வாயில் செல்லாமல் அடைக்கப்பட்டதால் ஆங்காங்கே வெளியேறி தி.நகரின் முக்கிய பகுதிகளிலெல்லாம் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இதனைக் கண்டறிந்து அந்தக் கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டதால் தி.நகர் தப்பித்தது’’ என்று விவரிக்கின்றனர்.
மாநகராட்சியின் ஊழல்களை தொடர்ச்சி-யாக அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் 330 மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டினார்கள். இதற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி பயன்படுத்தப்பட்டது. திட்டத்தின் நிதியைப் பயன்படுத்தி ஊழல் செய்வதற்காகவே நல்லாயிருந்த கால்வாய்-களெல்லாம் உடைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டன. இதற்கான டெண்டர்களும் செட்டிங்தான். இதுகுறித்த ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தந்திருக்கிறோம். விசாரணையில் இருக்கு. அந்த ஊழலில் சூத்திரதாரி எஸ்.பி.வேலுமணிதான்.

ஸ்மார்ட் சிட்டின்னாலே ஏரியாவை அழகுபடுத்தறோம்னு நினைச்சிக்கிறாங்க. அது மட்டும் கிடையாது. முக்கியமாக, நீர்நிலைகளின் முழு கொள்ளளவையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். ஆனால், இதை இவர்கள் கவனத்தில் கொள்வதேயில்லை. வில்லிவாக்கம் ஏரியின் மொத்த பரப்பளவு 214 ஏக்கர். இது ஆக்கிரமிக்கப்பட்டு இப்போது வெறும் 39 ஏக்கர் மட்டும்தான் இருக்கு. இதையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கொண்டு வந்தனர். இதன் ஊழல்களைத் தடுப்பதற்காக 39 ஏக்கரையும் மீட்டெடுக்க வேண்டும் என கோர்ட்டுக்குப் போனோம். 27 ஏக்கரை மீட்க உத்தரவிடப்பட்டது. மீதியுள்ள 12 ஏக்கரை எப்படி மீட்கப் போகிறீர்கள் என மாநகராட்சியிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம்.
மீட்டெடுக்க உத்தரவிடப்பட்ட 27 ஏக்கரில் 15 ஏக்கரை மீட்டிடுவோம். மீதமுள்ள 12 ஏக்கரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தீம் பார்க் கட்டப் போகிறோம்னு மாநகராட்சி சொல்லுது. ஏரியில் எதற்கு தீம் பார்க் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் ஸ்டே வாங்கி, விசாரணை நிலுவையில் இருக்கு. கார்ப்பரேசன் அதிகாரிகள் நினைத்தால் ஓரிரு நாளில் 39 ஏக்கரையும் மீட்டெடுக்க முடியும். ஆனா, அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. ஒவ்வொரு விசயத்துக்கும் கோர்ட்டுக்குப் போய் போராடித்தான் ஊழல்களைத் தடுத்து நிறுத்த முடிகிறது.
தி.நகர் மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதுமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. அனைத்து ஸ்மார்ட் சிட்டியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்’’ என்கிறார் ஆவேசமாக.
மாநகராட்சியின் அதிகாரிகள் கூறும்போது, “தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்-படுகின்றன. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். இதில், மின்னணு, மொபைல் ஆப்ஸ் உள்ளிட்ட டெண்டர்களுக்காக 149 கோடி ரூபாயும், நவீன வசதிகளுடன் திறன்மிகு நடைபாதை வளாகம், சாலைகள் உள்ளிட்டவைகளை அமைக்க
51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப்ஸ் டெண்டரை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்களில் ஒன்றான குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்குக் கொடுத்தனர். அந்தக் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டிகள் அமைத்த எந்த முன் அனுபவமும்  இல்லை. இயந்திரங்கள் தயாரிப்பது மட்டுமே அந்தக் கம்பெனியின் முக்கிய தொழில்.
இதுதவிர, தி.நகரின் போக் சாலை முதல் அண்ணாசாலை வரை 564 மீட்டர், பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகாசலம் சாலை துவங்கி போக் சாலை வரை 380 மீட்டர் என திறன்மிகு நடைபாதை வளாகம் 39.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதேபோல, 19.11 கோடி ரூபாய் மதிப்பில் 23 இடங்களில் சாலைகள் போடப்பட்டன. நடைபாதை வளாகம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான தி.நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யாவிடம் கொடுக்கப்பட்டது. அவரும் தனது காண்ட்ராக்ட் நண்பர்களுக்கு இந்தப் பணிகளைப் பிரித்துக் கொடுத்தார்.

ஸ்மார்ட் சிட்டி கொள்ளை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 200 கோடி ரூபாயில் 45 சதவிகிதம் கமிஷனாகவே சென்றிருக்கிறது. இந்தக் கமிஷன் தொகையை எடப்பாடி, வேலுமணி, தி.நகர் சத்யா ஆகிய மூவர் கூட்டணி பிரித்துக் கொண்டது. தி.நகர் ஸ்மார்ட் சிட்டியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் முக்கிய 10 நகரங்களில் அமைக்கப்பட்ட அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் இதே அளவிலான ஊழல்கள் நடந்துள்ளன. அந்த வகையில் 2000 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் 45 சதவிகிதம் கமிஷன் தொகை மட்டுமே என கணக்கிட்டால் 900 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பும் இருப்பதால், அனைத்து ஸ்மார்ட் சிட்டிகளையும் சி.பி.அய். விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’’ என்கிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆகிய மூவர் கூட்டணி சிக்கியிருக்கிறது. ஊழல்வாதிகளுக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளிடம் எதிரொலிக்கிறது.

உலக வங்கி அளித்த 1,000 கோடி ரூபாய் என்னவானது?

2015இல் சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, உலக வங்கி நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் நிதி வந்தது. அந்த டெண்டர் பணிகளைத் தனக்கு வேண்டிய ஒரு கொங்கு நிறுவனத்தின் பக்கம் மடைமாற்றிவிட்டார் வேலுமணி. வடிகால் அமைக்கும் பணிகளை கொங்கு நிறுவனம் முறையாகச் செய்யவில்லை. சென்னை கூவம் ஆற்றிலிருந்து கிளை ஆறுகளாக மாம்பலம்  கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் எனச் சில கால்வாய்கள் நகருக்குள் செல்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக தி.நகர் வழியாகச் செல்லும் மாம்பலம் கால்வாயைத் தூர்வாருவதற்காகத் தனியாக 80 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. அதையும் சரியாகத் தூர் வாரவில்லை. மழை நீர் தேங்கி நிற்பதற்கு இதுவும் ஒரு காரணம்’’ என்றார் அந்த அய்.ஏ.எஸ். அதிகாரி.
சென்னையில் பாதாளச் சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் என இரு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்கும் முன்பே இந்த வடிகால் அமைப்புகளைத் தூய்மை செய்யும் பணிகளை மாநகராட்சி கையில் எடுக்கும். ஆனால், இந்த முறை மாநகராட்சியிலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் இந்தத் திட்டத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை என்கிறார்கள். இதனால், கால்வாய்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. முதல்வரின் கொளத்தூர் தொகுதி தண்ணீரில் மிதப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறது மாநகராட்சி வட்டாரம்.

300 கோடி ரூபாய் என்ன ஆனது?

சென்னை மாநகராட்சியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “2018ஆம் ஆண்டு ‘மிஸ்ஸிங் லிங்க்ஸ் ஸ்டார்ம் வாட்டர் டிரெய்னேஜ்’ என்கிற திட்டத்தைக் கொண்டு வந்தனர். இணைக்கப்படாத வடிகால்களை இணைப்பதுதான் அதன் நோக்கம். ஆனால், அதையும் சரியாக மேற்கொள்ளவில்லை. ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, நன்றாக இருந்த சில மழைநீர் வடிகால்களையும் உடைத்து, மீண்டும் கட்டினார்கள். இந்தத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில் பாதியளவுகூடச் செலவாகவில்லை. இதிலும் வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்களே விளையாடியுள்ளன.

கோவையிலும் கொள்ளை?

ஸ்மார்ட் சிட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் 20 நகரங்களில் கோவையும் அடக்கம். இது தொடர்பாகச் சில தரவுகளைச் சேகரித்திருக்கும் வழக்கறிஞர் லோகநாதன், “ஸ்மார்ட் சிட்டி நிருவாகக் குழுவில்,நகராட்சி நிருவாக ஆணையர் தலைவராகவும், மாநகராட்சி ஆணையர் நிருவாக இயக்குநராகவும் இருக்க வேண்டும், துணை ஆணையருக்கு அங்கு வேலையே இல்லை. ஆனால், கோவை ஸ்மார்ட் சிட்டி நிருவாகக் குழுவில் துணை ஆணையர் இருக்கிறார். நிருவாகக் குழுவிலுள்ள 13 பதவிகளில் ஒன்பது மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. வால்பாறையில் இருக்கும் பிரபல தொழிலதிபரின் மருமகனையும், வேலுமணி குடும்பத்துக்கு வேண்டப்பட்ட ஒருவரையும் சுயாதீன இயக்குநராக்கியுள்ளனர். பிரச்சினைகள் தொடர்ந்ததால், கடந்த ஆண்டு ராஜ்குமார் என்ற அய்.ஆர்.எஸ் அதிகாரியை சி.இ.ஓ.வாக நியமித்தனர். தற்போதுவரை மத்திய அரசு ரூ.391 கோடியும், மாநில அரசு ரூ.400 கோடியும் இந்தத் திட்டத்துக்காகக் கொடுத்துள்ளன. அவற்றில் 640 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்ததற்கான சுவடே இல்லை’’ என்றார்  என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

5000 கோடி ஊழல்!

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி  பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நகர்ப்புற வளர்ச்சிக்கு என ஆசிய வளர்ச்சி வங்கியில் 2,400 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கடன் பெற்றது. இவையின்றி, ஸ்மார்ட் சிட்டிக்கான நிதி, பொதுவான மாநில அரசு நிதி, மாநகராட்சி நிதி என 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் 40 சதவிகிதத் தொகை, ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் கமிஷனாக வேலுமணி பாக்கெட்டுக்குச் சென்றிருக்கிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்-படுத்தாமல், தனக்கும் தனது உறவுகளுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை மட்டுமே வேலுமணி செயல்படுத்தினார். வேலுமணி மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தவறிழைத்த ஒப்பந்ததாரர்-களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அர்ப்பணிப்புப் பணிகள்

சென்னை மாநகரம் இதுவரை சந்தித்திராத பெருமழைப் பொழிவு. ஒரே இரவில் சென்னையே மிதந்தது! எங்கெங்கும் வெள்ளம். மழை தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது. வழக்கத்தைப் போல இரு மடங்கு மழை. நவம்பர் 6 முதல் ஒரு வாரத்தில் 8 மடங்கு மழை. 10ஆண்டுகால அ.தி.மு.க. அரசின் முறைகேட்டால், நிருவாகச் சீர்கேட்டால், சுயநலக் கொள்ளையால் வடிகால் வசதி அறவே கெட்டுப்போய் பெய்த மழை முழுவதும் வடிய வழியில்லாமல் அப்படியே தேங்கி நின்றது.
என்ன செய்வது என்று எல்லோரும் திகைத்து நின்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் உடல் நலனை, வயதைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் இறங்கி ஒவ்வொரு பகுதியாகப் பார்வையிட்டு நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆறுநாள்கள் கொட்டும் மழையில் முழங்கால் வெள்ளத்தில் முற்பகல், பிற்பகல் இரு வேளையும் நடந்தே சென்று பணிகளை மேற்கொண்டார். உணவற்றோருக்கு தடையின்றி உணவு கிடைக்க ஏற்பாடு செய்தார். இவரே நேரடியாக உணவுகளை உண்டு பார்த்து வழங்கினார். எந்த முதல்வரும் இப்படி அர்ப்பணிப்போடு வெள்ள நிவாரணம் மேற்கொண்டதில்லை என்று உலக ஊடகங்கள் எல்லாம் பாராட்டின. ஆளுநர் ஆச்சரியத்துடன் பாராட்டினார்.

ஒரே நாளில் தீர்வு:

சுரங்கப் பாதைகளில் தேங்கிய பெருமளவு நீரைக் கூட ஒரே நாளில் அகற்றிக் காட்டினார்! எடுத்துக்காட்டாக தியாகராய நகர் அரங்கநாதன் சுரங்கப் பாதைக் காட்சிகளை அருகிலுள்ள படத்தைப் பார்த்தால் அறியலாம்.
அங்கு மட்டுமல்ல; வெள்ளம் பாதித்த அனைத்து இடங்களிலும் விரைந்து செயல்பட்டு தேங்கிய நீரை அகற்றி, நிவாரணப் பணிகளைச் செய்தார். சென்னையில் ஒரு வாரப் பணி முடிந்ததும், ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் தஞ்சை மாவட்ட வேளாண் பாதிப்புகளைக் காண அங்குச் சென்றார்.

நிரந்தரத் தீர்வுக்கு அரசு உடனே செய்ய வேண்டியவை

வெள்ள நீர் அகற்றுவதிலும், உணவு, மருத்துவம், மாற்றிடம் வழங்குவதிலும் முதல்வரின் செயல்பாடுகளும் அரசின் செயல்பாடுகளும் உலகமே பாராட்டும் வகையில் சிறப்பாக அமைந்தன. அதற்குச் சிகரம் வைத்தாற்போல்  உயர்நீதிமன்றம் அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
என்றாலும், கடந்த ஆட்சியின் அவலத்தால் நிகழ்ந்த இந்தக் கசப்பான அனுபவங்கள் இறுதியாக இருக்கும்படி அரசு இனி செயல்பட வேண்டியது கட்டாயமாகும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்:

நீர்நிலை, வடிகால் பாதை, ஆறுகள் போன்றவற்றில் எந்த ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவற்றை உடனே அகற்ற வேண்டும். நீதிமன்றம் நிச்சயமாகத் தடையாக இருக்காது. மக்களும் தங்கள் முழு ஆதரவை அளிப்பர்.

ஆலோசனைக் குழு

ஆலோசனைக்குழு கூறுவதை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். சென்னைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இப்பணி உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

வல்லுநர் கொண்ட கண்காணிப்புக் குழு

நீர் மேலாண்மையில் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பொறியாளர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட வாரியாக அமைத்து பணிகள் சரியாக, முறைகேடில்லாமல், தரமாக நடைபெறுகிறதா என்று கண்காணித்து, விரைந்து முடிக்க ஆவன செய்ய வேண்டும்.

புதிய நீர்த்தேகங்கள்

மழைநீர் கடலில் சென்று வீணாகாமல், ஆங்காங்கே நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் சீர் செய்யப்பட்டும், புதிதாய்  உருவாக்கியும் மழை நீரைச் சேகரிக்க வேண்டும். தடுப்பணைகள் தேவைப்படும் இடங்களில் கட்டப்பட வேண்டும்.

நிலத்தடி நீர் சேமிப்பு

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தெருவிலும் மழை நீரைப் பூமிக்குள் கொண்டு செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். கடல் நீரை குடிநீராக்கச் செய்யும் செலவுத் தொகையை நீர்த்தேக்கங்களுக்கும், நீர் சேமிப்புக்கும் செலவிட்டாலே போதும். கடல்நீர் குடிநீராக்கும் திட்டமே தேவை-யில்லாமல் போகும்.

ஊழல் செய்தோர் மீது கடும் நடவடிக்கை

ஸ்மார்ட் சிட்டி, வடிகால், தூர்வாரல், தடுப்பணை போன்றவற்றில் நடந்த ஊழல்-களை, முறைகேடுகளைக் கண்டறிந்து காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, அவர்கள் சொத்துகளைக் கைப்பற்றி இப்பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தொண்டுப் பணிகளை ஊக்குவிக்க வேண்டும்

தன்னார்வலர்களாகக் களத்தில் இறங்கி இரவு பகல் பாராது பணியாற்றுகின்றவர்-களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வட்டம் தோறும் இதுபோன்ற தொண்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தமிழர் தலைவர் அறிக்கை

“இயற்கைச் சீற்றத்தால் – மேலும் பெருமழை, புயல், வெள்ளம் இத்தகைய சூழலில், மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் மக்கள் துயர் துடைக்க ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைக்க முன்வரவேண்டும்.
‘தர்மம்‘ வீட்டிலிருந்தே (நம்மிலிருந்தே) தொடங்க வேண்டும் (Charity begins at home) என்பது ஆங்கிலப் பழமொழி.

மக்கள் துயர் துடைக்க – திராவிடர் கழகத் தோழர்களே, களப்பணியில் இறங்குங்கள்!

எனவே, திராவிடர் கழகத் தோழர்கள், குடும்பத்தினர் தொண்டுள்ளத்தோடு, களப் பணியில் இறங்கி மக்கள் துயர் துடைக்க அரசுடன் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து _- நம்மால் முடிந்த அளவு நிவாரண உதவிகள் _ பாதிக்கப்பட்டோருக்கு உணவு, தற்காலிக உறைவிடம், பாய், போர்வை, உடை போன்றவை வழங்கி -தொண்டற சமூக நலத் தொண்டர்களாக உழைப்பை காலதாமதம் செய்யாமல் உடனடியாகத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தொண்டறப் பணியை மேற்கொள்ளுங்கள்!’’ என்று ஆசிரியர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்களின் பொறுப்புணர்வு

பொதுமக்களும் நிலத்தடி நீர் சேமிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டுக் கழிவுகளை வடிகாலில் போடுதல், அடைத்தல் போன்றவற்றைச் செய்யாமல், கழிவுகளை உரிய இடத்தில் போட வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றில் இடம் பெறுவார்!

இப்பணிகளை எந்தத் தொய்வும் இன்றி முன்னுரிமை தந்து ஓராண்டு காலத்திற்குள் முதல்வர் முடித்துவிடுவாரேயானால், தமிழ்நாட்டின் வரலாற்றுச் சாதனையாக அது அமையும். மக்கள் முதல்வராக அவர் மாறுவார். ஆயுட்கால முதல்வராக அவரை மக்கள் ஏற்பர். இவை நடக்கும்! நிச்சயம் நடக்கும்! காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதால்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *