
ஊரடங்குக் காலத்தில் முடங்கிவிடாது, அந்தக் காலத்தில் புதிய துறையில் அறிவினை வளர்த்து, அதன் புதிய தொழில் முனைவோராக பல இளைஞர்கள் இன்று நமக்கு நம்பிக்கையைப் பாய்ச்சி வருகின்றனர். அந்த வகையில் சுயதொழிலில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை இளைஞர் ஜெகதீஷ் பால்ராஜ் தனது அனுபவத்தைக் கூறி, சுயதொழில் செய்ய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்:
ஆட்டுப்பால் சோப்
“யூ டியூப் சேனலில் பார்த்து தயாரிக்கத் தெரிந்து கொண்டேன். ஆடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூலிகையை தேடிப்பிடித்துச் சாப்பிடும் குணமுடையது என்பதும் தெரிய வந்ததால் ஆட்டுப்பாலில் சோப் தயாரிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். தோலுக்கு ஈரப்பதம் தரும் தேங்காய் எண்ணெய், உடல் சூட்டைத் தணிக்கும் ஆமணக்கு எண்ணெய், கிளிசரின், லை என்ற திரவம் மற்றும் ஆட்டுப்பால் சேர்த்து சோப்பு தயாரித்தேன்.
அதை எனது வீட்டைச் சுற்றியிருப்பவர்களிடம் கொடுத்தேன். சிறப்பான வரவேற்பு இருந்தது. அதற்கப்புறம் ஆட்டுப்பால் சோப் தயாரித்து விற்பனை செய்தேன். இப்போது ஆட்டுப்பால் சோப், ஆவாரம்பூ சோப், வேப்பிலை சோப், சிவப்பு சந்தன சோப் என இயற்கை சோப் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.
நறுமணத் திரவங்கள்
இதன் நறுமணம் துணியில் பரவும். கையில் எரிச்சல் இருக்காது. துவைத்த நீரை செடிகளுக்கும் ஊற்றலாம். வாஷிங் மெஷினிலும் இந்த இயற்கை சோப் ஆயிலைப் பயன்படுத்தலாம். இதைத் தவிர, பாத்திரங்களைத் துலக்க உதவும் ஆயில், தரையைத் தூய்மைப்படுத்தும் ஆயில், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்க உதவும் இயற்கை பினாயில், கழிப்பறைகளைத் தூய்மையாக்கும் திரவங்கள் என முற்றிலும் வித்தியாசமான தயாரிப்புகளையே செய்து வருகிறேன்.
ஊக்கமும் ஆக்கமும்
இந்தத் தொழிலைத் தொடங்க முதலில் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மய்யத்தை அணுகினேன். அவர்கள் உதவியினால் வங்கிக் கடன் கிடைத்தது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ.5 லட்சம் கடன் வாங்கினேன். கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியதால் ரூ.1.75 லட்சம் மானியமாகக் கிடைத்தது. எனது விற்பனை, செயல்பாடுகள், அணுகுமுறை நேர்மை ஆகியவற்றால், இந்தியன் வங்கியில் குறைந்த வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் கிடைத்தது.
சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு நான் சொல்லுவது இதுதான்: “வித்தியாசமாகச் சிந்தியுங்கள்; வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்; நேர்மையாக இருங்கள்; கடினமாக உழையுங்கள். வெற்றி நிச்சயம்.”
(ச.குமார்)
Leave a Reply